ஹலோ With காம்கேர் -350: தன்னம்பிக்கை என்பது நாம் அணியும் Coat – ஆ என்ன? (Sanjigai108.com)

 

ஹலோ with காம்கேர் – 350
December 15, 2020

கேள்வி: தன்னம்பிக்கை என்பது நாம் அணியும் ‘கோட்டா’ என்ன?

‘தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி’ என்ற தலைப்பில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளையும் கார்ப்பரேட் நிகழ்ச்சிகளையும் பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கும்.

தன்னம்பிக்கை என்பது ஒரு வாழ்க்கை முறை. அதை எப்படி தனியாக வளர்த்துக்கொள்ள முடியும். தேவையான போது அணிந்து கொள்வதற்கும், தேவையில்லாதபோது கழற்றி மாட்டுவதற்கும் அது ஒன்றும் நாம் அணியும் ‘கோட்’ அல்லவே. நம் உடம்பைப் போர்த்தியிருக்கும் தோல் போன்றது தன்னம்பிக்கை.

நம் எல்லோரிடமுமே தன்னம்பிக்கை இருக்கும். அது அவரவர் வளரும் சூழலுக்கும், கல்வி அறிவுக்கும், பொருளாதார நிலைக்கும், மனோதிடத்துக்கும் ஏற்ப அதன் அளவில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். அவ்வளவுதான்.

ஒரு சிலர் உயர் கல்வி படித்திருப்பார்கள், நல்ல வேலையில் இருப்பார்கள், நல்ல சம்பாத்யமும் இருக்கும், நல்ல குடும்பம், குழந்தைகள் என எல்லாமே இருந்தாலும் அவர்களிடம் தன்னம்பிக்கையின் அளவு குறைவாக இருக்கும். இருக்கலாம்.

ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்கு கட்டப்பட்டிருக்கும் ஒரு கயிற்றில் எந்த பிடிப்பும் இல்லாமல் நடந்து சென்று பார்வையாளர்களைக் கவர்ந்து வாழ்க்கை நடத்தும் ஒரு கழைக்கூத்தாடி சிறுமிக்கு இருக்கும் தன்னம்பிக்கையைவிட குடும்ப வருமானம் லட்சத்தில் இருக்கும் ஒரு நபருக்கு குறைவாக இருக்கலாம்.

பணத்தின் அடிப்படையில் வருவதல்ல தன்னம்பிக்கை. வாழ்க்கை  இப்படித்தான் இருக்கும், வாழ்ந்து கடக்க வேண்டியதுதான் என்ற பக்குவத்துடன் வாழும் அனைவரிடமும் தன்னம்பிக்கையின் அளவு அதிகமாகவே இருக்கும்.

தன்னம்பிக்கை இல்லாதவர்களே கிடையாது. பிறக்கும் ஒவ்வொருவரிடமும் தன்னம்பிக்கை இருக்கும். நிரந்தரத்துக்கும் நிலைதன்மைக்கும் உத்திரவாதம் இல்லாத மனித வாழ்க்கையில் நம் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை இருப்பதால்தான் அடுத்த நாள் குறித்த கனவுடன் கண் மூடி நிம்மதியாக உறங்குகிறோம்.

தன்னம்பிக்கை குறையக் குறைய எதிர்மறை சிந்தனை அதிகமாகி தாழ்வு மனப்பான்மை பெருகிவிடும். அதுவே ஒருவரின் வீழ்ச்சிக்கு வித்திடும்.

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள பயிற்சி எல்லாம் கொடுக்க முடியாது. எனவே அந்தப் பயிற்சிக்கு பணம் செலவழிக்க வேண்டாம்.  நம் சிந்தனையில் கொஞ்சம் மாற்றம் செய்துகொண்டாலே தன்னம்பிக்கையின் அளவு ‘ஜிவ்’வென உயரும்.

‘இரண்டே நாட்களில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி?’ என்ற பயிற்சி வகுப்பில் சேராமல், இரண்டே இரண்டு விஷயங்களில் உங்கள் தன்னம்பிக்கையின் அளவை உயர்த்திக்கொள்ள நான் ஒரு யோசனை சொல்கிறேன். முயன்றுதான் பாருங்களேன்.

இப்படி இருந்தால்தான், இதெல்லாம் கிடைத்தால்தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும், என்னால் கொண்டாட்டமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்ற எண்ணத்துக்கு பதிலாக எனக்குக் கிடைத்திருப்பதை வைத்துக்கொண்டு என்னால் பூரண மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வது நம்மிடம் உள்ள தன்னம்பிக்கையின் அளவை உயர்த்திக்கொள்வதில் முதன்மை பங்கு வகிக்கிறது.

இது 50 சதவிகிதம் உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தும்.

மற்றொன்று நம்மை, நம்மிடம் உள்ளதை மற்றொருவருடன் ஒப்பிடாமல் வாழப் பழகுதல்.

இது மீதமிருக்கும் 50 சதவிகித தன்னம்பிக்கையை கூட்டும்.

பிறகென்ன, ஏற்கனவே உங்களிடம் உள்ள தன்னம்பிக்கையுடன் பூஸ்டராக வந்து சேர்ந்துள்ள இந்த கூடுதல்  தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ்ந்து காட்டி ஜமாயுங்கள். வாழ்த்துகள்!

முயற்சித்துப் பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

டிசம்பர் 24,  2020  வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரை
https://sanjigai108.com/

(Visited 24 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari