மலர்வனம் மார்ச் 2022 இதழில் வெளியான கதை
புத்தக வடிவில் படிக்க: மலர்வனம் மார்ச் 2022
அந்த தேஜஸுக்குப் பெயர் என்ன தெரியுமா?
அப்போது நம் கதாநாயகிக்கு பன்னிரெண்டு, பதிமூணு வயதுதான் இருக்கும். ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள். பார்ப்பதற்கு லட்சணமாகத்தான் இருப்பாள். நீண்ட மூக்கும், தீட்சண்யமான கண்களும் அவளை அழகாகவே காண்பிக்கும். ஆனாலும் அவளுக்கு ‘தான் அழகில்லை’ என்ற வருத்தம் நிறைய உண்டு. காரணம் அவள் கலர். மாநிறத்துக்கும் சற்று குறைவான கலர்.
அந்தக் காலத்தில் வெள்ளையாக இருப்பவர்கள்தான் அழகு என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. இப்போது மாடலிங், சினிமா, சீரியல் முதற்கொண்டு உலக அழகி வரை கருப்பாக இருப்பவர்கள் கொண்டாடப்படுவதைப் போல் அப்போதெல்லாம் கிடையாது.
கருப்பு கலரை ஒரு கலராகக் கூட கன்சிடர் செய்ய மாட்டார்கள். இப்போது போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர் போன்ற சாஃப்ட்வேர்களின் வருகைக்குப் பிறகுதானே கருப்பும் சேர்ந்தால்தான் CMYK கலர்கோட் மூலம் வண்ணங்கள் முழுமை பெறும் என்ற நுணுக்கமெல்லாம்.
தான் கருப்பாக இருப்பதற்காக அவள் வருத்தப்படுவதைவிட அவள் வகுப்பில் படிக்கும் ஜாஸ்மினை கொண்டாடுவதைத்தான் அவளால் பொறுக்க முடியவில்லை. காரணம் எப்போதெல்லாம் அவள் கொண்டாடப்படுகிறாளோ அப்போதெல்லாம் இவள் தனக்குள் தாழ்வுமனப்பான்மையினால் குன்றிப் போவாள். ‘என்ன பெரிய அழகு? மாவு பொம்மைப் போல். மூக்கைப் பார், மாவு பொம்மையின் மூக்கில் சுத்தியலால் தட்டிவிட்டதைப் போல், இதெல்லாம் ஒரு அழகா… ம்ஹும்’ என மனதுக்குள் நெட்டி முறிப்பாள்.
யார் அந்த ஜாஸ்மின்?
ஜாஸ்மின். சுண்டியிழுக்கும் பேரழகு. லேசாக தட்டினாலே இரத்தம் வெளியில் வந்து விடும் அளவுக்கு ரோஸ் கலரில் இருப்பாள். லிப்ஸ்டிக் போடாமலேயே சிவப்பு கலர் உதடுகள். சாதாரணமாகப் பார்த்தாலே பார்க்கின்றவர்களை ஈர்க்கின்ற சற்றே கவர்ச்சியான பெரிய கண்கள். நன்றாகப் படிக்கக் கூடிய பெண் அல்ல என்றாலும் எந்த சப்ஜெக்ட்டிலும் ஃபெயில் ஆகாத அளவுக்கு புத்திசாலி.
அவள் அப்பா அந்த ஊரில் பிரபலமான துணிக்கடை வைத்திருந்தார். பெரிய கடை. அந்த ஊரில் இருக்கும் ஒரே பிரமாண்ட ஜவுளிக் கடை அதுதான். மற்றதெல்லாம் சின்னச் சின்னக் கடைகள். அப்போதெல்லாம் மெட்ராஸில் இருந்து மாதாமாதம் புதுப்புது டிஸைன்களில் உடைகளை வாங்கி வந்துக் குவித்து வைத்திருப்பார். தீபாவளி பொங்கலுக்கு அந்தக் கடையில் உடை வாங்கினோம் என்று சொல்வது அந்த ஊர் மக்களின் கெளரவம். அக்கம் பக்கத்தில் இருக்கும் சிறிய ஊர்களில் இருந்தெல்லாம் வசதியானவர்கள் அங்கு வந்து உடை வாங்கிச் செல்வார்கள். அந்தக் கடை ஊர்மக்களின் மனதில் ஒரு ‘பிராண்ட்’ போலவே பதிந்துவிட்டிருந்தது. அதற்குப் போட்டியாக ஒரு கடைகூட இல்லை என்பதால் திருவிழா நாட்களில் மட்டுமல்ல எல்லா நாட்களிலும் கடையைச் சுற்றி ஒளிரும் விளக்குகளை எரிய விட்டிருப்பார்கள். இரவு பத்து மணிக்குக் கடையை மூடும் வரை ஜகத்ஜோதியாக அந்தத் தெருவுக்கே வெளிச்சம் வருவதைப் போல ஜொலிக்கும்.
அப்படிப்பட்ட கடையின் வாரிசு புதுசு புதுசாய், தினிசு தினுசாய் உடை அணிந்து வருவதற்குக் கேட்கவா வேண்டும்?
அப்போதெல்லாம் பள்ளிகளில் சனிக்கிழமைகளில் கலர் உடை அணிந்து வரலாம். அந்த நாட்களில் ஜாஸ்மின் வண்ணமயமான உடை அணிந்து வருவாள். சொந்தக் கடையில் இருந்து புதுப்புது டிஸைன்களில் விதவிதமான ஸ்டைல்களில் உடை அணிந்து வந்து கலக்குவாள். சினிமா ஹீரோயின் போல இருக்கிறாள் என பள்ளியே வியந்து பேசும்.
சக மாணவிகள் மட்டுமில்லாமல் பள்ளியில் ஜாஸ்மினுடைய வகுப்பாசிரியைகள்கூட அவளை எழுந்து நிற்கச் சொல்லி, திரும்பச் சொல்லி அழகு பார்ப்பார்கள். அதுபோல அவர்கள் ஆச்சர்யப்பட்டுப் பார்ப்பது அதுபோன்ற உடையை தங்கள் குழந்தைகளுக்கு வாங்கித்தருவதற்காக இருக்கலாம் அல்லது சும்மா ரசிப்பதற்காக மட்டுமாகக் கூட இருக்கலாம்.
இப்படி ஆசிரியைகள் கூட வியந்து சுற்றிச் சுற்றிப் பார்க்கும்படியான உடைகளை அவள் அணிந்து வருவது அவளுடன் படிக்கும் மற்ற மாணவிகளுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. நம் கதாநாயகிக்குக் கேட்கவா வேண்டும்? ஏற்கெனவே தான் அத்தனை அழகில்லை என்ற தாழ்வு மனப்பான்மை வேறு.
வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியின் உடையை ரசிக்கும் ஆசிரியைகளின் மன முதிர்ச்சியின்மை, பதின்ம வயதில் இருந்த நம் கதாநாயகிக்கும் அவள் வகுப்பில் இருந்த பல மாணவிகளுக்கும் தீராத வலியை உண்டாக்கியது. ஜாஸ்மினுக்கும் அவர்களுக்கும் எப்போதுமே பெரிய இடைவெளிதான்.
கல்வி பயிலும் மாணவ, மாணவர்களுக்குள் ஏற்றத் தாழ்வு வரக்கூடாது, எல்லோரும் சரிசமம் என்ற எண்ணம் உண்டாக வேண்டும் என்பதற்காகத்தான் சீருடை. ஆனால், வாரத்தில் ஐந்து நாட்கள் சீருடை, ஒருநாள் கலர் உடை என்றாகும்போது ஐந்து நாட்கள் சீருடை புகுத்தும் கட்டுப்பாட்டை ஒருநாள் கலர் உடை கடற்கரை மணலில் ஆசை ஆசையாய் கட்டிய மணல்வீட்டை ஒரே ஒரு அலை அசுர வேகத்தில் அடித்துச் செல்வதைப் போலதான் இருந்தது அந்த மாணவிகளுக்கு.
ஒருநாள் ஜாஸ்மின் பள்ளிக்கு வரவில்லை. உடம்பு சரியில்லை என்றார்கள். அடுத்து சில நாட்களும் தொடர்ந்து வரவில்லை. அவளுக்கு திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்ற செய்தி தீயாய் பரவியது.
