வெள்ளத்தனைய மலர் நீட்டம் – இதற்குத்தானா?
நடுத்தர குடும்பஸ்தர் ஒருவர் தன் மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து மேல் படிப்புக்காக அயல்நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் என் கிளையிண்ட் நிறுவனத்தில் ஆஃபீஸ் அசிஸ்ட்டெண்ட்டாக பணியில் இருக்கிறார்.
அவர் மகனும் நன்றாகவே படித்துக்கொண்டிருக்கிறார்.
அது பிரச்சனை இல்லை இங்கு.
‘ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?’ என அவர் கேட்டதால் என் அமெரிக்க விமானப் பயணம் குறித்து சொல்ல வேண்டிய சூழல்.
‘இந்த முறை விமானப் பயணம் மிகவும் டீடியஸாக இருந்தது’ என்றேன்.
அதனை கேட்ட அவர் சொன்னதுதான் எனக்கு அயற்சியாக இருந்தது.
‘அதனால்தான் என் பையன் எப்பவும் ஃபர்ஸ்ட் கிளாஸில்தான் வந்து செல்வான்…’ என்றாரே பார்க்கலாம். வியப்பு, அதிர்ச்சி இவை அத்தனையையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வு எனக்குள். அதற்கு வடிவம் கொடுக்க முடியவில்லை.
நான் டீடியஸாக இருந்தது என்று சொன்னது, சாதாரணமாக விமானப் பயணத்தில் பக்கத்து இருக்கைகள் காலியாக இருக்கும். இரண்டு மூன்று இருக்கைகளில் காலை நீட்டி படுத்துக்கொண்டே கூட வரலாம். ஆனால் இந்த முறை கொரோனாவுக்குப் பிறகு விமான சேவையை முடுக்கி விட்டதால் ஒரு இருக்கை கூட காலியாக இல்லை. விமானம் திணறத் திணற மக்களால் நிரம்பி வழிந்தன. விமானப் பணிப் பெண்களும் தொடர்ச்சியாக பணி செய்தபடியே இருந்தார்கள். ஒரே சீட்டில் ஒரே நிலையில் காலை நீட்டியபடி 24 மணி நேரத்துக்கும் மேல் பயணம் செய்ததையே டீடியஸ் என்றேன்.
கடந்த 20 வருடங்களில் எத்தனையோ முறை அமெரிக்கா சென்று வந்திருந்தாலும் தேவை இல்லாமல் ஃபர்ஸ்ட் கிளாஸிலோ, பிசினஸ் கிளாஸிலோ டிக்கெட் புக் செய்வதில்லை. காரணம் கட்டணம் அதிகம் மட்டுமல்ல, தேவை இல்லாத செலவு அது. அந்த பணத்தை ஆக்கப்பூர்வமாக செலவிடலாம் என்பது என் கருத்து.
உடம்பு சரியில்லை அல்லது வேறேதும் பிரச்சனை என்றால் ஃபர்ஸ்ட் கிளாஸ் என்ன பிசினஸ் கிளாஸில் கூட டிக்கெட் எடுத்துக்கொண்டு செல்லலாம். தவறில்லை. அதுவும் நம் செளகர்யத்துக்காக மட்டுமே. பெருமைக்காக அல்ல.
ஆனால் இந்தியாவில் படிக்கவே கடன் வாங்கி படிக்க வைத்து, உயர் கல்விக்கு அமெரிக்கா அனுப்பவும் நிறைய கஷ்டப்பட்டு முன்னெடுப்புகள் செய்த அவர் மகன் ஃபர்ஸ்ட் கிளாஸில்தான் வருவதாக சொன்னது வியப்பாக இருந்தது.
இங்கு நான் சொன்னது ஒரு மாதிரிக்காக ஒரே ஒரு நிகழ்வை மட்டுமே. இதுபோல பலரும் பெருகி வருவதுதான் அயற்சியாக உள்ளது.
முன்பெல்லாம் அமெரிக்கா செல்வதும், விமானப் பயணம் என்பதும் பெருமைப்படக் கூடிய விஷயங்களாக இருந்தன. இப்போது எப்பவும் ஃபர்ஸ்ட் கிளாஸில் தான் விமானப்பயணம் என்பது பெருமையாகி வருகிறது.
‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’ என்பது வாழ்க்கையில் உயர உயர இதுபோன்ற பெருமைப்படல்கள் பெருகுவதற்கும் உதாரணமாகிப் போனதுதான் வேதனை.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஏப்ரல் 25, 2022 | திங்கள்