ஹலோ With காம்கேர் -321: யார் பெயர் அற்றவர்கள்?

ஹலோ with காம்கேர் – 321
November 16, 2020

கேள்வி: நல்லவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்துக்காக வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பதும், கெடுதல் செய்பவர்கள் மகிழ்ச்சியுடனும் வளைய வருவதும் ஏன்?

பொதுவாக என் மனதில் இருந்து சில மனிதர்களின் பெயர்கள் நழுவி மறைந்துவிடும். இத்தனைக்கும் நித்தம் அவர்களை ஏதேனும் ஒரு விதத்தில் நேரடியாகவோ அல்லது மீடியாக்கள் மூலமோ அல்லது சமூக வலைதளங்களிலோ சந்தித்துக்கொண்டேதான் இருப்பேன். ஆனாலும் எத்தனை முறை யோசித்தாலும் அவர்களின் பெயர் சட்டென மறந்துவிடும். இதுவும் ஒருவிதத்தில் நல்ல விஷயமே.

இதன் பின்னணியில் ஓர் உளவியல் உள்ளது.

ஒருவர்  எவ்வளவு சொல்லியும் கேளாமல் நம்மை ஓர் எல்லைக்கு மீறி மனதளவில் துன்புறுத்தும்போது நாம் அவர்களுக்குத் திரும்ப பதிலடி கொடுக்க நேரிடும் சந்தர்ப்பங்களில் அவர்கள் நம்மை துன்புறுத்தியதின் வலியைவிட நாம் அவர்களுக்குக் கொடுத்த பதிலடியால் அவர்கள் மனம் புண்பட்டிருக்குமே, இன்னும் கொஞ்சம் மென்மையாக சொல்லி இருக்கலாமோ என நினைத்து வருத்தப்படும் அளவு மனது உங்களுக்கு இருந்தால் நீங்களே உண்மையில் நல்லவர். வல்லவர். உயர்ந்தவர்.

எப்படிச் சொன்னாலும் புரிந்துகொள்ளாமல் அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் திரும்பத் திரும்பத் தான் செய்வதையே செய்துகொண்டிருப்பவர்களுக்கு என்ன பெயர் வைத்து அழைப்பது என யோசிக்கும்போது, அவர்களின் உண்மை பெயர்கூட நமக்கு மறந்துவிடும். அவர்களின் முகமும், அவர்கள் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கமும், நம்மை என்னவாக உணர வைக்கிறார்களோ அவை மட்டுமே நினைவில் நிற்கும்.  உண்மையில் அந்த நொடியில் அவர்கள் பெயரற்றவர் ஆகிறார்கள்.

அவர்களின் பெயர்கூட அவர்களுக்கு தகுதி இல்லாமல் வலுவிழந்து போகிறது. ராமு, கோபு, சுப்பு, ரஞ்சனி, ராதிகா போன்றவை வெறும் பெயர்கள் தான். அந்தப் பெயர்களைத் தாங்கிக்கொண்டு இயங்கும் அவர்களின் உடலும் அதை இயக்கும் அவர்களின் மனமும் போற்றுதலுக்கு உரிய தகுதியை இழக்கின்றன. ஓர் ஆன்மா எப்போது போற்றுதலுக்கு உரிய ஆற்றலை இழக்கிறதோ அப்போதே அந்தப் பெயருக்குப் பின்னால் உள்ள சக்தியும் வலுவிழக்கிறது.

அதனால்தானோ என்னவோ நம்மைக் காயப்படுத்தியவர்களின் பெயர்கள் மறந்து போகிறன்றன.

நல்லவர்களுக்கு ஒரு விஷயத்துக்குப் பின்னால் ஏற்படப்போகும் விளைவுகள் தெரிவதால் அவர்கள் மனநிறைவுடன் தெளிவாக இருந்தாலும், சூழல் ஏற்படுத்தும் சலனங்களினால் வருத்தப்படுகிறார்கள்.

ஒரு விஷயத்தின் பின் விளைவுகள் தெரியாமல், தங்கள் மனம்போன போக்கில், மற்றவர்களைப் பற்றிய கவலை ஏதும் இல்லாமல், சந்தர்ப்பம் ஏற்படும்போதெல்லாம் பிறரை காயப்படுத்திக்கொண்டே யாரெல்லாம் வாழ்கிறார்களோ அவர்கள் சுகமாக வாழ்வதைப் போன்ற மாயையில் சிக்கி இருக்கிறார்கள். அவ்வளவே. என்றேனும் ஒருநாள் ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பதை உணரும்போது அவர்களால் அந்த வலியை தாங்கும் சக்திகூட இருக்காது.

இதுதான் நல்லவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்துக்காக வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பதும், கெடுதல் செய்பவர்கள் மகிழ்ச்சியுடனும் வளைய வருவதற்குமான பிரதானக் காரணம்.

கவனித்துப் பாருங்கள். உங்களுக்கும் புரியும். முடிந்தால் உங்களையே உள்ளுக்குள் திரும்பிப் பாருங்களேன்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 652 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon