உள்ளம் மகிழ வைத்த உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம்!

 

காம்கேரின் 25 ஆண்டுகால பயணத்தில் உண்மையில் நான் இறைசக்தியை மிக ஆத்மார்த்தமாக உணர்ந்தது  ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில்தான்.

ஜனவரி 1, 2018 – திங்கள் கிழமை சரியாக 4.30 மணிக்கு உளுந்தூர் பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் இருந்து போன் அழைப்பு. வழக்கம்போல மிக கம்பீரமான கண்ணியமான இறைசக்தியுடன் கூடிய குரல். ஸ்ரீஆத்மவிகாஷப்ப்ரியா அம்பா (Sri Atmavikashapriya Amba) அவர்கள்தான் பேசினார். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து சொன்னதோடு கூடுதலாக ஒரு செய்தியையும் சொன்னார்.

‘ஜனவரி 1 இன்றைய தினம் மிகவும் விசேஷமானது.  காரணம், இந்த தினத்தில்தான் 1886 ஆம் ஆண்டு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், கேட்டதை எல்லாம் அருளும் கற்பகவிருட்சமாக  தன் அன்பர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் வழங்கினார். எனவே இந்த தினத்தை கல்பதரு தினம் (Kalpataru Day) என்று கொண்டாடுகிறோம். ஜனவரி 1 ஆம் தேதி ஆஸ்ரமத்துக்கு மக்கள் அலைஅலையாக வந்து பிராத்தனை செய்து செல்வார்கள்.’

எனக்கு எப்போதெல்லாம் ஏதேனும் மனசஞ்சலம் என்றாலும் இவரை தொடர்புகொண்டு மனம்விட்டு பேசுவேன்.  அபிஜித் நேரத்தில் கூட்டுப் பிராத்தனையின்போது எனக்காகவும் பிராத்தனை செய்துகொள்வார்.

அபிஜித் நேரம் குறித்து இவரிடம் இருந்துதான் தெரிந்துகொண்டேன்.

தினந்தோறும் சூரிய உதய நேரத்தில் இருந்து சரியாக ஆறு மணி நேரம் கழித்து வருகின்ற உச்சி வேளை நேரத்தைத்தான் அபிஜித் காலம் என்பார்கள். ‘அபி’என்றால் தைரியம் என்றும், ‘ஜித்’என்றால் வெற்றி என்றும் பொருள். இரண்டையும் இணைத்தால் கிடைக்கும் ‘அபிஜித்’ என்ற வார்த்தைக்கு வெகு சிறப்பாக வெற்றி பெறுதல் என்று பொருள். இதை அபிஜித் முஹூர்த்தம் என்கிறார்கள்.  இந்த நேரத்தில் வழிபட்டால் அதீத வெற்றி கிட்டும் என்பது ஐதீகம். பிரம்ம முகூர்த்தம் என்பது எப்படி  நிர்மலமான பரிசுத்த  நேரமாகக் கருதப்படுகிறதோ, அதுபோல அபிஜித் காலமும் வெற்றிக்கான பூஜைகள் செய்திடும் நேரம்.

இந்த அரிய விஷயத்தை நான் தெரிந்து கொண்டதே எனக்கு ஒரு பெரும் பாக்கியம். அதில் இருந்து எந்தப் பிராத்தனை என்றாலும் அதை அபிஜித் நேரத்தில்தான் செய்கிறேன்.

‘நம் நாட்டுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், நம் கலாச்சாரப்  பண்பாடு மாறாமல் பணியாற்றிவரும் அனைவரின் ஷேமத்துக்காகவும் எங்கள் ஆஸ்ரமத்தில்  பிராத்தனை செய்வோம். அந்த வகையில் தொழில்நுட்பத்துறையில் நவீன பெண்மணியாக இருந்தாலும் நம் நாட்டின் கலாச்சாரம் வழுவாத செயல்பாடுகளால் நேர்மையாக  உழைத்துவரும் உங்களுக்காகவும் பிராத்தனை செய்கிறோம். உங்களைச் சுற்றி எங்கள் ஆஸ்ரம ஸ்வாமினிகள் அனைவரும் அரணாக இருக்கிறோம். எந்த பிரச்சனையும் கஷ்டமும் உங்களுக்கு வராது… இந்தப் புத்தாண்டில் எல்லா வளமும் பெற்று சந்தோஷமாக இருக்க எங்கள் பிராத்தனைகள்’ – ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் இருந்து  ஸ்ரீஆத்மவிகாஷப்ப்ரியா அம்பா அவர்கள் போனில் வாழ்த்திப் பேசியது இறைவனே என்னிடம் நேரில் பேசுவதுபோல் உணர்ந்தேன். இதை அவரிடம் வெளிப்படையாகவும் பகிர்ந்தேன்.

‘இப்படி  நெகிழ்ச்சியாகப் பேசுவதும், வெளிப்படையாக உண்மையாக இருப்பதும், நேர்மையாக வாழ்வதும்,  பிராத்தனைக்கு பலன் இருந்தது என்று கூப்பிட்டு நன்றி சொல்வதும், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதும் போன்ற செயல்பட்டுகள் குறைந்து வரும் இந்தக் காலகட்டத்தில் நீங்கள் இப்படி ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையும் ரசித்து அழகாக பகிர்ந்துகொள்வது எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று மீண்டும் வாழ்த்தி இந்தப் புத்தாண்டை மறக்க முடியாத நாளாக்கிவிட்டார்.

அறிமுகம்!

இவர்கள் அறிமுகம் கிடைத்ததே ஒரு கும்பாபிஷேக நிகழ்வில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 13, 2016 சனிக்கிழமை.  அம்பத்தூர் புதூர் இராமகிருஷ்ணர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா.

விழா மேடையில் 4  ஸ்வாமினிகளுடன் நானும் ஒரு சிறப்பு விருந்தினராக  அமர்ந்த அந்த நேரத்தில் மனம் முழுக்க பக்தி மயமானது. உடல், உள்ளம் அனைத்திலும் சொல்ல முடியாத ஒரு அமைதி குடிகொண்டது.  அவர்கள் உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரம  ஸ்வாமினிகள் என்ற அறிமுகம் கிடைத்தது.

விவேகானந்தரின் சிஷ்யை சகோதரி நிவேதிதாவின் கொள்கைகளை இன்றையப் பெண்கள் எப்படி பின்பற்றலாம் என்பது குறித்து, நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நிவேதிதை இருக்குறார்… அவரை சரியாக வழிநடத்தினால் ஒரு நல்ல சமுதாயமே உருவாகும் என்ற நோக்கில் பேசினேன். Girls are so powerful. We should utilize our power properly இதுதான் உரையின் மையக்கருத்தாக அமைந்தது.

நான் பேசி முடித்ததும் ஸ்வாமினிகள் அனைவரும் என்னை மனதார பாராட்டினார்கள். குறிப்பாக ஸ்ரீஆத்மவிகாஷப்ப்ரியா அம்பா அவர்கள் என்னை  சகோதரி என அழைத்து மிக இயல்பாக பேசி அன்புடன் உற்சாகப்படுத்தி வாழ்த்தினார்.

நான் அவர்களுக்கு ஏற்கனவே என் எழுத்தின் மூலம் அறிமுகம் என்று சொல்லி ஆச்சர்யபடுத்தினார். அவர் மட்டுமில்லாமல் அந்த ஆஸ்ரமத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஸ்வாமினிகளும் என் எழுத்தின் ரசிகர்கள் என்று சொல்லி என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க விட்டார்.  விஜயபாரதத்திலும் இன்னபிற பத்திரிகைகளிலும் நான் எழுதிவரும்  வாழ்வியல் கட்டுரைகளை வாசித்து அவர்கள் மாணவ மாணவிகளுக்கு அவற்றின் மூலம் வாழ்வியல் பாடம் எடுப்பதாகவும் சொல்லி என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கினார்.

கிளம்பும்போது  என்னுடைய தொடர்பு எண்ணை  தன் மொபைலில் பதிவு செய்துகொண்டார். ஒருநாள் எங்கள் ஆஸ்ரமத்துக்கு வாருங்கள் என அழைப்பும் விடுத்தார்.

நவராத்திரிக்கு அழைப்பு!

சரஸ்வதி பூஜைக்கு முதல்நாள் . அக்டோபர் 9, 2016 அன்று உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தின் முதன்மை ஸ்வாமினி அவர்களிடம் இருந்து அலைபேசி அழைப்பு. இந்த வருட நவராத்திரிக்கு கந்தபுராணக் கதையை காட்சிகளாக்கி கொலு வைத்திருக்கிறோம். தினமும் பழனி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்கிறோம். நீங்கள் இந்த வருட நவராத்திரிக்கு வர இயலுமா என்று அன்புடன் அழைத்தார்கள்.

எங்கள் பெரியப்பா இறந்துவிட்டதால் அந்த வருடம் சரஸ்வதி பூஜை கிடையாது என்பதால் வீட்டில் விளக்கேற்றி பிராத்தனை செய்துவிட்டு, அக்டோபர் 10, 2016 அன்று அப்பா அம்மாவுடன் 11 மணி அளவில் உளுந்தூர் பேட்டை சென்றடைந்தேன்.

சாரதா ஆஸ்ரமம் உள்ளே நுழையும்போதே விருந்தினர் வீட்டுக்குச் சென்றதைப் போல ‘வாங்க… வாங்க’ என வாய்நிறைய வரவேற்புடன் ஸ்வாமினிகள் வரவேற்றனர். சிறிது நேரத்தில் ஆவிபறக்க சுடச்சுட டீ.

என் திறமை மற்றும் கிரியேட்டிவிடியை ஏற்கெனவே அவர்கள் அறிந்திருந்ததால் அவற்றை எல்லோருக்கும் மகிழ்வுடனும் எடுத்துச்சொல்லி என்னை கெளரவப்படுத்தினார்கள். காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கப்பட்ட விதம் மற்றும் என் பெற்றோர் பெயரில் நான் நடத்திவரும் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை பணிகள் போன்றவற்றை கேட்டுத் தெரிந்துகொண்டதோடு நாங்கள் இருக்கும் சமயத்தில் அங்கு அவர்களைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் பெருமையுடன் அறிமுகப்படுத்தினார்கள்.

ஆஸ்ரமம் முழுவதும் சுத்தமோ சுத்தம். பேரமைதி. நல்ல காற்றோட்டம். ஸ்வாமினிகள் அனைவரும் கலகலப்பாக  சிரித்து மகிழ்ந்து எங்களுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

ஸ்வாமினிகளில் பெரும்பாலானோர் பி.எச்.டி, இரட்டை முதுநிலை பட்டம் என மெத்தப்படித்தவர்கள். வங்கி பல்கலைக்கழகம் போன்றவற்றில் உயர்ந்த பதவியில் இருந்தவர்கள்தான். இதை அவர்கள் தாங்களாகவே பெருமையாகச் சொல்லிக்கொள்ளாமல் ஒருவர் மற்றொருவரை அறிமுகப்படுத்தும்போது சொல்லியத் தகவல்களே.

எங்களை கொலு மண்டபத்துக்கு அழைத்துச் செல்ல ஒருவரை நியமித்தார்கள். முதலில் கொலு மண்டபத்துக்குச் சென்றோம். கந்தபுராணத்தில் வரும் இடும்பனின் கதையை தனித்தனியாக கொலு பொம்மைகளை வைத்து காட்சிப்படுத்தி இருந்தார்கள். 12 கேபின்களில் 12 காட்சிகள். காட்சிகளுக்கு ஏற்ப வண்ணமயமான கொலு பொம்மைகள், மின்னும் விளக்குத்தோரணங்கள் என தனித்தனி கேபினில் அற்புதமாய் அலங்கரித்திருந்தார்கள். ஒவ்வொரு கேபினிலும் அவர்கள் பள்ளி மாணவ, மாணவர்கள் பார்வையாளர்களுக்கு இடும்பன் கதையை காட்சிகளுக்கு ஏற்ப நாடகம் போல அபிநயத்துடன் நடித்துக்காட்டி கதைசொல்லிக்கொண்டிருந்தது பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தியது. அப்படி ஒரு பயிற்சி அந்த மாணவ, மாணவிகளுக்கு.

பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாய் வந்துகொண்டே இருந்தனர். ஆனாலும் அமைதியும், ஒழுக்கமும், நேர்த்தியும் இருந்தது.

அதைத் தொடர்ந்து நாங்கள் மூவரும் பழனி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தனர். முருகபிரானுக்கு எங்கள் கைகளாலேயே பாலபிஷேகம் செய்யும் பாக்கியம் கிடைத்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

மதியம் 1.30 மணி அளவில் அருமையான உபசரிப்புடன் ஸ்வாமினிகளுடன் சேர்ந்து, நல்ல நண்பர்களைப்போல பேசிக்கொண்டே சாப்பிட்டோம். உற்றார் உறவினர்களைப் போல ஸ்வாமினிகளின் உபசரிப்பும், பரிமாறுபவர்களின் ஈடுபாடும் எங்களை மிகவும் நெகிழ வைத்தன.

என் தங்கை, தம்பி பற்றி, அமெரிக்க வாழ் இந்தியர்கள் குறித்தும் நம் பண்பாடு கலாச்சாரம் குறித்தும் நிறைய பேசினோம். அமெரிக்காவில் வசித்துவரும் என் தம்பி தங்கையின் குடும்பப் புகைப்படங்களை அவர்களுக்குக் காட்டியதோடு அவர்கள் வைத்த கொலு, ருத்ர பூஜை, கோயில் நிகழ்வுகள் என அனைத்தையும் பகிர்ந்துகொண்டேன். அவர்களும் ஆர்வமாய் எல்லாவற்றையும் கேட்டு ரசித்து உள்வாங்கிகொண்டனர்.

அடுத்து ஆஸ்ரமத்தைச் சுற்றிக் காட்டினர். ஆஸ்ரமப் பண்ணையில் பயிர்வித்த 150 வகைக்கும் மேற்பட்ட நெற்பயிர்களையும், ஹெர்பல் மற்றும் மூலிகைப் பொருட்களையும் காட்சிப்படுத்தி இருந்ததை எங்களுக்கு காண்பித்து விரிவாக விளக்கிச் சொன்னார்கள். கிராமங்களுக்குச் சென்று அந்த மக்களுக்கு கல்வி, சுகாதாரம் முதற்கொண்டு விவசாயம், வேலைவாய்ப்பு என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தும் வருவதாகச் சொன்னர்கள்.

ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவசமாய் உணவு, உடை, இருப்பிடம் கொடுத்து வாழ்நாள் முழுதும் பாதுகாக்கிறார்கள். நிர்கதியாய் விடப்பட்டக் குழந்தைகளுக்கும் ஆதரவளித்து இலவச உணவு, இருப்பிடத்துடன் கல்வியும் கற்றுக்கொடுத்து வருகிறார்கள். மிடில் கிளாஸ் மாணவர்களுக்கு ஓரளவு கட்டணம் வாங்கிக் கொண்டு கல்வி அளிக்கிறார்கள். நல்ல வசதி படைத்தவர்களுக்கு உயர்ந்த கட்டணத்துடன் ரெசிடென்ஷியல் ஸ்கூல் எனப்படும் இருப்பிடப் பள்ளி அமைத்திருக்கிறார்கள்.

4 மணிக்கு சுடச்சுட காபி சாப்பிட்டு விட்டு கிளம்பியபோது அப்பா, அம்மாவுக்கு தாம்பூலத்துடன் புடவை, பேண்ட் ஷர்ட் வைத்துக்கொடுத்தார்கள். எனக்கும்தான்.

வாய் நிறைய சிரிப்புடனும், முகம் முழுக்க மகிழ்ச்சியுடனும், உள்ளம் நிறைய உண்மையான வாழ்த்துக்களுடன் கூடிய விரைவில் மீண்டும் வரவேண்டும் என்ற அன்புக் கட்டளையுடன் எங்களை வழி அனுப்பி வைத்தனர்.

நான் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் எனக்கு ஜுனியர் மாணவி ஒருவர் அங்கு ஸ்வாமினியாக இருந்ததைப் பார்த்த மனமகிழ்வுடனும் நல்ல உள்ளங்களைச் சந்தித்த மனநிறைவுடனும் சென்னை வந்து சேர்ந்தேன்.

அதனால்தான் தொடக்கத்திலேயே ‘காம்கேரின் 25 ஆண்டுகால பயணத்தில் உண்மையில்  இறைசக்தியை மிக ஆத்மார்த்தமாக உணர்ந்தது  ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில்தான்’  என்று  நான் குறிப்பிட்டிருந்தேன்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 1, 2018

(Visited 303 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon