சின்ன சின்ன செய்கையில் பெரிய பெரிய சந்தோஷங்கள்!
அப்பாவுக்கு அத்தனை சந்தோஷம். பெரிய காரணம் எல்லாம் இல்லை. வாட்ஸ் அப்பில் தனக்கு வந்த ஒரு பதில் தகவலுக்குத்தான் அத்தனை மகிழ்ச்சியும் சந்தோஷமும்.
காரணம் இதுதான்.
தாடையில் சற்று வலி (பல்வலி அல்ல) இருப்பதால் பல் மருத்துவரிடம் அப்பாயின்மெண்ட் கேட்டு வாட்ஸ் அப் செய்திருந்தார். அவர் Good Morning Sir என ஆரம்பித்து தான் கல்லூரியில் இருப்பதால் மாலை வரவும் என சொல்லி பதில் அனுப்பி இருந்தார்.
அந்த பல் மருத்துவரின் வயது 30, 32 இருக்கலாம். சிரித்த முகம். சுறுசுறுப்பு. யார் பேசினாலும் கண்களை கூர்ந்து பார்த்து பேசும் நயம். சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் கொடுக்கும் மரியாதை உடல்மொழியிலும் வெளிப்படும். கல்லூரியில் பேராசிரியராக பணி புரிகிறார். மாலையில் தான் வைத்திருக்கும் கிளினிக்கில் இருப்பார். இவர் மனைவியும் மருத்துவர். இருவரிடமும் கட்டணமும் மிகக் குறைவு என்பது கூடுதல் தகவல்.
சாதாரணமாக இப்போதெல்லாம் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி ஏதேனும் கேட்டால் தகவலை பார்த்தவுடன் உடனடியாக பதில் சொல்ல வேண்டாம், அடுத்த 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்திலாவது தங்களுக்கு செளகர்யமான நேரத்திலாவது பதில் எதுவும் அனுப்ப வேண்டும் என்று தோன்றுவதில்லை. எல்லோரும் அத்தனை பிசி.
ஆனால் உண்மையிலேயே பிசியாக இருக்கும் மருத்துவர் மருத்துவ சந்தேகம் மற்றும் உதவிக்காக தனக்கு வரும் மெசேஜ்களுக்கு பிரத்யேகமாக தானே பதில் அனுப்புவது ஆச்சர்யமே.
நம்மை சிலாகிக்க வைக்கவும், ஆச்சர்யப்பட வைக்கவுமான மனிதர்கள் இருப்பதுதான் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது.
சந்தோஷமாக இருப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் பெரிய காரணமெல்லாம் தேவையில்லை. ‘Just a Whatsapp Reply’ கூட போதுமானதாக உள்ளதே!
ஒருசிலரிடம் நேரில் இதுபோல தகவல்களுக்கு ரிப்ளை கொடுக்காதவர்கள் குறித்து பேசும்போது அவர்கள் சொல்வார்கள், ‘நீங்கள் பிசினஸ் செய்வதால், பிசினஸ் போய்விடக் கூடாது என்பதற்காக வாட்ஸ் அப் தகவல்களுக்கு உடனுக்குடன் பதில் கொடுக்கிறீர்கள்…’.
நான் சொல்வேன், ‘அடுத்தவர்களை மதிக்கவும், நமக்கு வரும் வாட்ஸ் அப் தகவல்களுக்கு பதில் கொடுக்கவும் பிசினஸ் செய்ய வேண்டும் என்கின்ற அவசியமில்லை. மனிதர்களாக இருந்தால் போதும்…’ என கடுமையாகவே சொல்லி இருக்கிறேன். காரணம், பிசினஸுக்காக என்றல்ல பர்சனலாக வரும் மெசேஜ்களுக்கும் கூடுமானவரை அன்றைய தினத்துக்குள் பதில் கொடுத்துவிடுவதுண்டு.
மிக மிக முக்கியமான குழுக்களைத்தவிர நான் எந்த வாட்ஸ் அப் குரூப்பிலும் இல்லை. அந்தக் குழுக்களில் என்னிடம் கேட்கப்படும் சந்தேகங்களுக்கு அவ்வப்பொழுது / அன்றைய தினத்துக்குள் பதில் கொடுத்து விடுவேன். அதுபோல தீபாவளி பொங்கல் நேரங்களில் வாழ்த்தாக வந்துகொண்டே இருக்கும் வாட்ஸ் அப் தகவல்களை திறப்பதே இல்லை. காரணம் போன் ஸ்பேஸ் நிரம்பி மொத்த இடத்தையும் எடுத்துக்கொள்வதால்.
இவை தவிர எனக்கு பர்சனலாக வரும் தனித்தகவல்களுக்கு அவ்வப்பொழுது / அன்றைய தினத்துக்குள்பதில் அனுப்பி விடுவேன்.
சம்மந்தமே இல்லாமல் / தொந்திரவு கொடுக்கும் எண்களை ப்ளாக் செய்வதற்கும் தயங்குவதில்லை.
இவைதான் அன்றாடம் நான் பின்பற்றும் நியதிகள்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 7, 2022 | செவ்வாய்