என்னது பதிமூணு வயது பெண்ணுக்குத் திருமணமா என ஆச்சர்யமாக இருக்கிறதா? அப்போதெல்லாம் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். பத்தாம் வகுப்புக்கூட முடிக்காமல் பதிமூணு வயதுப் பெண்ணுக்குத் திருமணம் எனும்போது ஆசிரியைகளுக்கே பேரதிர்ச்சித்தான்.
ஜாஸ்மினின் உடையும் அழகும் எந்த அளவுக்குப் பேசப்பட்டதோ அந்த அளவுக்கு, ஏன் அதைவிட அதிகமாய் பேசப்பட்டது அவளுக்குத் திருமணம் என்ற வதந்தி.
உடனடியாக அவள் வகுப்பாசிரியை தைரியமாக செயல்படும் மூன்று மாணவிகளை அவள் வீட்டுக்கு அனுப்பி அவளைப் பார்த்துப் பேசிவிட்டு வர அனுப்பினார்கள்.
அவர்கள் சொன்ன செய்தி ஜாஸ்மின் திருமணம் வதந்தி அல்ல, உண்மை என்பதை நிரூபணம் செய்தது.
அதன் பின்னர் அவளுடைய பெற்றோரை அழைத்துவர பள்ளி லீடரை அனுப்பி வைத்தனர். ஆனால் அவளுடைய பெற்றோர் வரவில்லை. அவள் திருமண அழைப்பிதழ் வந்தது. அதுவும் எப்படித் தெரியுமா? தடபுடலாக. வெற்றிலை, பாக்கு, பழம், ஏராளமான இனிப்புகளுடன் பள்ளி தலைமை ஆசிரியைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவிகள் அனைவருக்கும் சாக்லெட் கொடுக்கச் சொல்லி பெரிய பெரிய பாக்கெட்டுகள் காரில் வந்து இறங்கியது.
அடுத்த ஒரு மாதத்தில் அவளுக்கு திருமணம். வகுப்பாசிரியையும், தலைமை ஆசிரியையும் சென்று வந்தார்கள். வகுப்பு மாணவிகள் யாரும் செல்லவில்லை. காரணம் அவளுக்கு நெருங்கியத் தோழி என யாருமே இல்லை. அவளுடைய கொண்டாடப்படும் அழகும், பணமும், வசதியும் அவளுக்கான நெருக்கமான தோழியாக யாரையும் நெருங்க விடவில்லை.
பதிமூணு வயது சகவயது சகமாணவிக்கு திருமணம் ஆன நிகழ்வு நம் கதாநாயகியை உலுக்கி எடுத்தது. என்னவோ செய்தது. என்ன செய்தது என்பதை அவளால் சொல்லி புரிய வைக்க முடியவில்லை. அடுத்து வந்த சனிக்கிழமைகள் சூன்யம் பிடித்ததைப் போல வெறுமையாக இருந்தது.
ஆனால், மெல்ல மெல்ல அவளுக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை விலகியது. ஜாஸ்மினுடைய அழகான சோகமாக மாறிப்போனது அவள் மனதுக்குள். ‘பாவம் ஜாஸ்மின்!’ என அடிக்கடி சொல்லிக்கொண்டாள்.
படிப்பில் கவனம் செலுத்தினாள். நல்ல மதிப்பெண்கள் பெற்றாள். ‘நிச்சயம் ஜாஸ்மின் போல சீக்கிரம் கல்யாணம் மட்டும் செய்துகொண்டுவிடக் கூடாது’ என நினைத்துக்கொண்டாள். பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புகளில் பள்ளியில் முதலாவதாக வந்தாள்.
கல்லூரியில் சேர்ந்தாள். கண்ணாடியை பார்க்கும் போதெல்லாம் தான் மிகவும் அழகாக இருப்பதாக நினைத்துக்கொள்வாள். அவளுடைய தோலின் கருப்பு நிறம் அவள் கண்களுக்குத் தெரியவே இல்லை. என்னவோ ஒரு தேஜஸ் தன் முகத்துக்கு வந்துவிட்டதைப் போல உளப்பூர்வமாக நம்பத் தொடங்கினாள்.
ஆமாம். அந்த தேஜஸுக்குப் பெயர் தன்னம்பிக்கை என்பது நம் கதாநாயகிக்கு அப்போது தெரியவில்லை.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 15, 2022 | செவ்வாய் | இந்திய நேரம் காலை 6 மணி