அமெரிக்காவில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவுமுறையைப் பற்றி சொல்லியாக வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களும் நண்பர்களைப் போல பழகுகிறார்கள். ஆசிரியர்களை பெயர் சொல்லிக் கூட அழைக்கிறார்கள். முதல் வகுப்பில் இருந்து கல்லூரி வரை இப்படித்தான். பெயர் சொல்லி அழைப்பதினால் அவர்களுக்குள் மரியாதை இல்லாமல் இல்லை. பள்ளியில் ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருவதற்கு ஒரிரு வாரங்களுக்கு முன்பில் இருந்தே ஆசிரியர்கள் உற்சாகக் கடிதம் எழுதி ஊக்கமளிக்கிறார்கள்.
பாடம் எடுப்பதுடன் அவர்கள் மாணவர்களின் மனநிலையை நன்றாக புரிந்துகொள்கிறார்கள். ஏதேனும் வித்யாசமாக இருந்தாலோ அல்லது பேசினாலோ பள்ளி கல்லூரிகளில் இதற்காகவே பணி அமர்த்தப்பட்டிருக்கும் ஆலோசர்களிடம் அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் மாணவர்களுடன் மனம் விட்டுப் பேசுகிறார்கள். பிரச்சனை பெரிதாக இருந்தால் பெற்றோரை அழைத்து வரச் சொல்கிறார்கள். பேசி தீர்த்து வைக்கிறார்கள் அல்லது முளையிலேயே பிரச்சனையை கண்டறிந்து பெரிதாகாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
வயதில் மூத்த பெரியோர்கள் தங்கள் பேரன் பேத்திகளை ஸ்ட்ராலரில் வைத்து தள்ளியபடி கடைகளுக்கும் மற்ற இடங்களுக்கும் வருவதை நிறைய பார்க்க முடிகிறது. யார் சொன்னது தாத்தா பாட்டி உறவெல்லாம் இந்தியாவில் மட்டுமே சிறப்பு என்று. இங்கு பள்ளிகளில் ‘கிராண்ட் பேரண்ட்ஸ் டே’ என்ற சிறப்பு தினத்தை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் தங்கள் தாத்தா பாட்டிகளை அழைத்துக்கொண்டு மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். தாத்தா பாட்டி இல்லாதவர்கள் அல்லது வரக்கூடிய சூழலில் இல்லாதவர்கள் தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களின் தாத்தா பாட்டிகளை அழைத்துச் செல்கிறார்கள்.
‘வேலன்டைன் டே’ அன்று ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் அன்பைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் விதமாக வாழ்த்து அட்டையை பரிமாறிக்கொள்கிறார்கள். பெரும்பாலும் தாங்களே தங்கள் கைகளால் வாழ்த்தை எழுதுகிறார்கள். ஆனால் நம் ஊரில்தான் ‘வேன்டைன் டே’ காதலர்கள் தினத்துக்காகவே என மாறிவிட்டது.
மிஸ் யூ என்பதும், லவ் யூ என்பதும் நம் நாட்டினருக்கு காதலர்களுக்கு வார்க்கப்பட்ட வார்த்தைகள். ஆனால் அமெரிக்காவிலோ அவை சக மனிதர்களுக்குள் மட்டுமல்ல சக ஜீவன்களுக்குள் தங்கள் நேசத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் வார்த்தைகள். இன்னும் சொல்லப் போனால் தங்கள் செல்லப் பிராணிகளிடம்கூட சொல்கிறார்கள்.
குழந்தைகளை பெற்றோர்கூட அடிக்கக் கூடாது. அப்படி அடித்தால் அவர்கள் அவர்கள் போலீஸுக்கு போன் செய்யலாம். புகாரும் கொடுக்கலாம்.
ஒருமுறை ‘உயர்கல்வியில் இந்திய நாட்டுக்கும் அமெரிக்க நாட்டுக்குமான ஒப்பீடு’ என்ற தலைப்பில் எங்கள் காம்கேர் தயாரிப்பில் ஆவணப்படம் ஒன்றை இந்தியாவில் படம் பிடித்த பிறகு, அமெரிக்காவில் உள்ள மிசெளரி பல்கலைக்கழகத்தில் படம் பிடித்தோம். அப்போது அந்தப் பல்கலைக்கழகத்தின் வரவேற்பறையில் நாங்கள் காத்திருந்தோம். அழைப்பு வந்தவுடன் அந்தப் பல்கலைக்கழக டீன் அறைக்குச் செல்லக் காத்திருந்தோம்.
இந்தியாவில் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்துக்கும் பிரம்மப் பிரயத்தனம் பட்டே வேலைகளை முடிக்க வேண்டிய சூழலில் பழக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் பல்கலைக்கழக டீனை இமெயிலில் தொடர்பு கொள்வதும், அவர்கள் அப்பாயின்மெண்ட் பெறுவதும் இத்தனை சுலபமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.
ஆனால், கடைசிவரை எங்களை பார்க்க டீன் கூப்பிடவே இல்லை. ஆனால் எங்களுக்கு ஏமாற்றமாக இல்லை. மாறாக ஆச்சர்யம்? ஏன்? சொன்னால் நம்ம மாட்டீர்கள். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
அந்தப் பல்கலைக்கழக டீன் நாங்கள் அமர்ந்திருக்கும் வரவேற்பறைக்கு வந்து மிக பவ்யமாக மரியாதையாக ‘ப்ளீஸ் வெல்கம்’ என இருகைகளையும் கூப்பி நமஸ்கரித்து தன் அறைக்கு அழைத்துச் சென்று நலம் விசாரித்துப் பேசினார். பின்னர் ஷூட்டிங் எடுக்க வேண்டிய துறைகளுக்கும், லைப்ரரிக்கும், பல்கலைக்கழகத்தைச் சுற்றிக் காண்பித்து அதனதன் சிறப்பை எடுத்துச் சொல்லவும் காலை செக்ஷனுக்கு ஒரு பேராசிரியரையும் மதிய செக்ஷனுக்கு மற்றொரு பேராசிரியரையும் எங்களுடன் அனுப்பி வைத்தார். மதிய லஞ்ச், மாலை டீ என அனைத்தையும் அந்தந்த நேரத்து மிகச் சரியாக எங்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
இப்படி பல்கலைக்கழக டீன் எல்லாம் நாம் இருக்குமிடம் வந்து மரியாதையுடன் பேசுவதும், அழைத்துச் செல்வதும் நமக்கெல்லாம் புதிது. அந்த நிகழ்வை வாழ்நாளில் மறக்க முடியாது.
ஏனெனில் நம் நாட்டில் ‘பதவி’ என்பது ஒரு பகட்டு. அவர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலி அவர்களுக்குள் செலுத்தும் அதிகாரமானது அவர்களை நாடி வருபவர்களை / அவர்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களை கொஞ்சம் கீழே வைத்துப் பேசவே கற்றுக்கொடுத்து வைத்துள்ளது. எல்லோரையும் ஒரே தராசில் வைக்கவும் இல்லை. புண்படுத்தவும் இல்லை. விதிவிலக்குகள் இருக்கிறது, இருக்கிறார்கள். விதிவிலக்குகளின் எண்ணிக்கை அவரவர் வளரும் சூழலுக்கு ஏற்ப கூட குறைய இருக்கலாம்.
மேலும் அங்கு ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அவர்களுக்குக் கீழ் அல்லது அவர்களிடம் அல்லது அவர்களுடன் பணிபுரிபவர்களுக்கும் எந்த வித்யாசமும் இருக்காது. நிறுவன சி.ஈ.ஓ-வையே பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்கள். நம் நாட்டில் எம்.என்.சி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அந்த கலாச்சாரம் தெரிந்திருக்கும். அவரவர் வேலையை அவரவர் செய்துகொள்கிறார்கள். கார் கதவைத் திறந்துவிட ஒருவர், பெட்டி தூக்க ஒருவர் என்பதெல்லாம் அறவே கிடையாது.
சார், மேடம் போட்டு பேசினால் கோபம்கூட வருவதுண்டு. பெயர் சொல்லி அழைப்பதையே கெளரவமாகக் கருதுகிறார்கள். அதுபோல தாங்கள் சாப்பிடும்போது மற்றவர்கள் சாப்பாடு பரிமாறுவதையும் அவர்கள் அவமானமாகக் கருதுகிறார்கள். தாங்களே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடுவதையே கெளரவமாக நினைக்கிறார்கள்.
ஆண், பெண் என இருபாலருமே புகைக்கிறார்கள். ஆனால் யாருமே பொது இடங்களில் புகைப்பதில்லை. சிகரெட் பிடிப்பதற்கென்று தனியிடம் ஒதுக்கி இருக்கிறார்கள்.
நாடு சுத்தமாக இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பொதுவிதிகளை கருமமே கண்ணாயினராக அனைவரும் ஒன்றுபோல பின்பற்றுவதுதான். சாலையில் யாரும் எச்சில் துப்புவது கிடையாது. குப்பைகளைப் போடுவது கிடையாது.
சிறு குழந்தை சாக்லெட் சாப்பிட்டால்கூட சாக்லெட் கவரை கீழே போடுவதில்லை. அருகே இருக்கும் குப்பைத் தொட்டியில் போடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இப்படி சிறியதும் பெரியதுமாக நம்மை வியக்க வைக்கும் பண்புகள் நிறைய உள்ளன.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 5, 2022 | சனிக்கிழமை | இந்திய நேரம் காலை 6 மணி