ஹலோ With காம்கேர் -351: ‘தன்னம்பிக்கையா, கிலோ என்ன விலை அது?’ (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 351
December 16, 2020

கேள்வி: ‘தன்னம்பிக்கையா, கிலோ என்ன விலை அது?’

இப்படி கேள்வி கேட்பவரா நீங்கள். அப்போ உங்களுக்குத்தான் இந்தப் பதிவு.

தன்னம்பிக்கை என்பது நாம் அணியும் ‘கோட்டா’ என்ன? என்ற தலைப்பில் நான் நேற்று எழுதி இருந்த பதிவில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள பயிற்சி அளிக்கும் நிறுவனங்களில் சேர்ந்து பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக அடிப்படையில் இரண்டு விஷயங்களில் உங்களை மேம்படுத்திக்கொண்டால் நம் ஒவ்வொருவரிடமும் இயற்கையாகவே இயல்பாகவே இருக்கின்ற தன்னம்பிக்கை இன்னும் வலுப்படும் என எழுதி இருந்தேன்.

ஒன்று, இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வது. இரண்டாவது, நம்மை பிறருடன் ஒப்பிடாமல் இருப்பது.

அதற்கு ஒருசிலர்  ‘தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகளில் சொல்லும் விஷயங்கள் கேட்கும்போதும், தன்னம்பிக்கைப் பாடல்களை கேட்கும்போதும், தன்னம்பிக்கை புத்தகங்களை வாசிக்கும்போதும், என்னுடைய ‘ஹலோ வித் காம்கேர்’ தினசரி விடியற்காலை பதிவுகளை படிக்கும்போதும் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது…’ என கொடுத்திருந்த பின்னூட்டங்கள் இன்னும் யோசிக்க வைத்தது. அவர்களுக்கு தெளிவை உண்டாக்கவே இன்றைய பதிவு.

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் பயிற்சி வகுப்புகளாகட்டும், இன்னபிற நுட்பங்களாகட்டும் அந்த நேரத்துக்கு உங்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கும்.

உத்வேகம் கொடுக்கும் ஒரு சினிமாவை பார்க்கும்போது அதில் நடிக்கும் ஹீரோ போல நேர்மையாக வாழ வேண்டும், தவறுகளை தட்டிக்கேட்க வேண்டும், தீயவர்களை அழிக்க வேண்டும் என்றெல்லாம் மனதுக்குள் ஆயிரம் ஆயிரம் கற்பனைகள் உதிக்கும்.

ஆனால் சினிமா பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து உறங்கி விழிக்கும்போது அந்த சினிமாவும் மறந்து போயிருக்கும். நமக்குள் அந்த நேரத்துக்கு தோன்றிய உத்வேகங்களும் காணாமல் போயிருக்கும்.

அடிப்படையிலேயே நீங்கள் நேர்மையாளராக இருந்தால் மட்டுமே நீங்களும் தவறு செய்யாமல் பிறரையும் தவறுகள் செய்ய வைக்காமல் வாழ முடியும்.

அதைத்தான் நேற்றைய பதிவில் நான் சொல்ல வந்தேன்.

உங்கள் தன்னம்பிக்கை எனும் அஸ்திவாரத்தை வலுப்படுத்திக்கொண்டால் தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகளும், ஊக்கம் கொடுக்கும் பாடல்களும், உத்வேகம் கொடுக்கும் புத்தகங்களும் உங்கள் தன்னம்பிக்கையை தட்டிக்கொடுக்கும். அவ்வளவே.

அடிப்படையில் ‘தன்னம்பிக்கை என்றால் கிலோ என்ன விலை?’ என்ற அளவில் இருந்து கொண்டு நீங்கள் எத்தனை வகுப்புகள் சேர்ந்தாலும், எத்தனை பேரின் தன்னபிக்கை உரைகளைக் கேட்டாலும், எத்தனை பாடல்களை கேட்டாலும் அதனால் பலன் கிடைக்காது.

நம் ஒவ்வொருவருக்கும் நம் வீடுதான் சொர்க்கம். அந்த சொர்க்கத்தில் கிடைப்பதை விட்டு வெளியில் சொர்க்கத்தைத் தேடுகிறோம்.

நம் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் மனம் விட்டுப் பேசுதல். அக்கம் பக்கத்தினரிடம் நட்புடன் பழகுதல். குழந்தைகளுடன் குழந்தைகளாக சிரித்துப் பேசி விளையாடுதல். தினமும் ஒரு வேளையாவது குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டு சாப்பிடுதல். குழந்தைகளுடன் அமர்ந்து பள்ளியில் / கல்லூரியில் நடந்த விஷயங்களைப் கேட்டு அறிந்துகொள்ளுதல். கணவன் மனைவி அன்றன்றைக்கு அலுவலகங்களில் நடந்த விஷயங்களை மனம் விட்டுப் பேசுதல். தினமும் கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம் வரை இயற்கை காற்றை சுவாசித்தபடி வாக்கிங் செல்லுதல். தினமும் ஏதேனும் ஒரிரு பக்கங்கள் வாசித்தல், ஒன்றிரண்டு பிடித்த பாடல்களை கேட்டல். மாதம் ஒரு முறை நல்ல திரைப்படம் பார்த்தல் என உங்கள் வாழ்க்கை முறையை சற்று மாற்றிச் செதுக்கிக்கொண்டு வாழ்ந்து பாருங்களேன்.

உங்கள் தன்னம்பிக்கை இறக்கைக் கட்டிக்கொண்டு பறப்பதை நீங்களே உணர முடியும்.

இந்த வாழ்க்கை முறையைதான் நம் முந்தைய தலைமுறையினர்கள் வாழ்ந்து காட்டினார்கள். அவர்களுக்கு யார் தன்னம்பிக்கை வகுப்பை எல்லாம் நடத்தினார்கள். வீட்டு வேலைகளுக்கும், பணியிடத்து வேலைகளுக்கும் இடையிடையே இயல்பாக மனதுக்கு உற்சாகம் கொடுக்கும் விஷயங்களிலும் கவனம் செலுத்தினார்கள்.

பாரம் இழுப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஏலேலோ ஐலசா எனப் பாடிக்கொண்டே வேலை செய்வார்கள். சுமை தெரியாது அவர்களுக்கு.

மாதா மாதாம் கூத்து நடைபெறும். ஊர் மக்கள் கூடி அமர்ந்து ரசிப்பார்கள்.

விழாக் காலங்களில் ஊர் திருவிழா நடக்கும். சொந்த பந்தங்கள் கூடி மகிழ்வார்கள்.

உற்றமும், சுற்றமும் புடைசூழ வாழும்போது அவர்களுக்குள் யானை பலம் உருவாகிவிடும். அந்த பலமே தன்னம்பிக்கை. வாழ்க்கையை பயமில்லாமல் நகர்த்திச் செல்ல உதவும் முக்கியக் காரணியும் அதுவே.

இப்படி முந்தைய தலைமுறையினரின் வாழ்க்கைமுறையே தன்னம்பிக்கையோடு பிண்ணிப் பிணைந்தே இருந்தது.

வாழ்க்கைமுறை வேறு. தன்னம்பிக்கை வேறு என அவர்கள் பிரித்து வாழவில்லை.

எப்போது குடும்பம் என்ற அமைப்பு தனித்தனியாக நான், என் குடும்பம், என் குழந்தைகள் என சின்ன சின்னதாக பிரிந்து இடைவெளி விட்டு மாற ஆரம்பித்ததோ அன்றே வாழ்க்கை முறை வேறு தன்னம்பிக்கை வேறு என்ற நிலை உருவாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்போது அந்த இடைவெளி வீட்டுக்குள்ளேயே ‘என் அறை, என் மகள் அறை, என் மகன் அறை’ என்று இன்னும் அதிகரித்து வருகிறது. பத்து பன்னிரெண்டு வயது குழந்தைகளுக்கு எதற்காக தனி அறை. அவர்களுக்கு இரவில் ஏதேனும் பயமாக இருந்தால் அதே மன உளைச்சலுடன் தான் இரவைக் கழிக்க வேண்டும். அப்பா அம்மாவின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டு உறங்கும்போது பயமாவது ஒன்றவாது. உலகையே வென்றுவிடலாம் என்ற அசாத்திய தைரியம் உருவாகும் அல்லவா? அதையெல்லாம் இந்த தலைமுறை குழந்தைகள் இழக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

எல்லா குடும்பங்களிலும் குழந்தைகளுக்கு தனி அறை இல்லை என்றாலும் பெரும்பாலும் மனதளவில் தனித்தனியாக பிரிந்து தங்களை ‘ப்ரைவேட்’ வளையத்தை பொருத்திக்கொண்டுதான் வாழப் பழகுகிறார்கள். பிரச்சனை முற்றும்போது அவர்கள் ‘பப்ளிக்’ வளையத்துக்கு தள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்தில் பெற்றோர்களால் எதுவும் செய்ய முடியாமல் போகிறது.

எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் இருப்பதைப் போல், இதிலும் விதிவிலக்குகள் இருக்கலாம். இருக்கிறார்கள்.

தன்னம்பிக்கை என்பது ஒரு வாழ்க்கை முறை. அதற்குப் பயிற்சி எடுத்துக்கொள்ளும் நிலை உருவானதைத்தான் நான் வேதனையுடன் நேற்று பகிர்ந்திருந்தேன்.

அடிப்படையில் தனிநபராக உங்கள் தன்னம்பிக்கையை வலுப்படுத்துங்கள். பிறகு உங்கள் குடும்பத்தில் தன்னம்பிக்கைச் சூழலை உருவாக்குங்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக உங்களைச் சுற்றி உள்ள இந்த சமுதாயத்துக்கும் பரவ ஆரம்பிக்கும்.

முயற்சித்துப் பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

டிசம்பர் 24,  2020  வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரை
https://sanjigai108.com/

(Visited 15 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari