ஹலோ With காம்கேர் -257: ஆத்மார்த்தமான ஓர் அஞ்சலி!

ஹலோ with காம்கேர் – 257
September 13, 2020

கேள்வி: ஆத்மார்த்தமான ஓர் அஞ்சலி குறிப்பு எத்தனை நினைவுகளை கிளறிவிடுகிறது?

உயர்திரு.ம.வீரபாகு(72).

53 வருடமாக சங்க பிரச்சாரக், விஜயபாரதம் வாரஇதழ் ஆசிரியராக இருந்து வந்தார். நேற்று (செப்டம்பர் 12, 2020) கொரோனா தொற்றுநோய் பாதிப்பினால் சென்னை அரசு மருத்துவமனையில் காலமானார்.

விஜயபாரதத்துக்கும் எனக்கும் இன்று நேற்றல்ல நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாளில் இருந்தே தொடர்புண்டு. ‘இளைய பாரதத்தினாய் வா, வா, வா’ என்ற தலைப்பில் அவர்கள் நடத்திய கல்லூரிகளுக்கிடையேயான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். (1992).

அதன் பிறகு எங்கள் காம்கேர் நிறுவனம் தொடங்கிய நாளில் இருந்து தொடர்ச்சியாக விஜயபாரத்தில் தீபாவளி மலர்களில் என் தொழில்நுட்பக் கட்டுரைகள் கேட்டு வாங்கி வெளியிடுவார்கள்.

திரு. சடகோபன் அவர்கள் விஜயபாரதத்தில் ஆசிரியராக இருந்த சமயம் விஜயபாரதத்துடன் தொடர்பு இன்னும் அதிகமானது.

அவர் பேரிடர் காலங்களில் எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் நாங்கள் செய்கின்ற சேவைகளுக்கு எங்களுக்கு உதவுவதற்காக தன்னார்வ தொண்டர்களை அனுப்பி வைப்பார். சில நிகழ்வுகளில் அவரே நேரில் வந்திருந்து உதவியும் செய்திருக்கிறார்.

உயர்திரு. வீரபாகு அவர்கள் குறித்து சொல்ல வேண்டுமானால்…

இவர் விஜயபாரத்தின் ஆசிரியராக பொறுப்பில் இருந்த சமயம், 2015-க்குப் பிறகு விஜயபாரதத்தில் ‘பாரதப் பெருமிதங்கள்’, ‘நல்லதோர் வீணை செய்தே’, ‘புத்தம் புதிதாய் சிந்திப்போம்’ என தொடர்ச்சியாக தன்னம்பிக்கை சார்ந்த உளவியல் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். அத்தனையும் இளைஞர்களுக்கானது.

பின்னாளில் அவை ‘மனதை ஃபார்மேட் செய்யுங்கள்’, ‘குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட்’ என்ற தலைப்புகளில் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் மூலமும், எங்கள் காம்கேர் மூலமும் புத்தகமாக வெளிவந்தன. விற்பனையிலும் கொடிகட்டிப் பறந்தன. இன்றும்.

இதே காலகட்டத்தில்தான் விஜயபாரதம் பத்திரிகைக்காக சந்தா பராமரிக்கும் சாஃப்ட்வேரை எங்கள் காம்கேர் மூலம் தயாரித்தளித்தோம்.

மேலும் விஜயபாரதமும் காம்கேர் சாஃப்ட்வேரும் இணைந்து இளைஞர்களுக்காக தொழில்நுட்ப கருத்தரங்குகளை நிகழ்த்தியுள்ளோம்.

விஜயபாரதம் புது கட்டிடடத்தில் இயங்கத் தொடங்கியபோது அதன் திறப்பு விழாவில் தொழில்நுட்பத்துக்காகவும் இலக்கியத்துக்காகவும் நான் செய்துவரும் பணிகளைப் பாராட்டி ஷீல்ட் கொடுத்து கெளரவித்தார்.

மேலும் ஒரு முக்கியமான நிகழ்வை மறக்கவே முடியாது.

ஆகஸ்ட் 22, 2016.

விஜயபாரதம் அலுவலகத்தில் ஒரு சாஃப்ட்வேர் பிராஜெக்ட் டிஸ்கஷனுக்காகச் சென்றபோது, எடிட்டர் உயர்திரு. வீரபாகு அவர்கள்  ‘இன்று நாங்கள் ரக்ஷாபந்தன் கொண்டாட இருக்கிறோம். பத்து நிமிடங்கள் பேச முடியுமா’ என்று கேட்டார். முதலில் கொஞ்சம் தயங்கினேன். பிறகு, என் மீது நம்பிக்கை வைத்து பேச சொன்னதால் சரி என்றேன்.

விஜயபாரதத்தில் பணிபுரிபவர்கள் தரையில் சம்மணம் இட்டு அமர்ந்தனர். இளம் வயது பணியாளர் ஒருவர் தேசபக்தி பாடலை வரிவரியாக ராகத்துடன் பாட, அனைவரும் கூடவே பாடினார்கள். நிமிடத்தில் அந்த இடமே தெய்வீகமானது.

அடுத்து நான் பேசினேன்.

‘நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது சைக்கிளில் பள்ளிக்குச் செல்வேன். நான் செல்லும் வழியில் ஒரு தியேட்டர் வரும். ஒரு நாள், பள்ளி ஆசிரியர் ஒருவர்  ‘அந்தத் தியேட்டர் வழியேத்தானே நீ வருகிறாய்? அதில் என்ன படம் (சினிமா) போட்டிருந்தது’ என்று கேட்டார்.  ‘தெரியாது டீச்சர்’ என்று சொல்ல,  ‘கண்ணை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்க்க மாட்டியா?’ என்று கேட்டார்.

உண்மைதான். தேவையில்லாத விஷயங்களுக்கு காதுகள்கூட மூடிக்கொள்ளும், கண்களும் செவிடாகிவிடும், வாய் குருடாகிவிடும். என் பெற்றோர் கற்றுக்கொடுத்தப் பாடம் இது. இளம் வயதில் என்னுள் விதைக்கப்பட்ட இந்தப் பழக்கத்தை இன்று வரை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை.

எனவே சிறு வயதிலேயே நல்ல விஷயத்தை மனதுக்குள் விதைப்போம். நம்மையும் காத்து, நம்மையே நம்பி இருக்கும் நம் குடும்பத்தாரையும் காப்போம்.

உடல் நலத்துடன் மனநலத்தையும் பேணுவோம்.

நேரத்துக்கு உணவு, போதிய தூக்கம் இரண்டும் இருந்தாலே உடல் நலத்தைப் பாதுகாத்துக்கொள்ளலாம். காலை உணவை தவிர்க்காமல் இருக்கலாம். இரவு 8 மணிக்குள் சாப்பிட்டு 10 மணிக்குள் தூங்கச் செல்லலாம்.

அடுத்து இரவு முழுவதும் ஃபேஸ்புக், யு-டியூப், வாட்ஸ்-அப் போன்றவற்றில் மூழ்கி இருந்துவிட்டு எப்போது தூக்கம் வருகிறது என்றே தெரியாமல் இரவு 1 மணி, 2 மணி என்று தூங்கி உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்ளாமல் இருக்கலாம்.

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்கக் குறைபாடு ஏற்படும்.

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் நிச்சயம் தூங்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் நமக்குத் தேவையானதை மட்டும் பயன்படுத்தி மனநலத்தைப் பாதுகாக்கலாம்….’

சுருக்கமாக நான் பேசியதை அனைவரும் அமைதியாக கவனித்தார்கள். பேசி முடித்ததும் ஒருவருக்கொருவர் ரக்ஷாபந்தன் கயிறு கட்டிக்கொண்டார்கள். எனக்கும் ஒருவர் கட்டிவிட்டார்.

இறுதியில் அனைவருடனும் ஒரு கிளிக்.

அவர்கள் அன்பில் நனைந்த மனநிறைவில் அனைவருக்கும் சாக்லெட் வாங்கிக்கொடுத்துவிட்டு பிராஜெக்ட் டிஸ்கஷன் முடிந்ததும் மனநிறைவுடன் வீடு திரும்பினேன்.

அதுதான் அவரை நான் நேரில் சந்தித்த கடைசி சந்திப்பு. அதன்பிறகு அவர்களுக்காக நாங்கள் தயாரித்துக்கொடுத்த சந்தா சாஃப்ட்வேர்கள் குறித்த அவர்கள் சந்தேகங்களுக்காகவும், அப்டேஷனுக்காகவும் போனில் பேசுவார். அவர்கள் கம்ப்யூட்டரை எங்கள் அலுவலகத்தில் இருந்தே கனெக்ட் செய்து சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்தல், தேவையான அப்டேட்டுகள் செய்தல் என செய்துகொடுப்போம்.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

ஓம் சாந்தி.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 39 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon