குமுதம் – அரசு பதில்களில்…
ஜூன் 17, 2020 தேதியிட்ட குமுதத்தில், குட்டி யானை தன் அம்மாவுடன் பேசுவதைப் போல எழுதியிருந்த என் கட்டுரை அரசு பதில்கள் பகுதியில் ஒரு கேள்விக்கு பதிலாக வெளியாகி உள்ளது.
ஜூன் 4, 2020, கடந்த வியாழன் அன்று ‘ஹலோ வித் காம்கேர்’ தொடர் பதிவில் நான் எழுதி இருந்த ‘பசிக்கிறது என்று சொன்னது ஒரு குற்றமா?’ என்ற கட்டுரையை படித்துவிட்டு அதை குமுதம் இதழில் பயன்படுத்திக்கொள்கிறேன் என என்னிடம் அனுமதி பெற்று வெளியிட்ட குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் அவர்களின் ஊடகதர்மத்துக்கு Hats off. வியக்கிறேன். நன்றி.
குமுதம் அரசு பதில்களில் கேட்கப்பட்ட கேள்வி:
சமீபத்தில் உம் மனதைக் கலங்கடித்த விஷயம்?
இதற்கு அரசு அளித்த பதில்:
கேரளாவில், உணவு தேடி வந்த கர்ப்பிணி யானையை அன்னாசிப் பழத்துக்குள் வெடி வைத்துக் கொலை செய்த சம்பவம்தான். அதேபோன்ற அன்னாசிப்பழத்தை அந்த கொலைகாரனுக்கு…
இதுபற்றி, அந்த யானையும் அதன் வயிற்றில் இருந்த சிசுவும் பேசுவதாக வதனப் புத்தகத்தில் காம்கேர் கே. புவனேஸ்வரி எழுதிய இந்தப் பதிவும் மனதைக் கனக்க வைக்கிறது.
கேள்வி: பசிக்கிறது என்று சொன்னது ஒரு குற்றமா?
இப்போது எனக்குப் பசிக்கிறது.
என்னவோ தெரியலை. வழக்கமாக இந்த நேரத்துக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்துவிடும் அம்மா இன்று சாப்பாடே தரவில்லை. ‘பசி வயிற்றைக் கொல்கிறது. ஏதேனும் சாப்பிடக் கொடும்மா’ கெஞ்சிப் பார்த்துவிட்டேன். ம்ஹூம், அவள் கேட்பதாக இல்லை. எங்கேயோ வேக வேகமாக நடக்கிறாளே தவிர சாப்பாடு கொடுப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
இப்போது எனக்கு அழுகை முட்டுகிறது.
அவள் வயிற்றை எட்டி எட்டி உதைத்தும் பார்த்துவிட்டேன். அவளுக்கு என் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. சாப்பிட எதுவுமே தரவில்லை. பசி மயக்கத்தில் நன்றாக தூங்கி விட்டேன்.
இப்போது எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
திடீரென வெடி சப்தம். தீபாவளி அன்றுதானே வெடி வெடிப்பார்கள் என்று ஒருநாள் அம்மா என்னிடம் மனிதர்களைப் பற்றிப் பேசும்போது சொல்லி இருக்கிறாள். அப்படியானால் இன்று தீபாவளியா?
இப்போது எனக்கு பயமாக இருந்தது.
மனிதர்கள் வெடிவெடித்தால் ஏன் அம்மா இப்படி ஓடுகிறாள். அவளுக்கு வெடி என்றால் பயம் என்று சொல்லவே இல்லையே. அம்மா, ஓடாதே. என்னால் படுக்கவோ, உட்காரவோ முடியலை. உன் வயிற்றில் பந்துபோல அங்கும் இங்கும் இடிபடுகிறேன். உன் வயிறு பஞ்சுபோலதான் இருக்கிறது. ஆனாலும் என்னால் முடியவில்லை. பயமாக இருக்கிறது. ஓடாதே அம்மா. நில். நில். கத்துகிறேன். கதறுகிறேன். ஆனால் அம்மாவுக்கு என்ன ஆச்சு இன்றைக்கு எனத் தெரியவில்லை. சாப்பாடும் கொடுக்காமல் அழும் எனக்கு ஆதரவும் கொடுக்காமல் இப்படி படுத்துகிறாள்.
இப்போது நான் சாப்பாட்டின் சுவையை உணர்கிறேன்.
இப்போது ஏதோ ஒரு பழ வாசனை வந்தது. அன்னாசிப் பழ வாசனையோ. சரியாகத் தெரியவில்லை. ஒரு முறை மட்டுமே அன்னாசியை சுவைத்திருக்கிறேன். ஆஹா சாப்பாடு கொடுக்கப் போகிறாள் என நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருந்தேன். ஆனால் சாப்பாடு வரவில்லை. என் உடல் அங்கும் இங்கும் இடிபட்டு ஆடத் தொடங்கியது. ஏற்கெனவே எதுவும் சாப்பிடாத வயிறு. இப்போது ஆட்டம் வேறு. குமட்டிக்கொண்டு வந்தது.
இப்போது ரத்த வாடை வருகிறது.
சற்று நேரத்தில் வெடி மருந்தின் நாற்றமும் ரத்த வாடையும் வந்தது. அம்மவுக்கு என்ன கோபம் என் மீது என எனக்கு சத்தியமாகத் தெரியவில்லை. சாப்பாடு கொடுக்காமல், என்னை அவள் வயிற்றில் அங்கும் இங்கும் மோதச் செய்து பயம் காட்டி, வெடிமருந்தின் நாற்றம் மூச்சை முட்டும் அளவுக்கு பழத்துடன் கலந்து என்னவோ செய்கிறாள். என்னென்னவோ செய்து படுத்துகிறாள். நாம் எல்லாம் சுத்த சைவம் என்று அம்மா அடிக்கடி சொல்லி இருக்கிறாளே. இப்போது ரத்தத்தை சுவைத்திருக்கிறாளே. என்ன ஆயிற்று அம்மாவுக்கு. என்னைக் குழப்புகிறாளே.
இப்போது நான் குளுமையை உணர்கிறேன்.
என்ன இது. இவ்வளவு குளுமையாக இருக்கிறது. ஆற்றில் குளிக்க வந்துள்ளாயா அம்மா. நேற்றும் இதுபோல குளுமையாக உணர்ந்தபோது ‘ஏன் இத்தனை குளிர்ச்சி’ என்று உன்னிடம் கேட்டேன். குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்திருப்பதாகச் சொன்னாய். இப்போது என்ன குளியலுக்கு அவசரம். எனக்குப் பசிக்கிறது. சாப்பிடக் கொடுக்காமல் குளிக்க வந்துள்ளாயே. என்னம்மா ஆச்சு உனக்கு.
இப்போது ஜூரம் வந்ததை உணர்கிறேன்.
அம்மா அமைதியாக நின்றுவிட்டாள். ஆற்றின் ஆழத்துக்கு வந்து நின்றுகொண்டிருக்கிறாள் என நினைக்கிறேன். குளுமை. குளுமை. அப்படி ஒரு குளுமை. எனக்குக் குளிரில் நடுக்கம் ஆரம்பிக்கிறது. ஜூரம் வருவதைப் போல இருந்தது. ஒரு முறை இப்படித்தான் அம்மாவுக்கு உடல் முடியாமல் போனபோது காட்டில் படுத்தே கிடந்தாள். எனக்கும் அம்மாவின் ஜூரம் பற்றிக்கொண்டது. இப்போது நடுங்குவதைப் போலவே நடுங்கினேன். அப்போது அம்மா ஆறுதல் சொன்னாள். நடுக்கம் குறைந்தது. ஆனால் இப்போது அதைவிட அதிகமாக நடுங்குகிறேன். ஆனால் அம்மா எதுவுமே சொல்லவில்லை.
இப்போது பேரமைதியாக உணர்கிறேன்.
அம்மா, மூச்சு முட்டுகிறது. மூச்சு நின்றுவிடும் போல இருக்கிறதே அம்மா. பசிக்கிறது என இனி நான் உன்னை படுத்த மாட்டேன். கதை சொல் என தொந்திரவு செய்ய மாட்டேன். உன்னுடன் சண்டை போட மாட்டேன். ப்ளீஸ். என்னை மூச்சுவிடுவதற்கு அனுமதி அம்மா. கத்துகிறேன். கதறுக்கிறேன்.
இப்போது அம்மா பேசுகிறாள்.
குழந்தாய், நானே மூச்சு விட முடியாமல்தான் தண்ணீருக்குள் வந்து நின்று கொண்டிருக்கிறேன். இந்த பூமி நாமும் வாழ்வதற்காகத்தான் என நினைத்திருந்தேன். ஆனால் மனிதர்கள் முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டார்கள் என்பதை சற்று முன்னர்தான் நானே தெரிந்துகொண்டேன். இந்த உலகம் நமக்கு வேண்டாம். வேறு உலகுக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன். அங்கு உனக்கு பசி இருக்காது, பயம் இருக்காது. பதட்டம் இருக்காது. அமைதி கிடைக்கும். பேரமைதியாக வாழலாம்.
அம்மா பேசிக்கொண்டே என்னை வேறொரு உலகுக்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறாள். இருவருமே மயக்க நிலையில் இருக்கிறோம். இன்னும் சில நொடிகளில் இறந்துவிடுவோம் என்று சொல்கிறாள் அம்மா. பயப்படாதே என்னை இறுக பற்றிக்கொள் என சொல்கிறாள். அவள் வயிற்றை இறுக்கமாக பற்றிக்கொள்கிறேன்.
நாங்கள் வேறொரு உலகுக்குப் பயணிக்கிறோம். டாட்டா பை பை!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும் என்று வாழ்த்த மனம் வரவில்லை.
குமுதம் பத்திரிகை வடிவிலேயே வாசிக்க: Kumudam Magazine 17.06.2020