பெற்றோர் அல்லாமல் வேறு யார் தாங்குவார்கள்?
சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மீட்டிங். அந்த நிறுவன சி.இ.ஓ என்னிடம் ‘எப்படி இந்த சிறிய வயதில் இத்தனை பெரிய பொறுப்பில் அநாயசமாக செயல்படுகிறீர்கள். அதுவும் முதல் தலைமுறை பிசினஸ் பெண்மணியாக இருந்துகொண்டு…’ என்று ஆச்சர்யப்பட்டு கேட்க அந்த மீட்டிங்கில் இருந்த அந்த நிறுவனப் பணியாளர் ஒருவர், ‘அப்பா அம்மா இருவரும் தாங்குகிறார்கள். எல்லாம் செய்து கொடுக்கிறார்கள்… சாதிப்பது என கஷ்டமா?’ என சொல்லியதோடு ஏதோ பெரிய ஜோக் சொல்லியதைப் போல் பெரிதாக சிரிக்க நான் ‘அப்பா அம்மா தாங்காமல் அடுத்த வீட்டுக்காரர்களா தாங்குவார்கள்… எங்கள் பெற்றோரும் எங்களைத் தாங்குவார்கள், நாங்களும் அவர்களைத் தாங்குவோம்…’ என்ற தொணியில் ஒரு பார்வை பார்த்தேன். ஆனால் சபை நாகரிகம் கருதி எதையும் சொல்லவில்லை.
அந்தப் பணியாளர் எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருப்பவர். அவருக்குத்தான் அவர் அலுவலகம் கிளம்புவதற்கு முன்னர் வீட்டில் மனைவியும், அம்மாவும் தாங்க வேண்டும். ஒருவரை அலுவலகம் கிளப்பி விட அத்தனை ஆர்பாட்டம் நடக்கும்.
வீட்டில் என் பெற்றோரிடம் இது குறித்து வருத்தப்பட்டபோது அவர்கள் ஒரே ஒரு விஷயம் மட்டும் சொன்னார்கள். ‘குரைக்கும் எல்லா நாய்களைப் பார்த்தும் கல் எறிந்து கொண்டிருந்தால் செல்ல வேண்டிய இடம் சென்று சேர முடியாது…’. எவ்வளவு பெரிய நம்பிக்கைப் பொதிந்த வார்த்தைகள்.
இந்தக் கதை எல்லாம் இப்போது எதற்கு என நீங்கள் நினைப்பது புரிகிறது.
நேற்று அந்த நபர் போன் செய்து ‘மேடம், என் மகன் பள்ளியில் ஒரு ப்ராஜெக்ட். தொழில் துறையில் தனித்துவமாக முன்னேறியவரிடம் நேர்காணல் செய்ய வேண்டும். அதற்காக என் மகனிடம் உங்களை பரிந்துரை செய்தேன். என் மகன் உங்களிடம் பேசுவான்…’ என்று சொல்லி போனை அந்த சிறுவனிடம் கொடுத்தபோது பல வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.
இந்தச் சிறுவன் போனில் அத்தனை மரியாதையாய் என்னிடம் தன் பள்ளி ப்ராஜெக்ட் குறித்து சொல்லியபோது அவனது வேண்டுகோளை மறுக்க முடியவில்லை.
இன்று காலை நேர்காணல் முடிந்தது. சுபம்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 8, 2022 | புதன்