ஹலோ With காம்கேர் -328: ‘காய்கறி கதம்ப சுண்டல்’

ஹலோ with காம்கேர் – 328
November 23, 2020

கேள்வி: ‘காய்கறி கதம்ப சுண்டல்’ – ஞாயிறு காலை டிபனை இப்படி சாப்பிட்டிருக்கிறீர்களா?

வாரம் முழுவதற்குமாக நாம்  வாங்கும் காய்கறிகளில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டு ஞாயிறு அன்று காலை காய்கறி கதம்ப சுண்டல் போல் செய்து சாப்பிடலாம்.

பெரும்பாலானோர் வீடுகளில் ஞாயிறு அன்று வீட்டில் அனைவரும் இருப்பதால் மதிய சாப்பாடு மிக நிறைவாக (ஹெவியாக) இருக்கும். எனவே காலை டிபனை இதுபோல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

இது மூன்று பேர் உள்ள குடும்பத்துக்கான அளவு.

தேவையான காய்கறிகள்:

இதில் குறிப்பிட்டுள்ள காய்கறிகளைத் தவிர வேறு ஏதேனும் காய்கறிகள் இருந்தாலும், கிழங்கு வகைகளைத் தவிர்த்து உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம்.

கத்தறிக்காய் – 1 அல்லது 2

பீன்ஸ் அல்லது அவரை –  கைப்பிடி அளவு / எண்ணிக்கையில் 25

முருங்கைக்காய் – நறுக்கிய இரண்டு சிறிய துண்டுகள்

கேப்ஸிகம் – பாதி நறுக்கியது

கேரட் – சிறியது 1

கோஸ் – சீவியது கைப்பிடி அளவு

செளசெள – கால் பாகம்

வெங்காயம் – சிறியது 1

தக்காளி – சிறியது 1

பட்டாணி – 4 ஸ்பூன்கள் (முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும்)

தேங்காய் – துருவியது மூன்று ஸ்பூன்கள்

கறிவேப்பிலை – கொஞ்சம்

தேவையான இதர பொருட்கள்:

மஞ்சள் பொடி – ஒரு டீஸ்பூன்

கடலைப் பருப்பு – 10 ஸ்பூன்

கடலை எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு, ஒரு காய்ந்த மிளகாய் – தாளிக்கத் தேவையான அளவு

பெருங்காயப் பொடி – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகு சீரகப் பொடி – இரண்டு டீஸ்பூன்

செய்முறை:

காய்கறிகளை பக்குவமாக நறுக்கிக் கொள்ளவும். மிகவும் சிறியதாக நறுக்க வேண்டாம். பெரிதாக நறுக்கிக்கொண்டால் சுவை கூடும்.

காய்கறிகளில் கொஞ்சம் மஞ்சள் பொடி தூவி நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு குக்கர் பாத்திரத்தில் ஊற வைத்த பட்டாணியுடன், கடலைப் பருப்பை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பட்டாணியும் கடலைப்பருப்பும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட வேண்டும்.

நறுக்கிய காய்கறிகளை (தேங்காய் துருவல் தவிர்த்து) அதில் போட்டு குக்கரை அடுப்பில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

வானலியில் ஒரு ஸ்பூன் கடலை எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.

குக்கரை திறந்து காய்கறிகளை வானலியில் போட்டு கொதிக்க விட வேண்டும். (ஐந்து நிமிடம்)

பின்னர் தேவையான உப்பு போட்டு கலந்து கொதிக்க விடவும். (இரண்டு மூன்று நொடிகள்)

அடுத்து துருவிய தேங்காயுடன், கறிவேப்பிலை, பெருங்காயப் பொடி  போட்டு கொதிக்க விடவும். (இரண்டு மூன்று நொடிகள்)

கடைசியாக மிளகு சீரகப் பொடியை போட்டு காய்கறிகளுடன் நன்கு கலந்து கிளறிவிட்டு கொதிக்க வைக்கவும். (இரண்டு நொடிகள் மட்டுமே. மிளகு சீரகப் பொடியை அதிகம் கொதிக்க வைத்தால் கசந்துவிடும்)

பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டால் நன்கு மூடி வைத்துவிடவும்.

அருமையாக காய்கறி கதம்ப சுண்டல் தயார்.

பத்து நிமிடங்கள் கழித்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.

பச்சையும், மஞ்சளும், சிவப்புமாய் பார்ப்பதற்கே ஜோரா இருக்கும். நீங்களும் சாப்பிட்டுப் பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 492 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari