எல்லா தலைமுறையினருக்குமான ஹீரோ!
ஒருவர் தான் வாழ்ந்த காலத்தில் தன் வயதினருக்கும் (நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்),
தனக்கு அடுத்த தலைமுறையினருக்கும் (பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள்),
அதற்கும் அடுத்த தலைமுறையினருக்கும் (பேரன் பேத்திகள், அவர்களின் நண்பர்கள்)
அடுத்து வர இருக்கும் தலைமுறையினருக்கும் (கொள்ளு பேரன் பேத்திகளுக்கும்)
தலைசிறந்த ரோல் மாடலாக, ஹீரோவாக, முன்னுதாரணமாக நடை உடை பாவனை, பழக்க வழக்கங்கள், நல்லொழுக்கம் இப்படி எல்லா வகையிலும் எடுக்காட்டாக ஒருவர் இருக்க முடியுமா?
முடியுமே!
என் அப்பா ஆகச் சிறந்த உதாரண மனிதராக வாழ்ந்து வருகிறாரே.
ஆம். வாய் வார்த்தைக்காகவோ, எழுதுவதற்காகவோ, புகழ்வதற்காகவோ சொல்லவில்லை. உண்மையில் இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாட்டில் வசித்து வரும் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் அப்பாவின் ஹேர்ஸ்டைல், உடை உடுத்தும் நேர்த்தி, சமையல், விருந்தோம்பல், மென்மைத்தனம், அறச்சீற்றம் அத்தனைக்கும் ரசிகர்கள். எப்போது பார்த்தாலும் ‘யூத்’ என கொண்டாடுவார்கள். அப்பாவின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் நன்கு கவனித்து கொண்டாடுவார்கள்.
அப்பா மனதளவில் மட்டுமில்லாமல் உடலளவிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர் வாழ்ந்து வரும் ஒழுக்கமான வாழ்க்கை முறையே காரணம்.
அம்மாவும் இப்படித்தான். அம்மாவின் அறிவாற்றலை எல்லோரும் வியப்பார்கள். மதிப்பார்கள். கொண்டாடுவார்கள். அப்பாவின் செயல்பாடுகள் மூலம் ‘அழகன்’ என பெயர்பெற்றார் என்றால், அம்மா எல்லா வகையிலும் ‘அறிவுக்கு’ பெயர் பெற்றவர்.
என்னால் அம்மாவை பற்றி எழுதும்போது அப்பாவையும், அப்பாவை பற்றி எழுதும்போது அம்மாவையும் பிரித்து எழுத முடிவதில்லை.
ஆகவே, இன்றைய தந்தையர் தினப் பதிவாக ‘அப்பாம்மா’, ‘அம்மாப்பா’ இருவர் குறித்தும்!
தாயுமானவர் என்பதை ’அப்பாம்மா’ என்றும், தந்தையுமானவர் என்பதை ‘அம்மாப்பா’ என்றும் கூறும் வார்த்தைப் பிரயோகத்தை நான் அறிந்த வகையில் அடியேன்தான் அறிமுகப்படுத்தினேன் என நினைக்கிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன். மகிழ்கிறேன்.
இனியநாள் மலரட்டும்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 19, 2022 | ஞாயிறு | காலை 7.00