உங்கள் ‘Tagline’ என்னவென்று தெரியுமா?

உங்கள் ‘டேக்லைன்’ என்னவென்று தெரியுமா?

நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எத்தனையோ நபர்களை சந்திக்கிறோம். பேசுகிறோம். பழகுகிறோம். விலகுகிறோம். நம் மனம் அவர்களை எல்லாம் எப்படி நினைவில் வைத்துக்கொள்கிறது என்பதை சற்று ஆராய்ந்தால் விசித்திரமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.

ஒருவருடைய அடிப்படை இயல்பில்படி நம் மனதில் அவர்களைப் பற்றிய மதிப்பீடு பதிந்துவிடும். அந்த அடிப்படை மதிப்பீடுகளுக்கெல்லாம் அடிநாதமாய் இருப்பது அவர்கள் நமக்குள் ஒரு வார்த்தையிலோ அல்லது ஒரு கருத்திலோ அல்லது சிறிய முகபாவனையிலோ செலுத்திய நேர்மறை அல்லது எதிர்மறை உணர்வுகளாக இருக்கலாம்.

இதனை தொழில்நுட்ப வார்த்தையான Tagline என்பதுடன் ஒப்பிடலாம். மேலும் Motto, Slogan வார்த்தைகளையும் பொருத்திக்கொள்ளலாம்.

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு Motto / Slogan இருக்கும். வெப்சைட்டுகளில் வெப்சைட் பெயருக்குக் கீழே Tagline இருப்பதை கவனித்திருப்பீர்கள்.

உதாரணத்துக்கு எங்கள் காம்கேரின் Motto / Slogan / Tagline எல்லாமே ‘Work Perfection | Quick Service | Punctuality’

இதுவரை கவனிக்கவில்லை என்றால் இனி கவனியுங்கள். நிறுவனம், கடைகள் இவற்றின் பெயருக்குக் கீழேயே Tagline இருக்கும். அவர்களின் Motto, Slogan அவர்கள் இருப்பிடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் பதிய வைத்திருப்பார்கள். ‘Customer Satisfaction is our Motto’ என பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

என்னைப் பொருத்தவரை நிறுவனங்களுக்கு மட்டும்தான் இவைப் பொருந்தும் என்றில்லை. தனிநபர்களுக்கும் பொருத்திக்கொள்வேன் அல்லது என் மனம் ஒவ்வொருவருக்கும் ஒரு Tagline ஐ பொருத்திவிடும். அதன் அடிப்படையில்தான் அவர்களின் பிம்பம் என் மனதில் பதிவாகும்.

உதாரணத்துக்கு நான் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்த போது திருச்சியில் அனைத்து கல்லூரிகளுக்குமான கல்சுரல் நிகழ்ச்சியில் நான் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசைப் பெற்று அதற்கான சான்றிதழையும் பரிசாகக் கொடுத்த புத்தகத்தையும் எங்கள் தமிழ் பேராசிரியரிடம் காண்பித்தபோது அவர் சொன்ன ஒரு கருத்துதான் அவர் குறித்து என் மனதில் பிம்பமானது. அதுவே அவரது Tagline ஆக என் மனம் வைத்துக்கொண்டது.

அப்படி என்ன சொன்னார்?

அப்போதெல்லாம் நான் அதிகம் பேச மாட்டேன். இப்போது மட்டும் என்ன அப்படியேத்தான் இருக்கிறேன். அவசியத்துக்காக, இயங்கும் / இயக்கும் நிறுவனத்துக்காக அதன் சார்பில் பேசுகிறேன். மற்றபடி அறச்சீற்றம் ஏற்படும் நேரங்களில் மட்டும்தான் என் குரல் உயரும்.

பரிசை பேராசிரியரிடம் காண்பித்தபோது அவர், ‘மற்றவர்களுக்கு என்ன பரிசு?’ என்று கேட்டார். ‘தெரியவில்லை மேடம்’ என்று சொன்னேன். ‘வாயைத் திறந்து பேச வேண்டும். எல்லா நேரங்களிலும் அமைதியாக இருக்கக் கூடாது. இதுபோல கலைநிகழ்ச்சிகளுக்குச் சென்றால் உன்னுடன் சேர்ந்து பரிசு பெறுபவர்களுக்கு என்ன கொடுத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களுடன் பேச வேண்டும்’ என்று அமைதியாக சொல்லிவிட்டு நான் பரிசு பெற்றமைக்கு வாழ்த்தினார்.

அன்று அவர் அமைதியாக கனிவாக சொன்ன அந்தக் கருத்து என் மனதில் ஆழப் பதிந்தது. அவருடைய கனிவான குரலும் முகமும் அவரைப் பற்றிய நேர்மறை பிம்பமாய் என் மனதுக்குள் பதிவானது. இன்றுவரை அழியவே இல்லை. அவர் பெயர்: மைதிலி சேகர்.
அவரது கருத்துதான் அவருடைய Tagline.

இப்படி நான் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு Tagline வைத்திருக்கிறேன். அதுவே அவர்கள் குறித்து நினைக்கும்போது அவர்களின் முகம், குரல் இவற்றுடன் அவர்களை என் மனக்கண் முன் நிறுத்தும்.

நிறுவனங்களுக்கும், கடைகளுக்கும் Motto / Slogan / Tagline பார்த்திருப்பீர்கள். இனி மனிதர்களுக்கும் உங்களால் உணர முடியும். முயற்சியுங்கள். கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.

இவ்வளவு ஏன்? என்னைப் பற்றி நினைக்கும்போதுகூட உங்களுக்கு Tagline கிடைக்கலாம். 💚💚💚

குறிப்பு: புகைப்படத்தில் இருப்பது எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகத்தின் முதல் இரண்டு பக்கங்கள்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 16, 2022 | வியாழன் கிழமை

 

(Visited 898 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon