ஹலோ With காம்கேர் -227: உடல் இளைக்க வேண்டுமா?

ஹலோ with காம்கேர் – 227
August 14, 2020

கேள்வி: உடல் இளைக்க வேண்டுமா?

முன் குறிப்பு: இன்றைய பதிவுக்கு பாராட்ட நினைப்பவர்கள் என் அம்மாவையும் தேவையான பொடிகளை தயாரித்து வைக்கும் அப்பாவையும் சேர்த்துப் பாராட்டுங்கள். இந்த வழக்கத்தை எங்களுக்குப் பழக்கமாகியவர்கள் அவர்களே.

—***—

உடல் இளைப்பது மட்டுமல்ல, உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி பெருகவும் மிக மிக சுலபமான வழி ஒன்று உள்ளது.

காலையில் ஒரு கப் சூப், மாலையில் ஒரு கப் டீ. இரவு ஒருகப் சீரக நீர். இதுபோதும். நாங்கள் இதைத்தான் நீண்ட நாட்களாக பின்பற்றுகிறோம். நீங்களும்  முயற்சி செய்து பாருங்களேன்.

காலை டிபனுடன் குடிக்க வேண்டிய சூப்:

தேவையானவை: மூன்று நபர்களுக்கான அளவு  

தண்ணீர்: ஆறு டம்ளர்
துவரம் பருப்பு: 6 ஸ்பூன்
மிளகு சீரகப் பொடி: 2 ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
எலுமிச்சைப் பழம் : 1
உரித்த பூண்டு : ஆறு பல்லுகள் உரித்தது
தோல் சீவிய இஞ்சி: பொடிப்பொடியாக நறுக்கியது
தக்காளி: ஒன்று. பொடிப்பொடியாக நறுக்கியது
கருவேப்பிலை / கொத்துமல்லி: தேவையான அளவு

செய்முறை:

 1. முதலில் துவரம்பருப்பை மிக்ஸியில் நன்கு பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து தக்காளியையும், இஞ்சியையும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
 2. தண்ணீரில் துவரம்பருப்புப் பொடியைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
 3. ஐந்துநிமிடம் கொதித்ததும் உரித்த பூண்டை போட்டு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
 4. அடுத்த ஐந்து நிமிடத்தில் அரைத்த தக்காளி இஞ்சியை உப்பையும் சேர்க்க வேண்டும்.
 5. அடுத்த ஐந்து நிமிடத்தில் மிளகு சீரகப் பொடியை போட்டு உடனடியாக இறக்கிவிட வேண்டும். மிளகு சீரகப்பொடி சேர்த்த பிறகு அதிகம் கொதிக்கக் கூடாது. கசந்துவிடும்.
 6. இறக்கியதும் எலுமிச்சைப் பழச்சாறு பிழிந்து கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து சில நொடிகள் மூடி வைக்கவும்.
 7. பிறகு சூப் போல காலை டிபனுக்கு முன்னரோ அல்லது பின்னரோ உங்கள் வசதிக்கு ஏற்ப சாப்பிடலாம்.

டிப்ஸ்: துவரம்பருப்புப் பொடி, மிளகு சீரகப் பொடி இவற்றை வாரத்துக்கு ஒருமுறையோ அல்லது மாதத்துக்கு ஒரு முறையோ அரைத்து வைத்துக்கொள்ளலாம். மூன்று நபர்களுக்குத் தேவையான இந்த சூப்பை தயாரிக்க ஆகும் நேரம் 10-15 நிமிடங்களே.  

மாலையில் குடிக்க வேண்டிய டீ:

தேவையானவை: மூன்று நபர்களுக்கான அளவு 

தண்ணீர்: மூன்று டம்ளர்
தோல் சீவிய இஞ்சி: பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
டீ பொடி: 1 ஸ்பூன்
துளசி, கற்பூரவல்லி இலைகள் – கால் கைப்பிடி அளவு
வெற்றிலை – 1
கிராம்பு: 1
நாட்டுச் சர்க்கரை: மூன்று ஸ்பூன்
எலுமிச்சைப் பழம் : 1

செய்முறை:

 1. தண்ணீரில் நறுக்கிய இஞ்சியுடன் துளசி, கற்பூரவல்லி, வெற்றிலை, கிராம்பு இவற்றைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும்.
 2. அதில் டீ பொடியைப் போட்டு ஒரு நிமிடம் கொதித்தும் இறக்கி விடவும்.
 3. டீ வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ளவும்.
 4. அதில் எலுமிச்சைப் பழச் சாற்றை கலக்கவும்.
 5. நாட்டுச் சர்க்கரையை சேர்க்கவும்.

டிப்ஸ்: மூன்று நபர்களுக்குத் தேவையான இந்த சூப்பை தயாரிக்க ஆகும் நேரம் 5 நிமிடங்களே. 

இரவு குடிக்க வேண்டிய சீரக நீர்:

தேவையானவை: மூன்று நபர்களுக்கான அளவு 

சீரகம்: 100 கிராம்
பெருஞ்சீரகம்: 100 கிராம்
கருஞ்சீரகம்: 100 கிராம்
ஓமம்: 100 கிராம்
சாப்பாட்டு மஞ்சள்: 5
கடுக்காய் கொட்டை நீக்கியது: 5

செய்முறை:

மேலே குறிப்பிட்ட பொருட்களை புடைத்து சுத்தம் செய்து லேசாக வறுத்து மிக்ஸியில் நன்கு அரைத்துவைத்துக்கொண்டு இரவு உறங்கும் முன்னர் சூடான தண்ணீரில் மூன்று ஸ்பூன் போட்டு குடித்து வரலாம். இரத்த ஓட்டம் சீராகும். ஜீரணக் கோளாறுகள் வராது. நன்கு தூக்கம் வரும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

டிப்ஸ்: மாதம் ஒருமுறை பொடியை அரைத்து வைத்துக்கொண்டால் தினமும் குடிப்பதற்கு வசதியாக இருக்கும்.

முக்கியக் குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸ்களில் உங்கள் உடலுக்கு அலர்ஜியை உண்டாக்கும் பொருட்கள் இருந்தால் கவனம். அதை சேர்த்துக்கொள்ளாமல் தவிர்க்கலாம். சிலருக்கு இஞ்சி, சிலருக்கு எலுமிச்சை, சிலருக்கு கடுக்காய் என உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியை ஏற்படுத்தினால் நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 23 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari