ஹலோ With காம்கேர் -266: நான் இப்படித்தான். நீங்கள் எப்படி?

ஹலோ with காம்கேர் – 266
September 22, 2020

கேள்வி: நான் இப்படித்தான். நீங்கள் எப்படி?

எங்கள் தெருவில் உள்ள  ஓர் அப்பார்ட்மெண்ட்டில் ஒருவருக்கு கொரோனா வந்திப்பதால் நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளார்கள்.

உறவினர் வீட்டில் ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் கொரோனா வந்து மருத்துவமனையில்.

கடந்த 5 மாதங்களில் எங்கள் உறவினர்களிலும் குடும்ப நண்பர்களிலும் கொரோனாவினால் ஒருசிலர் இறந்திருக்கின்றனர்.

இப்படியாக கொரோனா நமக்கு நெருக்கமாகி வந்துகொண்டிருந்தாலும் கடைகளிலும், வங்கிகளிலும் சமூக இடைவெளி என்பது குறைந்துவிட்டது. காய்கறி கடைகளில் உள்ளே அனுப்பும் ஆட்களை அவர்கள் கட்டுப்படுத்தினாலும் உள்ளே வரும் நபர்கள் கொஞ்சமும் காத்திருப்பதில்லை. அங்கும் இங்கும் நகர்ந்து காய்கறிகளை எடுக்கும்போது சர்வ சாதாரணமாய் நம்மை இடிக்காத குறையாக கடந்து செல்கிறார்கள். நாம் சட்டென நகர்ந்து நின்று கொண்டாலும் அலட்சியமாய் ஒரு பார்வை.

நேற்று மருந்து கடையில் ஓர்  இளம் அப்பா மகனை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். மகனுக்கு 4 வயதிருக்கும். மூன்றே நபர்கள் தான் கடையில். அந்த சிறுவன் வாயில் இருந்த மாஸ்க்கை கழற்றிவிட்டு இருமினான். நான் பயந்து கடையில் இருந்து வெளியே வந்தேன். அவன் அப்பா மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவனிடம்  ‘மாஸ்க் போட்டு இருமணும்’ என்றதும் அவன் அப்பா நிமிர்ந்து பார்த்து மகனுடைய மாஸ்க்கை சரி செய்தார் என நினைத்துவிடாதீர்கள். அவனை பார்த்து சிரித்துவிட்டு மறுபடி மொபைலில் தலை கவிழ்த்துக்கொண்டார்.

நான் ஒதுங்கியே இருந்தாலும் ஒரு பெண்மணி புயல்போல வேகமாக என்னைக் கடந்து கடைக்குள் சென்றார். இடிப்பதைப் போல செல்கிறோமே என்ற உணர்வு கொஞ்சமும் இல்லை.

எங்கள் உறவினர் தன் மகனுக்கு திருமணம் ஏற்பாடு செய்துள்ளார். அழைப்பிதழ்கள் ஆயிரம் அடித்துவிட்டார்கள்.

‘இவ்வளவு பேர் வருவார்களா, கொரோனா காலத்தில்…’  என்றேன்.

‘எங்கள் ஊரில் கொரோனாவே கிடையாது… நிச்சயம் வருவார்கள்…’ என்றார்.

அப்படி என்ன ஊரில் அவர் இருக்கிறார் என்றால் இதோ பக்கத்தில் இருக்கிற பெங்களூரில்தான்.

இதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஆனாலும் அவரே தொடர்ந்தார்.

‘அதான் லாக் டவுன் எல்லாம் தளர்த்தியாச்சே… கடைகள் எல்லாம் திறந்தாச்சு. பர்சேஸூக்கு தினமும் சென்று வருகிறோம். நகைகள், உடைகள் என ஒவ்வொன்றாக வாங்கத் தொடங்கிவிட்டோம்… கடைகளில் கூட முன்பு போல கெடுபிடிகள் எல்லாம் கிடையாது. எப்போதும்போல மக்கள் இயங்கத் தொடங்கிவிட்டார்களே’ என நான் என்னவோ வேற்றுகிரகவாசி போலவோ அல்லது கோமாவில் இருந்து இப்போதுதான் விழித்து வெளி வந்ததுபோலவோ எண்ணிக்கொண்டு பேசியவரை நான் ஆச்சர்யமாகப் பார்த்தேன்.

நான் இடையில் பேசாததால் அவர் பேச்சை நான் ரசிப்பதாக நினைத்து ‘எப்போதடா லாக் டவுன் தளர்வுகள் வரும் என காத்திருந்தோம். இப்போதுதான் நிம்மதியா இருக்கு’ என முத்தாய்ப்பாக சொல்லி முடித்தார்.

அவருடைய பேச்சில் எந்த இடத்திலும் கொரோனா பயமோ அல்லது தன் வீட்டு திருமணத்துக்கு வெளியூர்களில் இருந்தெல்லாம் உறவினர்களும் நண்பர்களும் வந்தால் அவர்களுக்கே தெரியாமல் அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றிருந்தால் அது மற்றவர்களுக்கும் ஒட்டிக்கொள்ளுமே, பரவுமே என்ற அக்கறை கொஞ்சமும் இல்லை.

முதல் பிரச்சனையே கொரோனா தான். அடுத்ததுதான் லாக்டவுன் பிரச்சனை எல்லாம். ஆனால் அவர் பேசியது லாக் டவுன் பிரச்சனையை மட்டுமே. கொரோனா என்னவோ அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு மண்டபத்தின் வாசலோடு சென்றுவிடும் என்கின்ற தோரணை.

இப்படித்தான் படித்த பலரிடமும் விழிப்புணர்வே இல்லை. முதன்மைப் பிரச்சனையில் கவனம் செலுத்துவதில்லை. முதன்மை பிரச்சனையே கொரோனாதான். லாக் டவுன் என்பது நம் பாதுகாப்புக்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடு. அது பிரச்சனையை சமாளிப்பதற்கான பாதுகாப்புக் கவசம். அவ்வளவே.

பொருளாதார பிரச்சனையை சமாளிப்பதற்காக லாக் டவுன் தளர்த்தப்பட்டுள்ளதே தவிர கொரோனா எங்கும் ஓடிப் போய்விடவில்லை. நம் பக்கத்திலேயேதான் ஒளிந்துகொண்டிருக்கிறது. நம் தலைமீது ஏறி விளையாடுவதற்காக நாம் எப்போதடா அசருவோம் என்று காத்திருக்கிறது. அதுதான் உண்மை.

நான் அலுவலகம் செல்லும் வழி நெடுக கடைகளில் பல மூடியே கிடக்கின்றன. டிராஃபிக் இல்லை. ஆனால் வெளியில் புழங்கும் மக்கள் நெரிசல் இருப்பதைப் போல நெருக்கமாகவே புழங்குகிறார்கள்.

நானெல்லாம் கொரோனாவில் இருந்து  பாதுகாப்பாக இருப்பதற்கு வாயில் மாஸ்க்கும், கைகளில் கிளவுஸும் இல்லாமல் வெளியில் செல்வதில்லை. ஏனோ ஒருசிலருக்கு நான் கைகளில் அணியும் கிளவுஸைப் பார்த்தால் எரிச்சல் வருகிறது. அது அவர்கள் முகத்திலேயே தெரிகிறது. இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கு என் ஆரோக்கியம் மட்டுமல்ல என்னைச் சுற்றி இயங்குபவர்களின் ஆரோக்கியமும் அதி முக்கியம்.

நான் இப்படித்தான். நீங்கள் எப்படி?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 25 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon