ஹலோ With காம்கேர் -190: பிறரை சந்தோஷப்படுத்துவது அத்தனை சுலபமா?

ஹலோ with காம்கேர் – 190
July 8, 2020

கேள்வி: சின்ன விஷயங்களில் மகிழ்ச்சியடையவும், பெரிய விஷயங்களில் கோபப்படாமல் இருக்கவும் முடியுமா?

எப்போதுமே சீரியஸாகவே எழுதுகிறீர்களே, உங்களுக்கு நகைச்சுவையாக பேசத் தெரியுமா என்று ஒருசிலர் கேட்டிருக்கிறார்கள்.

நகைச்சுவை மன்றத்தில் எல்லாம் என்னை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை இந்த இடத்தில் சொல்லிக்கொள்கிறேன். நகைச்சுவை மன்றத்தில் பிற சிறப்பு விருந்தினர்களும், பேச்சாளர்களும் சிரித்து சிரித்து மற்றவர்களை சிரிக்க வைக்கப் பேசிக்கொண்டிருக்கும்போது நான் சிந்திக்க வைக்க சில நிமிடங்கள் பேசுவேன். அதுவே அந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாகவும் அமைந்தண்டு.

நாம் சாப்பிடும் சர்க்கரைப் பொங்கலில் மொத்த சர்க்கரைப் பொங்கலும் இனிப்பாக இருக்க நடுநடுவே கிடைக்கும் முந்திரியும், திராட்சையும் அதன் சுவையைக் கூட்டுவதைப் போல என் சீரியஸ்நெஸ் அமைவது நான் செய்த பெரும்பேறு. வேறென்ன சொல்ல?

பொதுவிலும், என் நிறுவனத்திலும் நகைச்சுவையாக இருப்பதற்கும் பேசுவதற்கும் வாய்ப்புகள் குறைவு. ஆனால் வீட்டுக்குள் நவரசம்தான். அதில் நகைச்சுவைக்கும் நிறையவே இடமுண்டு.

நேற்றுகூட ஒரு சம்பவம். சென்னை கார்ப்பரேஷனில் வீடுவீடாக நேரில்  வந்து வீட்டில் யாருக்கேனும் இருமல், காய்ச்சல் இருக்கிறதா என கேட்டு டயாப்படிக், ஹார்ட் பிரச்சனை உண்டா என விசாரித்துக் குறிப்பெடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.

நேற்று வந்திருந்த இளம் பெண் கிளவுஸ், முகக்கவசத்துடன் வந்திருந்தார்.  என் அப்பா அம்மாவிடம் அவர்கள் விவரங்களைக் கேட்டபின் என்னிடம் பெயர் கேட்டார். குறித்துக்கொண்டார். வயது என்ன கேட்பதற்கு பதிலாக, வயது 22-ஆ என தானாகவே கேட்டு என் பதிலை உறுதி செய்துகொள்ள என் முகத்தைப் பார்த்தார்.

எனக்கு அந்தப் பெண் சொன்னது காதில் விழுந்தாலும் அவர் அதைத்தான் சொன்னாரா என உறுதி செய்துள்ள ‘என்ன சொன்னீர்கள்?’ என கேட்டேன்.

‘உங்கள் வயது 22-ஆ என கேட்டேன்’ என்று திரும்பவும் அதையே சொன்னார்.

எனக்கு சிரிப்பு வந்தது. அடக்கமாட்டாமல் அப்பா அம்மாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே ‘அப்படியா தெரிகிறது. சந்தோஷம்… ஆனால் என் வயது அதுவல்ல’ என சொல்லி என் வயதைச் சொன்னேன்.

அவள் அப்படியா என கேட்டு ‘சாரி மேடம். உங்களைப் பார்த்தால் அப்படித் தெரியலை’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

நேற்றைய பொழுது இந்த ஒரு விஷயத்தினாலேயே மகிழ்ச்சியானது.

இந்த விஷயம் அமெரிக்கா வரை சென்றது. அப்பா அம்மாவிடம் மட்டுமில்லாமல் என் சகோதரி, சகோதரனிடமும் சொல்லி சொல்லி சிரித்தாயிற்று.

மகிழ்ச்சியாக இருப்பதற்கும் நகைச்சுவைக்கும் பெரிய காரணங்கள் ஏதும் தேவையில்லையே!

கோபத்தின் உச்சத்தில் கொதித்திருக்க வேண்டிய சூழலை அமைதியாக ஹேண்டில் செய்த அனுபவமும் உண்டு.

2000-களில் என் நிறுவனம் 24 மணி நேரமும் இயங்கியது. அப்போதெல்லாம் கண்காணிப்புக் கேமிராவெல்லாம் (CCTV Camera) கிடையாது. பரஸ்பர நம்மிக்கை மட்டுமே கண்காணிப்பு.

அனிமேஷன் பிரிவில் பணி புரிந்த ஒரு அனிமேட்டருக்கு அன்று இரவு நேரப் பணி. பொதுவாகவே எங்கள் தயாரிப்புகளை காப்பி செய்து எடுத்துச் செல்வது தவறு. அது அந்த அனிமேட்டருக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் அப்போது எங்கள் நிறுவனத்தில் அவர்தான் சீனியர்.

அன்று காலை வழக்கம்போல 6 மணிக்கு நான் அலுவலகம் வந்த போது  ‘டீ சாப்பிட்டு வருகிறேன்’ என சொல்லிவிட்டு அவர் சென்றார். ப்ராஜெக்ட்டை எதுவரை முடித்திருக்கிறார் என்று பார்ப்பதற்காக அவர் கேபினுக்குச் சென்றேன். நான் கண்ட காட்சி கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.

அப்போது பென் ட்ரைவ் எல்லாம் புழக்கத்தில் இல்லை. சிடி ரைட்டரில் ஒரு சிடி இருந்தது. என்ன என்று பார்த்தேன். அவர் செய்திருந்த அனிமேஷன்களை எல்லாம் அப்படியே காப்பி செய்து வைத்திருந்தார் அவர் எடுத்துச் செல்வதற்காக. அதை எடுத்து மறைத்து வைக்க மறந்து டீ சாப்பிடச் சென்றுவிட்டார்.

நான் சிடியை எடுத்துக்கொண்டு என் அறைக்கு வந்துவிட்டேன். அவர் டீ சாப்பிட்டு வந்து வேலையில் மூழ்கினார். வேலை முடிந்து கிளம்பும்போது எதையோ தேடியபடியே இருந்தார். நான் கண்டுகொள்ளவே இல்லை. அவரை அழைத்து எதுவும் கேட்கவும் இல்லை. ஏன் இப்படி செய்தீர்கள் என கோபப்படவும் இல்லை.

இப்படியே மூன்று நாட்கள் சென்றன. அந்த அனிமேட்டர் குற்ற உணர்ச்சியிலேயே இருந்தார். என்னை ஏறிடத்துப் பார்க்கவும் கூசினார்.

நான்காவது நாள் பொறுக்க மாட்டாமல் ‘சாரி மேடம், சிடியில் காப்பி செய்தது தவறுதான்…’ என்று சொல்லி கொஞ்சம் அழவும் செய்தார்.

அதன் பிறகு அவர்தான் நீண்ட நாட்கள் எங்கள் நிறுவன அனிமேஷன் பிரிவில் பணியில் இருந்தார். என் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் விளங்கினார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் சிடியில் அவர் செய்திருந்த அனிமேஷன்களை பார்த்த அன்றே கோபத்தின் உச்சத்துக்கு சென்று அவரை அழைத்து கத்தி, கோபப்பட்டு, வேலையை விட்டு நீக்கி… இதையெல்லாம் செய்திருக்க வேண்டும். பொதுவாக இப்படித்தான் செய்வார்கள்.

ஆனால் என்னால் என் கோபத்தை அடக்க முடிந்தது. அப்படி செய்ததால் அந்த அனிமேட்டர் தானாகவே தவறை உணரவும் சந்தர்ப்பம் உண்டானது.

நகைச்சுவையாக இருப்பவர்கள் பலரால்கூட இதுபோன்ற சூழலை இத்தனை மனமுதிர்ச்சியுடன் கடந்திருக்க முடியுமா என தெரியவில்லை. என்னால் முடிந்தது. சீரியஸாகவே இயங்கும் தன்மையுள்ள என்னால் அசாதாரணச் சூழல்களை இப்படி வெகு இயல்பாக கடக்க முடிகிறது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 27 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon