ஹலோ With காம்கேர் -185: கம்ப்யூட்டர் சயின்ஸை நாங்கள் படிக்கப் பட்டபாடு தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 185
July 3, 2020

கேள்வி:   கம்ப்யூட்டர் சயின்ஸை நாங்கள் படிக்கப் பட்டபாடு தெரியுமா?

திடீரென எதற்காக இந்த டாப்பிக்?

இரு தினங்களுக்கு முன்பு நான் பதிவிட்ட ஒரு பதிவில் ‘கம்ப்யூட்டர் துறை நம் நாட்டில் முழுமையாக பரவலாக அடி எடுத்து வைப்பதற்கு முன்பே சாஃப்ட்வேரில் புதுமைகளைப் புகுத்தி தமிழகமெங்கும் தொழில்நுட்பத்தை கொண்டு சென்றதில் காம்கேருக்கு பெரும்பங்கு உண்டு’ என்ற ஒரு வரியை எடுத்துவைத்துக்கொண்டு ‘இதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியாகத் தெரியவில்லையா. யாரோ ஒருவர் கற்றுக்கொடுத்ததால்தானே நீங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்க முடிந்தது’ என ஒரு ஃபேஸ்புக் நண்பர் பதிவிட்டிருந்தார்.

அவருக்கு மட்டும் தனியாக பதில் சொல்வதைவிட எல்லோருக்குமே பொதுவாக பதில் சொல்ல நினைத்தேன்.

இன்று அதிகம் படிக்காத, ஏன் பள்ளிக்கூடம் பக்கம் செல்லவே செல்லாதவர்கள்கூட தொழில்நுட்பத்தை கையிலுள்ள மொபைலில் மிக லாவகமாக கையாள்வதைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. அதுவும் இந்த கொரோனா காலத்து லாக் டவுன் நேரத்தில் நேரடியாக நடைபெறும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், பள்ளி கல்லூரிப் பாடங்கள், இரங்கல் கூட்டங்கள் அத்தனையும் ஆன்லைனில் நடப்பதைப் பார்க்கும்போது  ‘30 வருடங்களுக்கு’ முன்னர் கம்ப்யூட்டரைப் பார்த்து பயந்த நம் மக்களா தொழில்நுட்பத்தை இத்தனை சாதுர்யமாக பயன்படுத்துகிறார்கள் என வியக்க வைத்துடன் நான் கம்ப்யூட்டர் சயின்ஸை பாடமாக எடுத்துப்படித்தபோது பட்ட கஷ்டங்கள் நினைவுக்கு வந்தன.

பத்தாம் வகுப்பில் ஒரு ஆசிரியரின் (பெண்) காழ்ப்புணர்ச்சியினால் தமிழ் ஆங்கிலம் தவிர்த்து மற்ற மூன்று சப்ஜெக்ட்டுகளின் என்னுடைய விடைத்தாள்களில் கடைசி மூன்று பக்கங்கள் அடிக்கப்பட்டு மாநிலத்தில் முதலாவதாக வர முயற்சித்து உழைத்துப் படித்த என்னால் பள்ளியில் கூட முதலாவதாக வர இயலாத துர்பாக்கிய சூழல். அதன் பின்னர் என் பெற்றோர் எனக்காக கோர்ட், கேஸ் என சென்று முயற்சித்தும் எதுவும் பாசிட்டிவாக நடக்காததால் எனக்குள் ஏகப்பட்ட மன உளைச்சல்.

விளைவு பன்னிரெண்டாம் வகுப்பில் இன்ஜினியரிங்கோ மருத்துவமோ சேர்ந்து படிக்க இயலாத அளவுக்கு மதிப்பெண்.

ஆனாலும் என்னுடைய பெற்றோர் இருப்பதிலேயே லேட்டஸ்ட் கோர்ஸ் எடுத்துப் படித்தால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு இருக்கும் என்ற தொலை நோக்குப் பார்வையில் என்னை பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் சேர்த்தனர்.

கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கு அநேகமாக நாங்கள்தான் முதல் செட். அப்போதுதான் கல்வித்துறையில் முதன் முறையாக பாடதிட்டத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவெல்லாம் அப்போது கிடையவே கிடையாது என்பதால் நான் படித்தது இயற்பியல், வேதியியல், கணிதம் (Physics, Chemistry, Maths) சார்ந்த குரூப்.

கம்ப்யூட்டர் சயின்ஸில் ‘ஆனா, ஆவன்னாவே’ தெரியாததால் கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற்போல இருக்கும் வகுப்பறைகளும் பாடங்களும்.

என்னுடைய தாய்மொழி தமிழ். தமிழில் இலக்கண, இலக்கியங்களை ஓரளவுக்கு படித்துவிட்டு வந்திருப்பதால் தமிழ் பேராசிரியர் சொல்லிக்கொடுப்பது எனக்குப் புரிந்தது. அவர் அழகு மிளிர உதாரணங்களுடன் பாடம் எடுப்பதை ரசிக்க முடிந்தது.

போலவே ஆங்கிலமும். ஆங்கிலத்தை பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்திருப்பதாலும் அதன் இலக்கண இலக்கியங்களும் தெரியும் என்பதாலும் ஆங்கில பேராசிரியர் சொல்லிக்கொடுப்பது புரிந்தது. ரசிக்கவும் தெரிந்திருந்தது.

இப்போது கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பெடுத்த பேராசிரியர்கள் குறித்து சொல்ல இருக்கிறேன். அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பெடுத்த பேராசிரியர்கள் என்னை மன்னிக்கவும். நிதர்சனத்தை சொல்லும்போது அதன் வலி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

ஆனால் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்பது மாணவர்களாகிய எங்களுக்கு எப்படி புதிதோ அப்படித்தான் அன்று எங்களுக்கு வகுப்பெடுத்த பேராசிரியர்களுக்கும் புதிது. சப்ஜெக்ட் அவர்களுக்கும் புதிது என்பதால் முகத்தை கடுமையாக வைத்திருப்பார்கள். ஏனெனில் யாரும் அத்தனை சுலபமாக நெருங்கி சந்தேகங்களைக் கேட்டுவிடக் கூடாதல்லவா.  எங்களைவிட இரண்டு மூன்று வயதுகள்தான் பெரியவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் வேறு சப்ஜெக்ட்டை மேஜராக எடுத்துப் படித்துவிட்டு வந்திருப்பார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பு எடுப்பதற்காக பயிற்சி அளித்திருப்பார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பு என்பது கூடுதல் சுமை அவர்களுக்கு.

அவர்களுக்கே புரியாத லாஜிக்கை எங்களுக்கு எப்படி புரிய வைத்திருப்பார்கள் என்று யோசியுங்கள். பெரிய நீள் சதுர போர்ட் முழுவதும் புரோகிராம் எழுதிப் போடுவார்கள். அதை அவர்கள் எழுதி முடிப்பதற்கே கால் மணி நேரம் ஆகிவிடும். அதை புரிய வைக்க முயல மாட்டார்கள். அப்படியே நோட்டில் எழுதிக்கொள்ளச் சொல்வார்கள். நாங்கள் நோட்டில் எழுதுவதற்கு கால் மணி ஆகும். பிறகு அதை அப்படியே வரிவரியாக படிப்பார்கள். அதற்கு ஒரு கால் மணி நேரம். முடிந்தது ஒரு வகுப்பு.

இப்படித்தான் தியரி வகுப்புகள் சென்றுகொண்டிருந்தன.

இளங்கலையில் நாங்கள் படித்தது பேஸிக், கோபால், ஃபோர்ட்ரான், பேஸ்கல் என நான்கு கம்ப்யூட்டர் மொழிகள்தான். முதுகலையிலும் இதே மொழிகள் மேம்படுத்தப்பட்ட நுணுக்கங்களுடன். கூடவே கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் சம்மந்தப்பட்ட பாடதிட்டங்கள்.

கம்ப்யூட்டர் தியரி வகுப்புகள்தான் இப்படி என்றால் ப்ராக்டிகல் வகுப்புகள் மிலிட்டரி மிரட்டல்தான்.

மெதுவாக நடக்க வேண்டும்…

ரகசியமாக பேசுவதைப் போல பேச வேண்டும்…

பூ வைத்துக்கொண்டு வரக்கூடாது…

நோட்டு புத்தகங்களை கம்ப்யூட்டர் டேபிள் மீது வைத்துவிடக் கூடாது…

இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள்.

புரோகிராமை எழுதும்போது கீபோர்ட்டில் சப்தம் வந்துவிட்டால் போச்சு. ‘இப்படி ஏன் வேகமாக டைப் செய்கிறாய். கீபோர்ட் கீக்கள் உடைந்துவிடப் போகிறது’ என்று ஒரு பேராசிரியர். ஒரு புரோகிராமை நிறைய முறை இயக்கிப் பார்த்தால் ‘இப்படி நிறைய முறை டைப் செய்தால் கீபோர்டில் உள்ள எழுத்துகள் தேய்ந்துவிடும்’ என்று மற்றொரு பேராசிரியர். அவர்கள் என்ன செய்வார்கள். அவர்களுக்கும் கம்ப்யூட்டர் புதிதுதானே.

கம்ப்யூட்டரில் புரோகிராம் எழுதிவிட்டு இயக்கும்போது தவறுகள் காண்பிக்கும். அப்போது அடிவயிற்றில் பயம் சுருண்டுகொள்ளும் பாருங்கள். அந்த உணர்வை சொல்லிமாளாது. காரணம் பேராசிரியர்களின் அணுகுமுறை.

அதுவும் கோபால் போன்ற மொழிகளில் ஒரு புள்ளி, கமாவுக்கு ஆயிரம் பிழைச்சுட்டிக்காட்டும் தகவல்கள் வெளிப்படும்.

கண்களில் கோபம், அணுகுமுறையில் மிரட்டல், வார்த்தைகளில் வெறுப்பு இவற்றுடன் புயலாக எங்களை நோக்கி வருவார்கள். நாங்கள் எழுந்து கைகட்டிக்கொண்டு நிற்போம். அவர்களும் கம்ப்யூட்டரை உற்று உற்று பார்ப்பார்கள். நிறைய நேரம் எடுத்துக்கொண்ட பின்னரே அவர்களாலும் எங்கு பிழை என்று கண்டுபிடிக்க முடியும். ஏனெனில் அவர்களுக்கும் கம்ப்யூட்டரும் புதிது, தொழில்நுட்ப மொழிகளும் புதிது.

‘இனிமேல் பிழைகள் வந்தால் அவ்வளவுதான்’ என மிரட்டிவிட்டுச் செல்வார்கள். இன்டர்னல் மதிப்பெண், பிராக்டிகல் வகுப்பில் எங்கள் செயல்திறனைப் பொருத்தே கூடும் குறையும் என்பதால் ஒவ்வொரு பிராக்டிகல் வகுப்பையும் ஒரு யாகம் போலவே கடக்க வேண்டி இருந்தது.

நான் கல்லூரி முடித்து வெளியே வரும்வரை கம்ப்யூட்டர் மொழிகளில் எதற்காக புரோகிராம் எழுத வேண்டும், அவற்றின் நடைமுறை பயன்பாடுகள் என்ன என்பதெல்லாம் புரியாமலேயேதான் படித்தேன்.

சுருங்கச் சொன்னால் ‘புரியும்படி’ சொல்லிக்கொடுக்க கம்ப்யூட்டர் பேராசிரியர்கள் இல்லை என்பதுதான் உண்மை.

கம்ப்யூட்டர் செண்டர்கள் எல்லாம் அப்போது கிடையாது. அங்கு சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கும் வாய்ப்பில்லை.

நாமாக புரிந்துகொள்வதற்கும் நேரம் கிடையாது. அடுத்தடுத்து அசைன்மெண்ட், தேர்வுகள், செமினார் என்றிருக்கும். கம்ப்யூட்டர் புரோகிராம்கள் புரியாதபோது அவற்றைக்கூட மனப்பாடம் செய்யும் நிலையில்தான் அன்றைய கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் இருந்தோம்.

பிறகு எப்படி சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்க முடிந்தது, கம்ப்யூட்டரில் சாஃப்ட்வேரில் புதுமைகளைப் புகுத்தி தமிழகமெங்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்ல முடிந்தது, வெற்றிகரமாக 27 வருடங்களை கடக்க முடிந்தது?

கடுமையான உழைப்பு, அதீத அர்ப்பணிப்பு, வெறித்தனமான ஈடுபாடு இவை மட்டுமே என் வெற்றிகளை சாத்தியமாக்கின.

வரும் நாட்களில் அவை பற்றி பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 8 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari