அன்பே கடவுள்

கொரியரில் வந்த பழனி முருகன் பிரசாதம் என் டேபிள் மீது தெய்வீகமாக அருள் வீசி  ‘தெய்வம் மனுஷ ரூபனே’ என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தது.

மூன்று  நாட்களுக்கு முன்னர் ஒரு வாசகர் போன் செய்திருந்தார். தன் வயது 60 என்றும், நான் எழுதிய கம்ப்யூட்டர் A-Z புத்தகத்தை படித்திருப்பதாகவும், பழனிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து பேசுவதாகவும் அறிமுகம் செய்துகொண்டார்.

வேறு என்னென்ன புத்தகங்களை வாங்கிப் படித்தால் கம்ப்யூட்டரையும் இன்டர்நெட்டையும் ஓரளவுக்கு கற்றுக்கொள்ள முடியும் என்று கேட்டவருக்கு புத்தகங்களின் பெயர் மற்றும் பதிப்பக எண்களை கொடுத்து முடித்துவிட்டு போனை ஆஃப் செய்ய முயன்றேன்.

‘மேடம் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்… நான் எப்படியும் உங்களைவிட சீனியராகத்தான் இருப்பேன். நான் இப்படிக் கேட்பதில் தவறில்லை என நினைக்கிறேன்….’ என்று பலத்த பீடிகையோடு பேசியவருக்கு ‘ம்.. தயங்காமல் சொல்லுங்கள்’ என சொன்னேன்.

‘எல்லோரும் படிக்கிறார்கள், திறமையும் இருக்கிறது… ஆனால் அதை அவர்கள் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்… ஆனால் நீங்கள் உங்கள் கல்வி அறிவை எங்களைப் போன்ற எளிய மக்களுக்காக புத்தகங்களாக எழுதி வெளியிட்டு உங்கள் வாழ்க்கையை பயனுள்ளதாக வாழ்கிறீர்கள்… அதனால்…’ பேசிக்கொண்டே வந்தவர் மீண்டும் தயக்கம் ‘மோடு’க்கு மாறினார்.

இந்த முறை நான் கொஞ்சம் உற்சாகமாகி ‘ம்… சொல்லுங்க சார்…’ என்றேன்.

‘காம்கேர் பெயரில் பழனி முருகனுக்கு அர்ச்சனை செய்து உங்களுக்குப் பிரசாதம் அனுப்பலாமா?’ என்று கேட்டபோது சற்றே பிரமித்துப் போனேன்.

நான் பிரமித்ததுக்கு காரணம் உள்ளது. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருப்பதி, திருத்தணி, நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில், கும்பகோணத்தைச் சுற்றி உள்ள கோயில்கள் என அப்பா அம்மாவுடன் சென்று வருவது வழக்கம்.

10 நாட்களுக்கு முன்னர் நான் ஏதோ நினைத்துக்கொண்டதைப்போல ‘அம்மா நாம் பழனிக்கு போகவே இல்லையே… என் பத்து வயதில் போனதுதான்… அதன்பிறகு போகவே இல்லை’ என்று சொன்னேன்.

அடுத்த 2-ம் நாள் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக். மருத்துவமனையில் ட்ரீட்மெண்ட்டுக்காக ஒரு வாரம் ஆனது. வீட்டுக்கு அழைத்து வந்த தினம்தான் பழனியில் இருந்து வந்த போன் கால்.

கடவுளே என் எண்ணத்துக்கு வடிவம் கொடுக்க மனித வடிவில் அழைப்பை விடுத்துள்ளதோ என தோன்றியது. சிலிர்த்தது.

சற்றே சுதாரித்துக்கொண்டு ‘தாராளமாக அனுப்புங்கள்… ஆனால் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்… என் அம்மாவுக்கு ஹார்ட் சர்ஜரி செய்துள்ளோம். அம்மா பெயரில் அர்ச்சனை செய்ய முடியுமா?’ என கேட்டு அம்மாவின் பெயர், ராசி, நட்சத்திரம் கொடுத்தேன்.

‘மேடம் இன்னொரு விஷயம்…. எனக்கு கடவுள் பக்தி கிடையாது… பழனிக்கு மிக அருகிலேயே இருந்தாலும் கோயிலுக்குச் சென்றதே இல்லை. நீங்கள் நலமுடன் இருந்தால் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றியதால் மனதில் உள்ளதை வெளிப்படையாகக் கேட்டேன்’ என்று சொன்னார்.

‘சார்… கடவுள் பக்தியே இல்லாத உங்களுக்கு என் சார்பில் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து அனுப்பத் தோன்றச் செய்துள்ளதே இறை சக்திதான்…’ என்று சொன்னதுக்கு நன்றி சொல்லி போனை வைத்தார்.

அடுத்தநாள் அர்ச்சனை நடக்கும் சரியான நேரத்துக்கு எனக்கு போன் செய்து இப்போது அர்ச்சனை நடந்துகொண்டுள்ளது. நான் என் குடும்பத்துடன் கோயிலில்தான் இருக்கிறேன்.  நீங்கள் அம்மாவுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்… என்று சொன்னதோடு இதோ பிரசாதத்தை கொரியரில் அனுப்பியும் விட்டார். அந்த பிரசாதம்தான் இதோ என் டேபிளில். கூடவே அவர் செய்துவரும் பிசினஸ் விசிட்டிங் கார்டும். அதன் முகப்பில் ‘சாமிகள் இல்லையடி பாப்பா’ என்ற கேப்ஷன்.

பழனியில் இருந்து பிரசாதம் அனுப்பிய வாசகர் திரு. செல்வராஜ் அவர்களுக்கு நன்றி.

தொழில்நுட்பம், கடவுள் பக்தி இல்லாதவரையும்  கடவுளை தரிசிக்க வைத்துள்ள அந்த அற்புதத்தை என்னவென்று சொல்வது?

பழனி முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கொண்ட மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
பிப்ரவரி 25, 2017

(Visited 204 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon