ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 16
ஜனவரி 16, 2021
மாற்றம் ஒன்றே மாறாதது – ஆனால்
தொடர்ச்சியாய் மாறிக்கொண்டே இருக்க நினைப்பது
ஒருவித மனநோய்!
ஒரே ஒரு தையல் மிஷினை வைத்துக்கொண்டு தைத்துக்கொண்டிருக்கும் தையல்காரரை கவனித்திருக்கிறீர்களா? பெரும்பாலும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலைச் சுற்றி நிறைய தையல்காரர்கள் இப்படி ஒற்றை மிஷினுடன் மரத்தடி நிழலில் ஓயாமல் தைத்துக்கொண்டிருப்பதைக் காணலாம். அவர்களைச் சுற்றி கூட்டம் நின்றுகொண்டே இருக்கும். ஒரு சிலர் காரில் கூட கொண்டு வந்து காத்திருந்து தைக்கக் கொடுத்துவிட்டுச் செல்வார்கள்.
அவர்கள் ஆடைகளுக்கு மேல் தையலும் அடிப்பார்கள். கிழிந்ததையும் தைத்துக்கொடுப்பார்கள். சுடிதாரும் தைப்பார்கள். ஆண்களின் சட்டை பேண்ட்டுகளையும் தைப்பார்கள். மொத்தத்தில் சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள்.
அருகில் அவர் மனைவி அமர்ந்து ஆடைகளுக்கு பட்டன் தைப்பது, தைத்த ஆடைகளை ஐயர்ன் செய்வது என உதவி செய்துகொண்டிருப்பார்.
அப்படி ஒருவரிடம் நானும் புது சுடிதாருக்கு மேல் தையல் போடக் கொடுத்திருந்தேன். அன்று கூட்டம் இல்லாததால் பேச்சுக் கொடுத்தேன்.
ஏன் தனி கடை போட்டால் நிறைவாக சம்பாதிக்கலாம் அல்லவா?
‘இதில் வரும் வருமானமே போதுமானதாக இருக்கிறது. மனைவியும் காலையில் இரண்டு வீடுகளுக்குச் சென்று சமைத்துக்கொடுக்கிறாள்’
‘ஓ, அப்படியா?’
‘குழந்தைகள் என்ன செய்கிறார்கள்?’
‘ஒரு பெண். எம்.பி.ஏ படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் இப்போதுதான் சேர்ந்திருக்கிறாள்… ஒரு மகன் டிப்ளமோ முடித்துவிட்டு பி.ஈ பார்ட் டைம்ல படித்துக்கொண்டே வேலைக்குச் செல்கிறான்…’
எனக்கு வியப்புக்கு மேல் வியப்பு. ஒற்றை தையல் மிஷினை வைத்துக்கொண்டு ஓயாமல் உழைத்து தன் இரண்டு பிள்ளைகளையும் நல்ல நிலைக்கு ஆளாக்கியவரை வியப்பில் அசந்துபோய் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
‘ஆமாம் அம்மா, என் பெண்ணிடமும் சொல்லி இருக்கிறேன். நம்ம காலில் நாம நிற்கணும். வேலைக்குப் போகணும். நாலு காசு நம்ம கையில் இருக்கணும்… யாரையும் நம்பி நாம் இருக்கக் கூடாது…’ என்று அடுக்கிக்கொண்டே போனார்.
‘உங்கள் பிள்ளைகள் இரண்டு பேரும் நல்ல நிலைக்கு வந்துட்டாங்களே… நீங்களும் கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே…’
‘அட, அது அவங்களோட வாழ்க்கை… இது என்னோட வாழ்க்கை அம்மா…’
இவரது வாழ்க்கைக் குறித்தப் புரிதல் பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவரையும் அவர் மனைவியையும் பாராட்டி வாழ்த்திவிட்டு வந்தேன்.
இந்த தையல்காரரின் திறமை பெரிய பெரிய எக்ஸ்போர்ட் கார்மெண்ட்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் தையல்காரர்களுக்கு இருப்பதில்லை. காரணம், அவர்கள் ஒரே வேலையையே செய்துகொண்டிருப்பார்கள். அதாவது பட்டன் தைப்பவர்கள் பட்டன் மட்டுமே தைத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அதில் மட்டுமே அனுபவம் இருக்கும். அளவு எடுத்து வெட்டுபவர்கள் அதையே செய்துகொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அது மட்டுமே தெரியும். வெட்டியதை தைத்துக்கொடுப்பவர்களும் அப்படியே. அவர்களுக்கும் வேறெதும் தெரியாது.
இப்படி அவரவர்கள் செய்துகொண்டிருக்கும் பணியை விட்டால் வேறெதுவும் தெரியாது. ஆனால் ஒன்றிரண்டு தையல் மிஷினை வைத்துக்கொண்டு ஜீவனம் நடத்துபவர்களுக்கு எக்ஸ்போர்ட் கார்மெண்ட்ஸ் நிறுவனமே வைத்து நடத்தும் அளவுக்கான அனுபவம் இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் பிள்ளைகள் தலையெடுத்து முயற்சித்தால் அதையும் திறம்பட செய்வார்கள்.
எந்த ஒரு செயலிலும் நம் முழு மனதையும், உழைப்பையும் அர்பணித்து செய்யும்போது அதனால் கிடைக்கின்ற நேரடிப் பலன் நேர்மறையாக இருந்தாலும், எதிர்மறையாக இருந்தாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்.
காரணம் நம் அர்பணிப்பு உணர்வு கொடுக்கின்ற ஆத்ம திருப்தி.
எனக்குத் தெரிந்த இரண்டு இளைஞர்களை அறிமுகப்படுத்துகிறேன்.
ஒரு இளைஞர் பன்னாட்டு நிறுவனத்தில் ஐடி துறையில் வேலைக்குச் சேர்ந்து அதே நிறுவனத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக பணி புரிந்து வருகிறார். உயர் பதவியில் இருக்கிறார். அந்த நிறுவனத்தில் பத்து வருடங்களுக்கு மேல் பணிபுரிபவர்களை ஷேர் ஹோல்டராகவும் ஆக்கிக்கொள்கிறார்கள். அந்த சலுகையையும் பெற்றிருக்கிறார். முப்பத்தைந்து வயதில் நிறைவான வாழ்க்கை வாழ்வதாகச் சொல்கிறார்.
மற்றொரு இளைஞர் என்னிடம் புரோகிராமராகப் பணி புரிந்து இதோடு 10 நிறுவனங்களுக்கும் மேல் மாறிவிட்டார். அவரும் நல்ல சம்பளம் பெறுகிறார். இன்னும் சொல்லப் போனால் 10 வருடங்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவரைவிட அதிகமாகவே. ஆனால் முகத்தில் எப்போதும் ஒரு சலிப்பு. பேச்சும் எப்போதும் பணம், பதவி குறித்தே.
பொதுவாகவே ஐடி நிறுவனங்களில் பணி புரிந்துவிட்டு எப்போதெல்லாம் வேறு நிறுவனங்களுக்கு மாறுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்கு Employee Verification வரும். அவர்கள் எப்படி பணி புரிந்தார்கள், எந்த வருடம் பணிபுரிந்தார்கள், அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு அந்த நிறுவனத்தின் பொறுப்பில் உள்ளவர்கள் பதில் சொல்லி கையெழுத்திட வேண்டும். அவர்கள் கொடுக்கும் தகவல்களுக்கு ஏற்பவே அவர்களுக்கு அந்தப் பணி உறுதி செய்யப்படும்.
அதுபோலதான் நான் இரண்டாவதாகக் குறிப்பிட்ட இளைஞர், இப்போது ஒரு நிறுவனத்துக்கு மாற இருப்பதாக தகவல் கொடுத்துள்ளதால் அவருக்கான ‘எம்ப்ளாயி வெரிஃபிகேஷன்’ இமெயிலிலும் தொலைபேசியிலும் முடித்துக்கொடுத்தேன்.
இந்த இரண்டு இளைஞர்களில் முதலாமானவர் எப்போது அந்த நிறுவனத்தை விட்டு வெளியே வந்தாலும் அவரால் அவர் செய்து வந்த பணி சார்ந்து ஒரு பிசினஸ் செய்ய முடியும். காரணம் ஒரே நிறுவனம். அவர் செய்கின்ற பணி சார்ந்த அனுபவங்கள் மட்டுமில்லாமல் முழுமையான நிர்வாகத் திறமையும் அவருக்குள் தானாகவே உள்ளிறங்கும். மனிதர்களை கையாளும் ஆளுமையும் தானாகவே கைகூடும். அவரை அறியாமலேயே அவருக்குள் ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கும். அதுவே அவர் செய்கின்ற எல்லா செயல்களிலும் நேர்மறை பலனை உருவாக்கிக்கொடுக்கும்.
ஆனால் இரண்டாமானவர் இன்னும் எத்தனை நிறுவனங்கள் மாறினாலும் முழுமையான அறிவை பெற்று ஒரு பிசினஸ் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் ஒவ்வொரு நிறுவனத்திலும் அவர் பணிபுரியும் களமும் தளமும் வேறுபடும். சம்பளத்தில் வேண்டுமானால் ஏற்றங்கள் இருக்கலாம். மற்றபடி ஒரு நிறைவான மனதும் ஆத்ம திருப்தியும் கிடைப்பது கடினம்.
மாற்றங்களையே மனதில் வைத்துக்கொண்டு செய்யும் வேலையில் முழு ஈடுபாடு கிடைப்பது கடினம். ஆத்ம திருப்தியின் சுவையை அனுபவிக்க எந்த ஒரு செயலிலும் 100 சதவிகித அர்பணிப்பைக் கொடுத்துத்தான் பார்ப்போமே.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP