ஆஃபீஸில் பிழிந்து எடுக்கிறார்களா?
’உங்க பையனுக்கு / பெண்ணுக்கு Work From Home தானே அல்லது நேரடியாக ஆஃபீஸ் போக ஆரம்பிச்சுட்டாங்களா?’
இதுதான் நான் சமீபமாக சந்திக்கும் பெற்றோர்களை பார்த்து கேட்கும் கேள்வி.
‘ஆமாம்… ஒர்க் ஃப்ரம் ஹோம்னுதான் பேரு…. பிழிஞ்சு எடுக்கறாங்க…’
எழுதிக்கொடுத்து சொல்லச் சொல்வதைப் போல் அத்தனை பெற்றோரும் இதே பதிலைச் சொல்வது ஆச்சர்யமாக உள்ளது. உழைக்கும் இளைஞர்கள் எதுவும் பெரிதாக சொல்வதில்லை.
காரணம், கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்தால் வேலையின் நடு நடுவே யு-டியூப், ஃபேஸ்புக், டிவிட்டர் என பலதரப்பட்ட விஷயங்கள் செய்து ரிலாக்ஸ் செய்துகொள்ள முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஆனால் பெற்றோர்கள்தான் நம் குழந்தை 9 மணி நேரமும் வேலையிலேயே கவனமாக இருப்பதாக நினைத்து அலட்டிக்கொள்கிறார்கள்.
வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சனை இல்லாமல் துரோகம் செய்யாமல் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தனர் அன்றையப் பெற்றோர்கள். இத்தனைக்கும் அப்போதெல்லாம் சம்பளமும் குறைவு.
இன்றோ நிலைமை அதற்கு நேர் எதிராக உள்ளது. இளைஞர்கள் உழைக்காமல் என்ன செய்யப் போகிறார்கள்? சமைக்கப் போகிறார்களா? வீட்டில் அப்பா அம்மாவுக்கு சேவை செய்யப் போகிறார்களா? சமுதாய சேவை செய்யப் போகிறார்களா? நாட்டுக்காக உழைக்கப் போகிறார்களா?
படித்தாயிற்று. நல்ல வேலையிலும் சேர்ந்தாயிற்று. எட்டு மணி ஒன்பது மணி நேரம் உழைப்பதில் என்ன பிரச்சனை இவர்களுக்கு என்றுதான் தெரியவில்லை.
வேலையில் இருந்தால் ஒரே ஒரு தலைமை. சுயமாக தொழில் செய்தால் ஒவ்வொரு கஸ்டமரும் நமக்குத் தலைமை. அத்தனை பேருக்கும் நாம் பதில் சொல்ல கடமைப்பட்டிருப்போம். அத்தனை பேரும் நம்மை பிழிந்து எடுப்பார்களே? அப்போது என்ன சொல்வார்கள் இந்த பெற்றோர்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 18, 2022 | சனிக்கிழமை