ஹலோ With காம்கேர் -217: தாய்மொழி கற்பது அத்தனை கடினமா?

ஹலோ with காம்கேர் – 217
August 4, 2020

கேள்வி: தாய்மொழி கற்பது அத்தனை கடினமா?

இவர் சஞ்சீவியம்மாள்:

என் அம்மாவின் அப்பாவின் அம்மா, அம்மாவின் பாட்டி, என் கொள்ளு பாட்டி.

இன்றிருந்தால் 130 வயதுக்கு மேல் இருக்கும். பாண்டிசேரியைப் பிறப்பிடமாக கொண்ட இவருக்கு தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஃப்ரன்ச், தெலுங்கு என ஐந்து மொழிகளில் புலமை உண்டு.

தைரியசாலி:

‘வெட்டு ஒன்று துண்டு ரெண்டு’ என்று உண்மையை நேர்மையாக வெளிப்படுத்தும் குணம் உள்ளவர். தன் மீது தவறிருந்தால் தயங்காமல் ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் பண்பாளர்.

படிப்பாளி:

எராளமான புத்தகங்கள் படிக்கும் வழக்கமுள்ளவர். என் அம்மாவின் திருமணத்துக்கு புத்தகங்களையே பரிசாகக் கொடுத்தாராம்.

சமயோஜித புத்திமான்:

தன்னுடைய புத்திசாலித்தனத்தால் தங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தங்களை நாடி வருபவர்களுக்கு அவர்களின் பிரச்சனையை பேசி புரிந்துகொண்டு அவர்களை நல்வழிப்படுத்துவார்.

பரோபகாரி:

அவ்வளவாக வசதி இல்லை என்றாலும், பசி என்ற சொல் காதில் விழுந்தாலே அவர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு அனுப்புவாராம். அவருடைய புடவைகளும் தாத்தாவின் வேட்டிகளும், துண்டுகளும் திடீர் திடீர் என காணாமல் போகுமாம். வறுமையில் வாடுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு தூக்கிக்கொடுத்து விடுவாராம்.

தன்னம்பிக்கைப் பெண்மணி:

உயர் கல்வியெல்லாம் படிக்கவில்லை என்றாலும் நிறைய மொழிகள் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருந்ததால் பலமொழி புத்தகங்களை வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். பன்மொழிப் புத்தகங்கள் நிறைய வாசித்ததால் பரந்த மனப்பான்பையுடன் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்துடன் வாழ்ந்துவந்தார். கணவர் இறந்த பிறகும் தன்னம்பிக்கையுடன் தன் பிள்ளைகளுக்கும் நல்வழி காட்டி, தன் பேரன் பேத்திகளையும் நல்வழிபடுத்தியவர். தன் புத்திசாலித்தனத்தை, தன் அறிவை, தன் சமயோஜித குணத்தை, தன் தைரியத்தை, தன் பரோபகார குணத்தை தலைமுறைத் தாண்டி இன்று வரை எங்கள் குடும்பத்தில் உள்ள எங்களுக்கு அடுத்த தலைமுறைவரை பரவவிட்டுச் சென்றுள்ளார்.

பெயருக்கேற்ற பண்பாளர்:

‘சஞ்சீவி’ என்ற பெயருக்கு ஏற்ப இயற்கை உணவு முறை, இயற்கை வைத்தியம் இவற்றினால் திடசாலியாகவும், வாசிப்பு, புத்தாலித்தனம், பரோபகாரம், பரந்த மனப்பான்மை போன்ற குணங்களினால் எதையும் எதிர்கொள்ளும் மனோதிடமும் பெற்றவர்.

அவரவர் தாய்மொழியை நன்கு படிக்கவும், எழுதவும், பேசவும் தெரிந்துகொள்வோம். உலகம் முழுவதற்கும் பொதுவான ஆங்கிலத்தையும் நன்கு அறிவோம். மேலும் மற்ற மொழிகளில் புலமை இல்லை என்றாலும் புரிந்துகொள்ளும் அளவுக்கு நம்மை தயார் செய்துகொண்டு முடிந்தவரை மற்ற மொழிகளில் ஏதேனும் ஒன்றை கற்றறிவோமே.

பொதுவாக நம் எல்லோருக்குமே நம் அப்பா அம்மா, தாத்தா பாட்டி வரை உறவுமுறைகள் தெரிந்திருக்கும். அதற்கு முந்தைய தலைமுறையினரின் பெயர்கள்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவர் வீட்டிலும் அவரவர்கள் குடும்பப் புத்தகம் (Family Book) இருக்க வேண்டும் என்பது என் கருத்து. அதில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரது சிறப்பம்சங்களை சுருக்கமாக பதிவாக்கலாம். குடும்பத்தில் புதுவரவுகள் இருக்கும், இழப்புகளும் இருக்கும் என்பதால் தேவையானபோது அப்டேட் செய்து கொள்ளலாம்.

வாழ்நாளில் அவரவர் தாய்மொழியில் தங்கள் குடும்ப புத்தகத்தையாவது எழுதிவிடும் அளவுக்கு தேர்வோமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 13 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon