ஹலோ With காம்கேர் -180: குறைக்கும், குறைபாட்டுக்கும் என்ன வேறுபாடு?  

ஹலோ with காம்கேர் – 180
June 28, 2020

கேள்வி:  குறைக்கும், குறைபாட்டுக்கும் என்ன வேறுபாடு?

நம் வாழ்க்கையை நாம் திரும்பிப் பார்த்தால் நிறைவாக உள்ள விஷயங்களுடன் தவறவிட்ட சில விஷயங்களும் நம் கண்முன் தோன்றும். அதை குறை என்று சொல்லிவிட முடியாது. குறைபாடு என்றும் ஒதுக்கிவிட முடியாது. இரண்டும் கலந்த இரண்டும்கெட்டான் நிலை அது.

குறை என்பதை பொதுவாக மனக்குறை என்று வைத்துக்கொள்ளலாம். நிறைவேறாத ஆசை, விருப்பம், குறிக்கோள் இவற்றால் உண்டாகும் ஏக்கம் நமக்கு குறையாக இருக்கலாம். ‘எனக்கு படித்த வேலை கிடைக்கவில்லை’, ‘நான் அழகாக இல்லை’, ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என எதிர்மறை சிந்தனை உள்ளவர்களைப் பார்த்து வீட்டுப் பெரியோர்கள் ‘குறைப்பட்டுக்கொண்டே இருக்காதே’ என்று கடிந்து கொள்வதைப் பார்த்திருப்போம்.

குறைபாடு என்பதை நம்முடைய செயல்திறனில், எண்ண ஓட்டத்தில் உள்ள தடங்கல்களைச் சொல்லலாம்.

முன்னது கழிவிரக்கத்தினால் ஏற்படுவது. பின்னது இயல்பாக நம் குணாதிசயங்களினால் பழக்க வழக்கங்களினால் உண்டாவது. முன்னதைவிட பின்னதை முயற்சி செய்தால் நிவர்த்தி செய்துகொள்ள முடியும்.

‘நான் நல்ல கலராக இல்லை’ என வருத்தப்படுவது குறை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் அவர்கள் கலராக இல்லை என வருத்தப்படுவதுதான் குறை. கலராக இல்லை என்பது குறை கிடையாது. அது இயற்கை. அவர்கள் குடும்பத்து ஜீன்.

எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் எத்தனை விலை உயர்ந்த க்ரீம் வாங்கிப் பூசிக்கொண்டாலும் அவர்கள் ஜீன் எப்படி மாறும். அடிப்படை கலரை எப்படி மாற்ற முடியும். நல்ல தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு நன்றாகப் படித்து நல்ல வேலையில் அமர்ந்து கம்பீரமாக தோற்றம் அளிக்கும் வகையில் நடை உடை பாவனையை மாற்றிக்கொள்ளலாம். அதுதான் சாத்தியம். அதுவே பேரழகு.

‘நான் மிகவும் கோபப்படுகிறேன். என் கோபத்தினால் நிறைய இழந்துள்ளேன். என் மனைவியை / கணவனை காயப்படுத்தி இருக்கிறேன், நண்பர்களை வார்த்தைகளால் குதறி இருக்கிறேன்’ என்று வருத்தப்படுபவர்களின் கோபப்படும் குணம் ‘குறை’ கிடையாது. அது அவர்களின் ‘குறைபாடு’. அதை சின்னச் சின்னப் பயிற்சியின் மூலம் முயற்சி செய்து நிவர்த்தி செய்துகொள்ள முடியும். அப்படி நிவர்த்தி செய்துகொள்ளாமல் திரும்பத் திரும்ப அதே தவறை பிறர் மீது கடத்திக்கொண்டிருப்பதுதான் இருப்பதிலேயே மிக குரூரமானது.

குறையை நிறையாக்கி நிறைவாக்கிக்கொள்வதும், குறைபாடுகளை களைந்து முழுமையாக்கிக் கொள்வதும் அவரவர் கைகளில்தான் உள்ளது.

சரி சரி விஷயத்துக்கு வருகிறேன்.

நம் ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் நிறை குறைகள் இருக்கும். அதுவே இயற்கை. சிலர் நிறையைக் கொண்டாடி மகிழ்வார்கள். பலருக்கு குறையைக் கொண்டாடுவதும் குறைப்பட்டுக்கொண்டு கழிவிரக்கத்தில் சோகமாக இருப்பதுவுமே கொண்டாட்டமாக இருக்கிறது. இப்படி கழிவிறக்கப்படுவதும் ஒரு குறைபாடே. அது மிக மோசமான உடல்நலக் கோளாறை உருவாக்கும்.

வாழ வேண்டிய காலத்தில் நம் குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டு, தம் இறுதிக் காலத்தில் அதை நினைத்து வருத்தப்படும் பலரை நான் சந்தித்திருக்கிறேன். காரணம் நேரம், சூழல் என எத்தனையோ காரணங்களை பட்டியலிடுவார்கள்.

எதற்குமே நிரந்த உத்திரவாதம் இல்லாத இன்றைய சூழலில் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழ்ந்து கடந்து செல்ல வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

மைனஸை ப்ளஸ் ஆக்குவது ரொம்ப சுலபம். ஒரு சிறிய குறுக்குக்கோட்டை மைனஸ் குறியீட்டில் இணைப்பதன் மூலம் மைனஸ் ப்ளஸ் ஆகிவிடும்தானே. போலவே, நம் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதும் ரொம்ப ரொம்ப சுலபம்.

ஆனால் என்ன, நம் குறைபாடு என்ன என்பதை நாம் எத்தனை சீக்கிரம் தெரிந்துகொள்ள முடியுமோ அத்தனை சீக்கிரம் தெரிந்துகொண்டுவிட வேண்டும். அப்போதுதான் நிவர்த்தி செய்வதும் சாத்தியம்.

தங்கள் வாழ்க்கையில் ‘இப்படி இருந்தேன் அதனால் சந்தோஷமாக இருந்தேன்’, ‘அப்படி செய்யாததால் இப்போது வருந்துகிறேன்’ என்று வயதிலும், அனுபவத்திலும் மூத்த பெரியோர்களின் அனுபவங்களை பதிவு செய்யும் நோக்கத்தில் புது கான்செப்ட் ஒன்றை வடிவமைத்து வருகிறேன். விரைவில் அது குறித்து அறிவிக்கிறேன்.

இது பலருக்கும் வழிகாட்டியாக அமையும் என நம்புகிறேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 27 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon