ஹலோ With காம்கேர் -292 : விமர்சனங்கள் எதிர்வினையாற்றுமா?

ஹலோ with காம்கேர் – 292
October 18, 2020

கேள்வி: ‘இன்னும் இப்படி செய்திருக்கலாம்…’ என்ற விமர்சனங்கள் எதிர்வினையாற்றுமா?

இரண்டு வருடங்களுக்கு முன்னர், ஒரு நவராத்திரி கொலுவுக்கு ஒரு பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் என்னை சிறப்பு விருந்தினராக அவர்கள் பள்ளி மாணவிகளுடன் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள்.

எங்கள் காம்கேர் தாயாரிப்புகளான அனிமேஷனில் கந்தர் சஷ்டிக் கவசம், இராமாயணம், நீதிக் கதைகள் என ப்ரொஜக்ட்டரில் போட்டுக் காண்பித்துவிட்டு அவர்கள் எப்படி தன்னம்பிக்கையாக வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற கான்செப்ட்டில் பேசினேன்.

என் உரைக்கும், அனிமேஷன் படைப்புகளுக்கும் மாணவிகள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு. மிக உற்சாகமாக பங்கேற்றார்கள்.

நிகழ்ச்சி நவராத்திரி பூஜையுடன் நிறைவடைந்தது. மன நிறைவாக நானும் கிளம்ப ஆயத்தமானேன்.

பள்ளி தலைமை ஆசிரியரும் இன்ன பிற ஆசிரியர்களும் பாராட்டினார்கள். அப்போது ஒரு தமிழாசிரியர் குறுக்கிட்டு ‘நவராத்திரி சமயமாக இருப்பதால் மாணவிகளுக்கு நீங்கள் பேசிய உரையில் தன்னம்பிக்கைக்கு பதிலாக ஏதேனும் பக்தி கதைகள் சொல்லி இருக்கலாம்…’ என்றார்.

நான் ஒரு நிமிடம் யோசித்தேன்.

‘தன்னம்பிகையாக இருந்துவிட்டால் கல்வி, செல்வம், தைரியம் இவை தானாகவே நம்மை நோக்கி வந்து நம்மிடம் நிலைத்திருக்க ஆரம்பிக்கும் மேடம். நவராத்திரியில் துர்க்கா, லஷ்மி, சரஸ்வதியைத் தானே வழிபடுகிறோம். அந்த வழிபாட்டைத்தான் நடைமுறைப்படுத்தி கல்விக்கான வழியை தேடவும், செல்வத்துக்கான பாதை வகுக்கவும், எதிரிகளின் சூழ்ச்சியை கண்டறியும் நுண்ணறிவைப் பெறவும் உதவக் கூடிய தன்னம்பிக்கை குறித்துப் பேசினேன்’ என்றேன்.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என நினைப்பார்கள். நினைப்பதுடன் அவர்கள் தன் முனைப்புடன் ஏதேனும் முயற்சி செய்து காண்பித்தால் ‘பரவாயில்லையே… நன்றாகத்தான் இருக்கிறது… இன்னும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்…’ என்று ‘பஞ்ச டயலாக்’ போல் ஒன்றை சொல்லி அந்த குழந்தைகளுக்கு அதற்கு மேல் முயற்சி எடுக்கும் ஆர்வத்தை அடியோடு தகர்த்து எறிந்துவிடுவார்கள்.

உதாரணத்துக்கு தானே காபி கலந்து எடுத்து வந்து அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும்போது ‘சூப்பர் கண்ணா’ / ‘சூப்பர் கண்ணம்மா’ என்று பாராட்டினால் அடுத்தடுத்த முறை அவர்கள் இன்னும் கூடுதல் உற்சாகத்துடன் செயல்படுவார்கள். அதில் கொஞ்சம் சூடு குறைவாக இருந்தாலோ அல்லது சர்க்கரை கூடுதலாக இருந்தாலோ அப்போது சொல்லாமல் பின்னர் ஒரு சமயத்தில் ஒன்றாக அமர்ந்து பேசும்போதோ அல்லது சாப்பிடும்போதோ ‘அம்மாக்கு சர்க்கரை குறைவா போட்டாதான் காபி ரொம்ப பிடிக்கும்…’ என்று பொதுப்படையாக சொல்லி கற்பனையில் ‘ஒரு ஓட்டலில் காபி சாப்பிட்டபொழுது அவர்கள் இதோ இதைப் பாரு இதனால் இரண்டு ஸ்பூன் போட்டு கலந்துவிட்டதால் காபி பாயசம்போல் இருந்தது. இந்த ஸ்பூனால் ஒரு ஸ்பூன் போட்டால்தான் காபி சுவையாக டிகாஷன் மணம் தூக்கலாக இருக்கும்’ என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் பிள்ளை அடுத்த முறை சர்ப்ரைஸ் காபி கொடுக்கும்போது நீங்களே அசந்து போவீர்கள்.

தொலைக்காட்சியில் சமையல் போட்டிகளின் நடுவர்களை கவனித்திருக்கிறீர்களா?

பங்கேற்பாளர்கள் செய்த உணவு வகைகளை சுவைத்துவிட்டு ‘நன்றாக இருக்கிறது… ஆனால் இதில் கொஞ்சம் கசகசாவை அரைத்து கொஞ்சம் மிளகை தூவி கொஞ்சம் புதினா சாறு கலந்து செய்தால் அட்டகாசமாக இருக்கும்’ என்று கருத்து சொல்வார்கள்.

ஒரு பதார்த்தத்தை சிறப்பாக செய்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. போட்டியில் எடுத்துக்கொண்ட கான்செப்ட்டுக்கு தயார் செய்திருக்கும் பதார்த்தம் எப்படி உள்ளது என்பது போன்ற கருத்துக்கள் இருந்தால் மட்டுமே அந்த நிகழ்ச்சி அருமையாக அமையப்பெறும். அதைவிட்டு  ‘அதில் இதை சேர்க்கலாம், இதில் அதை சேர்க்கலாம்’ என்பதுபோன்ற கருத்துக்கள் நிகழ்ச்சியின் நேரத்தை நீட்டுவதற்காக பேசப்படுபவையாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது.

உதாரணத்துக்கு போட்டியில் ‘கொள்ளு ரசம்’ செய்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில்  மிளகு சீரக தூள் சேர்க்கலாம், கொத்துமல்லி இலையை அரைத்துவிடலாம், தக்காளி சேர்க்கலாம், புளிக்கு பதில் எலுமிச்சைப் பழம் பிழிந்துகொள்ளலாம். ஏன் புளி, எலுமிச்சைபழச் சாற்றுக்கு பதில் புளிப்பான தக்காளியையே அரைத்துவிட்டும் செய்யலாம். இப்படி ஏகப்பட்ட ‘லாம்’-கள் செய்யலாம்தான்.

அந்த போட்டியில் பங்கேற்பாளர் தயார் செய்திருக்கும் ‘கொள்ளு ரசம்’ எப்படி இருந்தது. கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் அவர் எப்படி தயார் செய்திருந்தார் என்று அவர் செய்திருந்த பதார்த்தத்துக்கான கருத்துக்களான  விமர்சனங்களே சிறப்பாக இருக்கும். அதைவிட்டு நடுவர்கள் தாங்கள் அறிந்த அத்தனை சமையல் நுணுக்கங்களையும் 10 நிமிட போட்டியில் தயார் செய்த கொள்ளு ரசத்தில் எதிர்பார்ப்பது ஏற்கத் தக்கதல்ல.

அதாவது ஆங்கிலத்தில் சுருக்கமாக சொல்ல வேண்டியதை சொல்வதற்கு  ‘to the point’ என்ற சொல்லாடலை பயன்படுத்துவார்கள். அதுபோல விமர்சனங்களும் கருத்துக்களும் ‘to the point’ சுருக்கமாக இருந்தால் மனதைத் தொடும். இல்லாவிட்டல் மனதை சுடும். அவ்வளவே.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 12 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari