நிம்மதியான உறக்கத்துக்கு!
வீட்டினுள் நுழையும்போதே மாலையில் சுவாமிக்கு ஏற்றி வைத்த ஊதுவத்தி வாசனை, நடுக்கூடத்தில் கம்பீரமாய் ஊஞ்சல், அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள். தூங்குவதற்கு தயாரான தொலைக்காட்சிப் பெட்டியும், கம்ப்யூட்டரும் நேர்த்தியாய் அதனதன் போர்வையை (Cover) போர்த்திக்கொண்டு, ஹால் முழுவதும் இறைந்து கிடக்காமல் அதனதன் இடத்தில் அழகாக நேர்த்தியாக போடப்பட்டுள்ள சேர் டேபிள்கள், குறிப்பாக உள்ளே நுழைந்ததும் மிக மிக நேர்த்தியாக செருப்பு ஸ்டாண்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் செருப்புகள்….
என்ன இதெல்லாம் என யோசிக்கிறீர்களா?
நேற்று இரவு 8.30 மணிக்கு எங்கள் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்திருந்த கல்லூரியில் படிக்கும் ஒர் உறவினர் பெண் எங்கள் வீடு பற்றி செய்த விமர்சனம்தான் இது.
தினமும் இரவு 12 மணி வரை தூக்கம் வராமல் நெட்டில் ஏதேனும் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு உறங்கச் செல்லும் அவருக்கு நேற்று எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது வீட்டின் நேர்த்தி மன அமைதியைக் கொடுத்ததாகவும், ‘பீஸ்ஃபுல்லா இருக்கு, நன்றாக தூக்கம் வருகிறது…’ என்று நற்சான்றிதழ் கொடுத்துவிட்டுச் சென்றார்.
குழந்தைகளும் தெய்வமும் ஒன்றுதானே. அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் தானே?
நம்மைச் சுற்றி உள்ள இடத்தை நேர்த்தியாக வைத்துக்கொள்வது கூட நம் உற்சாகத்துக்கு வழிவகுக்கும். குறிப்பாக இரவில் ஆழ்ந்த உறக்கத்துக்கு வீட்டில் நேர்த்தியும் ஒரு காரணம் என நான் சொன்னால் நம்பாதவர்களுக்கு நேற்று வீட்டுக்கு வந்திருந்த கல்லூரி படிக்கும் பெண்ணின் சான்றிதழையே சாட்சியாக்குகிறேன்.
சுத்தம் சோறு போடும் என்பது முதுமொழி. சுத்தம் நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும். இது புதுமொழி. அனுபவ மொழி!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 4, 2022 | சனிக்கிழமை | காலை 6 மணி