புத்தக வாழ்த்து!
நான் போகிறபோக்கில்
சொல்லவில்லை…
நானாகவும் எதையும்
சொல்லவில்லை…
நிறைய R&D
செய்துவிட்டுத்தான்
சொல்கிறேன்…
‘நிறைய எழுதுங்க…’
‘தொடர்ச்சியா எழுதுங்க…’
‘அருமையா எழுதறீங்க… விடாமல் எழுதுங்க…’
என்று எனை வாழ்த்துபவர்கள்
பெரும்பாலும் ஃபேஸ்புக்கில் மட்டுமே
என் எழுத்துகளை
வாசிப்பவர்களாக இருக்கிறார்கள்…
என் புத்தகங்களை
தேடித் தேடி வாங்குபவர்களும்…
ஒரு புத்தகம் கூட விடாமல்
‘இந்தப் புத்தகம்
எழுதிட்டீங்களா?
‘அந்தப் புத்தகம்
வெளியிட்டுட்டீங்களா?’
என கேட்டு கேட்டு
வாங்கி வாசிப்பவர்களும்…
தன் வீட்டு லைப்ரரியில்
என் புத்தகங்களுக்கு என
தனித்தட்டு வைத்திருப்பதை
புகைப்படம் எடுத்து அனுப்பி
மகிழ்வித்து மகிழ்பவர்களும்…
‘நிறைய எழுதுங்க…’ என்றோ
‘தொடர்ச்சியா எழுதுங்க…’ என்றோ
‘அருமையா எழுதறீங்க… விடாமல் எழுதுங்க…’ என்றோ
ஒருபோதும் வாழ்த்துவதில்லை…
அவர்களுக்கு அது சம்பிரதாய
வாழ்த்தாக இருக்கிறது…
புத்தக வாழ்த்தைவிட
புத்தகத்தை வாங்கி
பொக்கிஷமாக்குவது
பயன்படுத்துவது
பரிசளிப்பது
அவர்களுக்கு
மிகவும் பிடித்திருக்கிறது…
அச்சுப் புத்தகமோ
இ-புத்தகமோ
எதுவானாலும்
அதை அவர்கள்
காசுகொடுத்து
வாங்கும்போதும்…
அவற்றை முனைந்து படித்து
வாழ்க்கையில் பின்பற்றும்போதும்…
அவர்கள் மனம்
என்னையும்
என் படைப்புகளையும்
ஆசிர்வதித்தபடியே
கடந்து செல்கிறது…
அடுத்தத் தலைமுறைக்கும்
‘சொச்சம்’ வைத்துவிட்டே
வாழ்த்திச் செல்கிறார்கள்…
ஆனால் என்ன…
அவர்கள் தங்கள்
ஆசிர்வாதத்தை
வாழ்த்தை
மகிழ்ச்சியை
வார்த்தைகளால் சொல்வதில்லை…
மனதால், உணர்வால்,
சிந்தனையால் செயலால்
என்னுள் கடத்துகிறார்கள்…
நானும் சப்தமில்லாமல்
கொடுப்பதை கொடுத்தபடி
உள்ளேவாங்கிப் போட்டு
எனை உற்சாகப்படுத்திக்கொண்டு
அடுத்ததை செதுக்க ஆரம்பிக்கிறேன்….
அவர்களுக்கும் தெரியாது
எனக்கும் தெரியாது
எந்த புள்ளியில்
அவர்கள் ஆசிர்வதிக்கிறார்கள் என்பதும்
நான் பெறுகிறேன் என்பதும்!
ஆமாம்…
நான் போகிறபோக்கில்
சொல்லவில்லை…
நானாகவும் எதையும்
சொல்லவில்லை…
நிறைய R&D
செய்துவிட்டுத்தான்
சொல்கிறேன்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜனவரி 17, 2021
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai