அமெரிக்காவில் புத்தகங்கள் வாசிக்கும் மக்களை நிறைய பார்க்க முடிகிறது. விமான நிலையங்களில், விமானப் பயணத்தில், வரிசையில் காத்திருக்கும் இடங்களில் எல்லாம் மக்கள் கையில் கனமான புத்தகங்களுடன்தான் காட்சி தருகிறார்கள். வயது வித்தியாசம் இன்றி அனைத்து வயதினரிடமும் வாசிக்கும் வழக்கம் உள்ளது.
இப்போது பெருகியுள்ள டிஜிட்டல் யுகத்தில் கையில் ஐபேட் அல்லது டேப்லெட் வைத்துக்கொண்டு வாசித்தபடியே இருக்கிறார்கள். ஸ்மார்ட்போனில் வாசிப்பவர்கள் அதிகம் தென்படுவதில்லை.
ஷாப்பிங் மாலுக்குச் சென்றால் ஓரிடத்தில் பொருந்தி உட்காரும் வயதில் உள்ள குழந்தைகள் கைகளில்கூட புத்தகங்களைப் பார்க்கலாம். குட்டிக் குழந்தைகளின் பிஞ்சு கைகளில் குட்டிக்குட்டிப் புத்தகங்கள். ஷாப்பிங் கார்ட்டுகளில் மேல் தட்டில் குழந்தைகளை உட்காரவைத்துத் தள்ளியபடி பொருட்களைத் தேடி எடுத்து வாங்கிச் செல்லும் ஆண்களையும் பெண்களையும் நிறைய பார்க்கலாம்.
ஸ்ட்ராலர்களில் சாய்ந்து அமர்ந்து செல்லும் குழந்தைகளிடம் கூட புத்தகங்களை கொடுத்துவிடுகிறார்கள். அந்தக் குழந்தைகளால் குட்டிப் புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பக் கூட முடியாது என்றாலும் யாரும் அது குறித்து கவலைப்படுவதில்லை. ஸ்டாலரில் அமர்ந்தபடி அப்படியும் இப்படியும் புத்தகத்தை தள்ளித் தள்ளி விளையாடியபடி வேடிக்கைப் பார்க்கும் குழந்தைகள் கொள்ளை அழகு. ஆனால் என்ன யாரையும் புகைப்படம் எடுக்கக் கூடாது எனும் நியதியால் நம் கண்களால் மட்டுமே புகைப்படமெடுத்து பொக்கிஷமாக்கிக்கொள்ள முடியும்.
பில்லிங் செக்ஷன்களில் இரண்டு வகை.
ஒன்று, நாமாகவே வாங்கிய பொருட்களை ஸ்கேன் செய்து கார்ட் மூலமோ அல்லது கேஷாகவோ கட்டணம் செலுத்தி பொருட்களை எடுத்துச் செல்லலாம்.
இரண்டாவது, பில்லிங் கவுண்ட்டர்கள் இருக்கும். அங்கு நாம் வாங்கிய பொருட்களைக் கொடுத்துவிட்டால் அவர்கள் பில் போட்டு கொடுப்பார்கள். நாம் கார்ட் மூலமோ அல்லது கேஷாகவோ கட்டணம் செலுத்தி பொருட்களை எடுத்துச் செல்லலாம்.
அங்கு பில்லிங் செக்ஷனில் குழந்தைகளைக் கவர மூன்று வரிசையில் பொருட்களை அடுக்குகிறார்கள். முதல் வரிசையில் விதவிதமான சாக்லெட் வகைகள், இரண்டாவது வரிசையில் விளையாட்டுப் பொருட்கள், மூன்றாவது வரிசையில் புத்தகங்கள்.
விளையாட்டுப் பொருட்கள் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளும், புத்தகங்களின் அட்டையில் வரையப்பட்டிருக்கும் பொம்மைகளும் ஒன்றை ஒன்று மிஞ்சும் பேரழகில் ஜொலிக்கும். விளையாட்டு பொம்மைகளே ஓவியமாக வரையப்பட்டிருக்கிறதோ என தோன்றச் செய்யும்.
இது ஒரு வியாபார யுத்தியே. நாமாக பில் போட்டுக்கொண்டாலும், பில்லிங் கவுண்ட்டரில் பில் போட்டாலும் சில நிமிடங்கள் ஆகும் அல்லவா? அப்போது கூடவே வருகின்ற குழந்தைகள் எத்தனை நேரம்தான் சும்மா உட்கார்ந்திருக்கும் சொல்லுங்கள். கண்களில்படுகின்ற பொம்மைகளையோ, சாக்லெட்டுகளையோ அல்லது புத்தகங்களையோ வாங்கித்தரச் சொல்லி கேட்குமல்லவா?
ஆக ஷாப்பிங் மாலை விட்டு வெளியே செல்லும் கடைசி நிமிடம் வரை வாடிக்கையாளரை ஏதேனும் ஒன்றை வாங்கிச் செல்லத் தூண்டும் சிறு யுக்தி.
ஆனால் எந்தக் குழந்தையும் பெருங்குரல் எடுத்து அழுதே பார்த்ததில்லை. பெரியவர்களே அடுத்தவர்களுக்குத் தொந்திரவாக இல்லாதவாறு மிக மென்மையாக பேசிக்கொள்கிறார்கள். குழந்தைகளின் சிணுங்கலோ, அழுகை சப்தமோ கூட வெளியில் கேட்பதில்லை. இத்தனைக்கும் அவர்கள் குழந்தைகள் அடக்குவதெல்லாம் கிடையாது. அப்படியே நியதிகளை ஊட்டி வளர்க்கிறார்கள்.
குழந்தைகள் கைகளிலேயே புத்தகங்கள் இருக்கும்போது பெரியவர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? பெரியவர்களைப் பார்த்துத்தானே குழந்தைகள் வளர்கிறார்கள்.
புத்தகங்களே அழகுதான்!
அதிலும்…
புத்தகத்தை குறுகுறுவென
பார்த்துப் படிக்கும்
குழந்தைகளின் கண்களும்
அடங்காத புத்தகத்தை
அணைத்துப் பிடிக்கும்
பிஞ்சு கைகளும்
பார்க்கப் பார்க்கப் பேரழகு!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 3, 2022 | வியாழன் | இந்திய நேரம் காலை 6 மணி