அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் புன்னகையுடனேயே காட்சியளிக்கிறார்கள். சாலையில் நடந்து செல்லும்போது நமக்கு முன் பின் அறிமுகமாகாதவர்கள் கூட Hai Good Morning என்றோ Have a Nice Day என்றோ சொல்லிக்கொண்டு சிரித்த முகத்துடன் கடந்து செல்கிறார்கள். நம்மிடம் திரும்ப ஒரு புன்னகையையும் முகபாவனையையும் எதிர்நோக்குவதில்லை. பொதுவாகவே சற்று வேகமாக நடக்கும் வழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
சாலை விதிமுறைகளை பெரும்பாலும் 100% பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இரவில் 12 மணிக்கு கார் ஓட்டி வரும்போதுகூட சாலையில் யாருமே இல்லை என்றாலும் டிராஃபிக் லைட்டின் சிவப்பு விளக்குக்கு மதிப்பளிக்கிறார்கள்.
அதுபோல சாலையில் யாரேனும் கடந்து செல்ல நிற்கிறார்கள் என்றால் அங்கு டிராஃபிக் லைட்டுகள் இல்லை என்றாலும் கார் ஓட்டுபவர்கள் வேகத்தைக் குறைத்து காரை நிறுத்தி பாதசாரிகள் சாலையைக் கடந்த பின்னரே காரை எடுக்கிறார்கள்.
பள்ளி சிறுவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சாலையில் நின்று கொண்டிருந்தால், அந்த வாகனங்களில் இருந்து சிவப்பு நிற ஒளிரும் விளக்குகள் ஒளிரத் தொடங்கும். அதைப் பார்த்தவுடன் பின்னால் வருகின்ற வாகனங்கள் நின்று விடுகின்றன. சிவப்பு நிற ஒளிரும் விளக்கு அணைக்கப்பட்டு பள்ளி வாகனம் கிளம்பிச் சென்ற பிறகே பின்னால் உள்ள வாகனங்கள் கிளம்புகின்றன. இருவழி சாலையில் இரு திசையிலும் செல்லும் வாகனங்கள், பள்ளி வாகனங்கள் நின்றுகொண்டிருக்கும் இடங்களில் நின்று விட வேண்டும். அதாவது பள்ளி வாகனத்துக்கு பின்னாலும், எதிர்திசையிலும் வருகின்ற வாகனங்கள். சிறுவர்கள் பத்திரமாக சாலையைக் கடந்து செல்லும்வரை பொறுமை காக்கிறார்கள்.
பெரும்பாலும் நாய் பூனை என ஏதேனும் செல்லப் பிராணிகளை வளர்க்கிறார்கள். அமெரிக்க வீடுகளில் ஒன்றுக்கு இரண்டாக வளர்ப்புப் பிராணிகள் நடமாடுகின்றன. வாக்கிங் செல்லும்போது, கார் பயணத்தில், ஷாப்பிங் மால்களில் பொருட்கள் வாங்கும் இடங்களுக்குத் தங்கள் செல்லப் பிராணிகளை கூடவே அழைத்துச் செல்கிறார்கள். நாய்கள் பெரும்பாலும் ஒன்று நம் உயரத்தைத் தொடும்படி ஒய்யாரமாய் மிரட்டுகின்றன அல்லது மிக சிறியதாக சப்பை மூக்குடன் பொம்மை நாய் போல இருக்கின்றன.
வாக்கிங் செல்லும்போது இளம் தாய்களும், இளம் தந்தைகளும் ஸ்ட்ராலரில் குழந்தைகளை வைத்துத் தள்ளிக்கொண்டு வாக்கிங் செல்வதைக் காண முடிகிறது.
மேலும், ஒரு நாயுடனோ அல்லது இரண்டு நாய்களுடனோ வாக்கிங் வருபவர்களை அதிகம் பார்க்க முடிகிறது. அறிமுகம் ஆகாத நம்மைப் பார்த்தால் கொஞ்சமாகக் குறைத்து செல்லமாக நம் மீது எகிறுவதைப் போல வரும்போது நமக்கு முகம் வெளிறிப் போகும். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்காமல் நம்மை தூரத்தில் பார்த்துவிட்டால் அவர்களே நாயை இழுத்துக்கொண்டு தள்ளி நடக்கிறார்கள் சிரித்த முகத்துடன்.
தங்களுக்காக வாக்கிங் செல்கிறார்களா அல்லது நாய்களுக்காக வாக்கிங் வருகிறார்களா என்று தெரியாத அளவுக்கு அதற்குத் தேவையானதை எல்லாம் எடுத்துக்கொண்டு வாங்கிங் செல்கிறார்கள். நம்மூர் போல கண்ட இடங்களில் எல்லாம் அவை சிறுநீர் கழிப்பதில்லை. அதற்கும் பயிற்சி கொடுத்தே வளர்க்கிறார்கள்.
வீடுகளில் வளர்க்கும் பூனைகளுக்கு அவை இயற்கை உபாதைகளை தீர்த்துக்கொள்ள ஒரு செவ்வக வடிவிலான அடர்த்தியான வாய் அகன்ற பைபோன்ற அமைப்பில் அதற்காகவே விற்கப்படும் மண்ணை போட்டு ஓரிடத்தில் வைக்கிறார்கள். அவை அதன் மீதேறி தங்கள் இயற்கைக் கடன்களை தீர்த்துக்கொண்டு கீழிறங்குகின்றன. அதுபோல அவை விளைவாடுவதற்காக நம் வீடுகளில் பிறந்த குழந்தைகளின் தூளி, ஊஞ்சல் இவற்றில் கட்டுவோமே கிளுகிளுப்பை அதுபோன்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கட்டுகிறார்கள். அவை எம்பிக் குத்து விளையாடுகின்றன.
ஒருமுறை ஏகாந்தமாக வாக்கிங் சென்றுவிட்டு வந்துகொண்டிருந்தேன். அப்படி என்ன ஏகாந்தம் என நினைக்கிறீர்களா? சென்னையில் தெருவில் இறங்கி வாக்கிங் செல்வதில்லை. காரணம் ஒவ்வொரு தெருவிலும் குவிந்திருக்கும் குப்பைகளுடன் குப்பை தொட்டி நாற்றமும், நாய் தொல்லையும். நன்கு பழக்கமான நம் தெரு நாய்களே நம்மைக் கண்டால் மட்டும் குரைத்து ஊரைக் கூட்டும். திருடனைக் கண்டால் வாலை சுருட்டிக்கொண்டு படுத்திருக்கும். அது என்ன டெம்ப்ளேட்டோ தெரியவில்லை. இதுபோல பல பிரச்சனைகளால் மொட்டைமாடிதான் என் வாக்கிங் ஸ்பாட்.
ஆனால், அமெரிக்காவில் தூசு கூட படிய பயப்படும் படுசுத்தமான சாலையில் கரும் பச்சை நிறத்திலான மரங்கள், இளம் பச்சை நிறத்திலான மரங்கள், ஆரஞ்சுக்கும் மஞ்சளுக்கும் இடையேயான நிறத்திலான இலைகளைக் கொண்ட மரங்கள் இவற்றுடன் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பிங்க், ரோஸ் என பல வண்ணங்களில் பூக்களையும், ஆங்காங்கே பழுத்துத் தொங்கும் பழங்களையும் பார்த்தவாறே நடக்கும்போது ஒரு மனநிறைவு உண்டாகுமே, அதைத்தான் நான் ஏகாந்தம் என்கின்றேன்.
அப்படியான ஒரு மனநிறைவுடன் வாக்கிங் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன். எல்லா வீடுகளின் கரேஜும் மூடப்பட்டிருந்தன. கரேஜ் (Garage) என்பது அமெரிக்க வீடுகளில் காரை நிறுத்துவதற்கான இடம். அது வீடுகளின் முன்பக்கம் இருக்கும். பெரிய சைஸ் ஷட்டர் போட்டிருப்பார்கள்.
அங்கு எல்லா வீடுகளும் ஒன்றுபோல தோற்றமளிக்கும். ஏற்றத்தாழ்வுகளே கிடையாது. எல்லா வீடுகளிலும் வாஷிங் மெஷின், டிஷ்வாஷர், மைக்ரோவேவ் என எல்லாமே இருக்கும். தண்ணீர் போல கேஸும் பைப் வழியாக வரும். சிலிண்டர் எல்லாம் கிடையாது. சிலிண்டர் தீர்ந்துபோனால் மாற்ற வேண்டும் என்கின்ற அவஸ்த்தை கிடையாது.
சரி சரி விஷயத்துக்கு வருகிறேன். நாய் கதை என்னாயிற்று என நினைப்பது புரிகிறது.
அப்போது ஒரு வீட்டின் திறந்திருந்த கரேஜில் இருந்து நாய் ஒன்று குரைத்துக்கொண்டே எனை நோக்கி வந்தது. ஆளுயர நாய் நடந்து வந்தாலே ஓடி வருவதைப் போல் இருக்கும். ஓடி வந்தால் பாய்ந்து வருவதைப் போலல்லவா இருக்கும்?
இரத்தம் உறைந்ததைப் போல் இருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஓடுவதா? நிற்பதா? கதறுவதா? ஒன்றுமே புரியவில்லை.
கண்களை இறுக மூடிக்கொண்டேன். ‘முருகா முருகா முருகா’ என வாய் முணுமுணுத்தது.
’சாரி… சாரி… சாரி’ என்ற குரல் கேட்டு கண்களைத் திறந்தேன். அமெரிக்கர் ஒருவர் நாயைப் பிடித்துக்கொண்டு என் முன் நின்றிருந்தார். ஆயிரம் முறை சாரி கேட்டிருப்பார்.
சாதாரணமாகவே அமெரிக்கர்கள் பேசுகின்ற ஆங்கிலத்தை நிதானமாகக் கேட்டால்தான் புரிந்துகொள்ள முடியும். பதற்றத்தில் அவர் பேசும் ஆங்கிலத்தை முழுமையாக புரிந்துகொள்ள முயற்சித்தேன்.
கரேஜ் கதவைத் திறந்து நாயுடன் காரில் ஏற முற்பட்ட தருணத்தில் ஒரு மில்லி செகண்ட் இடைவெளியில் நாய் என்னை நோக்கி ஓடி வந்துவிட்டதாக சொன்னார். நாய்க்கு தடுப்பு ஊசிகள் போட்டிருப்பதாகவும், எதுவும் ஆகாது எனவும் ஆறுதல் சொன்னார்.
யாருக்கு எதுவும் ஆகாது? நாய்க்கா, எனக்கா? என்று நினைத்துக்கொண்டு ஒருதுளியும் அடங்காத பதட்டத்தில் இருப்பிடம் நோக்கி நடந்தேன்.
நாயைத் திட்டினாரோ அல்லது பாடம் எடுத்தாரோ தெரியவில்லை. நாயுடன் ஏதோ வேகமாக பேசிக்கொண்டே நகர்ந்தார் அவர்.
அடுத்த இரண்டு மூன்று தினங்கள் நோ வாக்கிங். ஆனால் ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்குமா? இருக்காதே. போலவே, நடந்த கால்களும் சும்மா இருக்குமா?
மீண்டும் வாக்கிங். ஆனால் ஏகாந்தம் கொஞ்சம் குறைவாக. சுற்றும் முற்றும் நாய் இருக்கிறதா என பார்த்தபடி.
நாடு விட்டு நாடு வந்தாலும் நாய்க்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம்தான் போல!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 4, 2022 | வெள்ளி | இந்திய நேரம் காலை 6 மணி