எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?

எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?

வாட்ஸ் அப்பில் பிடிஎஃப் டாக்குமெண்டாக ஒரு ஃபைல்
வந்து விழுந்ததை மொபைல் போன் சிணுங்கியது.

யார் என்ன ஏது எதுவும் தனித்தகவலாக சொல்லவில்லை. என்ன என்று பார்க்கலாம் என திறந்து பார்த்தால் ஐடி துறையில் சில வருடங்கள் அனுபவமுள்ள இளைஞர் ஒருவர் வேலைக்காக விண்ணப்பித்திருந்தார்.

இவர்களின் கல்வி அறிவும், பணி அனுபவமும் என்ன கற்றுக்கொடுக்கிறது? என்ன கற்றுக்கொள்கிறார்கள்?
வேலைக்கு விண்ணப்பிப்பது அல்லது ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என கேட்கும் முறையா இது?

நாமாக அவர் அனுப்பிய புரொஃபைலை திறந்து பார்த்து படித்து வேலைக்கு அழைப்போம் என்ற மனநிலையை எங்கிருந்துப் பெற்றார்கள்?

அடுத்து ஒரு அச்சுப் புத்தகத்துக்கு ப்ரிண்ட் ஆர்டர் கொடுக்க ஒரு மொபைல் எண்ணை தொடர்பு கொண்டேன். வழக்கமாக பிரிண்ட் செய்யும்
இடம் அல்ல. புது இடம்.

போனை எடுத்தவர் நான் சொன்ன வணக்கத்துக்கு
ஒரு துளியும் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. ‘என்ன வேணும் சொல்லுங்க?’ அழுத்தமான மேலோங்கிய அதிகாரக் குரல். சரி அது அவரது சுபாவமாக இருக்கும் என நினைத்து நான் என் தேவையை கூறி எவ்வளவு ஆகும் என்ன ஏது என கேட்டேன்.

அடுத்த சில நொடிகளில் வேக வேகமாக
ஓட்டல் சர்வர் மெனு பட்டியல் வாசிப்பதைப் போல்
ஏதோ அடுக்கிக்கொண்டே போனார்.

பிரிண்டிங் துறையில்(லும்) அனுபவமுள்ள
எனக்கே அவர் சொன்னதில் ஒரு துளியும் மனதுக்குள் செல்லவில்லை.

மீண்டும் கேட்டேன்.

‘இமெயில் ஐடி அனுப்புங்க… இமெயிலில் தகவல் அனுப்பறேன்…’ என்று சொல்லி விட்டு போனை வைத்துவிட்டார்.

நான் என்ன கேட்டேன். அவர் என்ன பதில் அனுப்பப் போகிறார் என எனக்கு ஒரே குழப்பம். என்னைப் போல் எத்தனை பேர் அவரிடம் தொடர்பு கொண்டு பேசியிருப்பார்கள்? யாரை நினைவு வைத்துக்கொண்டு இமெயில் செய்வார் என யோசித்துக்கொண்டே
நான் என் இமெயில் ஐடி அனுப்பினேன்.

இதோ இரண்டு நாட்கள் ஆகியும் இன்னமும் எந்த பதிலும் வரவில்லை.

நம்மிடம் வேலை கேட்பவர்களுக்கும் எதை எப்படி கேட்க வேண்டும் என்ற பக்குவமில்லை. நாம் பிசினஸ் கொடுக்கும் இடத்திலும் எதையும் பொறுமையாக கேட்கும் இங்கிதம் இல்லை.

ஒருபக்கம் வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள், மறுபக்கம் பிசினஸ் மந்தம் என புலம்பும் பிசினஸ் மக்கள். ஆனாலும் யாருக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அதை பக்குவமாக கையாளும் பொறுமை இல்லை.

எல்லாவற்றுக்கும் கொரோனாவை காரணம் காட்ட முடியாது.

எங்கு சென்று கொண்டிருக்கிறோம்? இவ்வளவுதான் உலகம் என சுருங்கி விட்டது. இதில் ஒதுங்கியதுபோக கிடைப்பது மட்டுமே மிச்சம் என்ற நிலை உருவாகிவிட்டது!

சிந்திப்போமா?

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஏப்ரல் 24, 2022 | ஞாயிறு

(Visited 22 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon