ஹலோ With காம்கேர் -288 : என்ன ஆச்சோ தெரியலையே?

ஹலோ with காம்கேர் – 288
October 14, 2020

கேள்வி: என்ன ஆச்சோ தெரியலையே?

இந்த கேள்விக்குள்தான் எத்தனை எத்தனை கற்பனைகள், கவலைகள், வருத்தங்கள், எதிர்பார்ப்புகள்.

நேற்று முன் தினம் பதிவு வெளியிட தாமதமாகும் என்ற தகவலை போடவில்லை என்றால் வாசகர்களின் மனநிலை என்னென்னவாக இருந்திருக்கும்?

‘உடல் நலம் சரியில்லையோ?’

‘கொரோனா அறிகுறி ஏதேனும் இருக்குமோ?’

‘வயதான பெற்றோர் இருக்கிறார்களே, வீட்டில் யாருக்கேனும் ஏதேனும் ஆகியிருக்குமோ?’

‘பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்துவிடுவதாக சொல்லி இருக்கிறாரே… இன்று தூங்கி இருப்பாரோ…’

இப்படி நிஜமாகவே அக்கறையுள்ள எண்ணங்கள் தோன்றுவதை தவிர்க்கவே முடியாது.

‘தினமும் எப்படி எழுதுவதற்கு கான்செப்ட் கிடைக்கும்… இன்று எழுதுவதற்கு எதுவுமே இருந்திருக்காது…’

‘தன்னம்பிக்கை குறித்து அதிகம் பேசுபவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்களே… அதுபோல் ஏதேனும் இருக்குமோ…’

இப்படி எதிர்மறையாக நினைப்பவர்கள் வேண்டுமானால் இருக்கலாம்.

ஆனால்…

‘அப்பாடா, காலையில் அறிவுரை சொல்கிறேன்னு நேர்மையா இரு, ஒழுக்கமா இரு, தன்னம்பிக்கையா இரு அப்படின்னு எழுதி கழுத்தறுக்காம இன்னிக்கு ஒருநாளாவது எழுதும் அவள் கை ஓய்ந்ததே’ என்று யாரும் கோபமாக நினைத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

தினமும் காலை 6 மணிக்கு எழுதி பதிவிடும் எனக்கே அந்த நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக என் மனநிலை இயல்பு நிலையில் இல்லை எனும்போது நித்தம் 6 மணிக்கு என் பதிவுகளைப் படிக்கும் வழக்கமுள்ளவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்.

நான் எழுதாததினாலும் உலகம் சுற்றாமல் நின்றுவிடப் போவதில்லைதான். வாசகர்கள் படிக்காததினாலும் சூரியன் உதிக்காமல் போய்விடப் போவதில்லைதான்.

ஆனாலும் ஒரு வேலையை நித்தம் தொடர்ச்சியாக ஆத்மார்த்தமாக செய்யும்போது அது கொடுக்கும் மன நிறைவையும், அந்தப் பணியை அந்த நேரத்துக்கு செய்ய முடியாமல் போகும்போது ஏற்படும் சிறு மன சஞ்சலத்தையும் ஆர்மார்த்தமாக வேலைகளை செய்பவர்களால் மட்டுமே உணர முடியும். அது எழுதுவதானாலும் சரி, படிப்பதானாலும் சரி. இரண்டையுமே ஆத்மார்த்தாமாக செய்யும்போது மனநிறைவு கிடைக்கும். அது தடைபடும்போது மன சஞ்சலம் ஏற்படுவதும் இயல்பே.

எழுதுவது மட்டும் சிறப்பல்ல, படிப்பதும் அதை சரியாக உள்வாங்கிக்கொள்வதும்கூட சிறப்புதான். எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை படைப்புகளாக்குகிறார்கள். அது அவர்களின் பணி.

வாசகர்களின் பணி வாசிப்பதும் புரிந்துகொள்வதும் என இரட்டிப்பாவதால், எழுதியவர் எந்த கோணத்தில் சொல்லி இருக்கிறாரோ அதே கோணத்தில் அப்படியே அந்த எசென்ஸ் மாறாமல் புரிந்துகொள்ளும் வாசகர்கள் இரண்டு எழுத்தாளர்களுக்கு சமம்.

10 வயதில் இருந்து எழுதிவரும் என் எழுத்துக்களை எங்கள் நிறுவன புத்தகங்கள், சாஃப்ட்வேர் தயாரிப்புகள், அனிமேஷன் படைப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள், யு-டியூப் நிகழ்ச்சிகள் என பல்வேறு பரிணாமங்கள் மூலம் வாசித்து வரும் அத்தனை வாசகர்களுக்கும் இந்த நாளில் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 11 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari