#கதை: அவனும் அவன் அம்மாவும் பின்னே ஒரு புத்தகக்கண்காட்சியும்!

அவனும் அவன் அம்மாவும் பின்னே ஒரு புத்தகக்கண்காட்சியும்!

அது ஒரு புத்தகக் கண்காட்சி போல் இருக்கிறது. அவள் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி புத்தகங்களை பார்த்துவிட்டு இறங்கும்போது ஒரு கடையில் ஒரு சிறுவன் அவன் அம்மாவின் இடுப்பைவிட்டு இறங்காமல் அடம்பிடித்துக்கொண்டே வருகிறான். அவனுக்கு ஏழெட்டு வயதிருக்கலாம். ஆனால் வளர்த்தி அதிகம். அவன் அம்மாவினால் தூக்கவும் முடியாமல் இறக்கி விடவும் முடியாமல் திணறியபடி புத்தகங்களைப் பார்வையிட்டுக்கொண்டே வருகிறாள். கடைகளில் இருக்கும் சிப்பந்திகளுக்கும் புத்தகங்களை வாங்க வரும் வாசகர்களுக்கும் அவனும் அவன் அம்மாவும் இடைஞ்சலாக இருந்தார்கள்.  சிலர் ‘ச்சூ’ கொட்டியபடி நகர்ந்து சென்றார்கள். ஒருசிலர் வெளிப்படையாக ‘ஏம்மா குழந்தைய நடக்க விட்டு அழைச்சுட்டு வரக்கூடாதா?’ என கேட்கிறார்கள்.

ஆனால் அவளுக்கு அவனும் அவன் அம்மாவும் செம கியூட்டாக தெரிந்தார்கள். புத்தகங்கள் மீது எத்தனைக் காதல் இருந்தால் இப்படி கஷ்டப்பட்டு குழந்தையுடன் கடைக்கு வந்திருப்பாள் என நினைத்துக்கொண்டாள். வீட்டில் பார்த்துக்கொள்ள கணவனோ அல்லது அம்மா அப்பா, மாமியார் மாமனார் யாரும் இல்லை போலும் என பரிதாபப்பட்டாள். அவள் கவனம் புத்தகம் வாங்குவதில் இருந்து நழுவி அந்த குட்டிச் சிறுவன் மீது இறங்கியது. அவனைப் பார்த்து கண்களை சிமிட்டி சப்தமில்லாமல் உதடு அசைய பேசிக்கொண்டு அவர்கள் பின்னாலேயே சென்றாள்.

ஒரு கட்டத்தில் அவனுடைய அம்மா திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள். அவனுடைய அம்மாவுக்கும் கிட்டத்தட்ட அவள் வயதுதான் இருக்கும். அவன் அம்மா மீண்டும் புத்தகங்களை பார்வையிட ஆரம்பித்தாள். அவள் அவனை ரசிக்க ஆரம்பித்தாள்.

சில நிமிடங்கள் ஆனதும் அவனுடைய அம்மா அவனை அவளிடம் விட்டு விட்டு ‘கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். நான் இதோ வருகிறேன்’ என கேட்டுக்கொண்டாள். ‘கரும்பு தின்ன கூலியா வேண்டும்?’ அவளும் ஆசையாய் அவனை வாங்கி வலது கையில் புத்தகங்களை கைகளில் ஏந்தியபடி நடக்கும் அந்தக்கால கல்லூரி பெண்கள் போல ஏந்தலாக ஏந்திக்கொண்டாள். சொல்லக் கூடாதுதான். ஆனாலும் அத்தனை கனமாக இருந்தான் அந்தச் சிறுவன். இப்போது அவளுக்கு அவன் அம்மா மீது இன்னும் கரிசனம் கூடியது. அவனை தூக்கியபடி சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தாள். நேரம் ஆக ஆக அவன் சிணுங்க ஆரம்பிக்க அடுத்தடுத்த கடைகளுக்குள் செல்லாமல் ஜூஸ் விற்றுக்கொண்டிருக்கும் கடைக்குச் சென்று அவனுக்கு ஒரு ஆப்பிள் ஜூஸும், தனக்கு ஒரு எலுமிச்சை ஜூஸும் வாங்கிக்கொண்டு ஓரமாக நின்றுகொண்டாள். அவனை இறக்கி நிற்க வைத்துக்கொண்டு அவன் கைகளில் ஆப்பிள் ஜூஸைக் கொடுத்து குடிக்கச் சொன்னாள். அவள் எலுமிச்சை ஜூஸைக் குடித்தாள்.

இப்படியே அரைமணி ஆனது. அவன் அம்மா எங்கே சென்றாள் என்றே தெரியவில்லை. அவளுக்கும் வீட்டுக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வரவே ஒரு கடையில் உள்ள விற்பனையாளரிடம் அந்தச் சிறுவனை கொடுத்துவிட்டு ‘கொஞ்சம் நேரம் பார்த்துக்கொள்ளுங்கள். இதோ வந்துவிடுகிறேன்’ எனச் சொல்லிவிட்டு வீட்டுக்கு விரைந்தாள்.

சிறுவனை தூக்கி வைத்திருந்த அசதி, புத்தகக்கண்காட்சியை சுற்றி வந்த களைப்பு எல்லாம் சேர்ந்து ஆளை அசத்த படுத்தவள் தூங்கி விட்டாள். எழுந்தபோது நேரம் மாலை ஆறாகி விட்டது.

‘ஐயையோ அந்தச் சிறுவனை கடையில் ஏதோ ஆள் தெரியாத சிப்பந்தியிடம் விட்டுவிட்டு வந்தோமே’ என அரக்க பரக்க ஓடி வந்தாள். ஆட்டோ பிடித்து வரலாம் என்ற பிரக்ஞை கூட வரவில்லை. அந்த அளவுக்கு டென்ஷன். ஓடி வந்தவளுக்கு புத்தகக் கண்காட்சி நடக்கும் இடம் மறந்து விடுகிறது. அந்த சாலையில் இருந்த டீக்கடையில் நின்றிருந்த இரண்டு பேரிடம் புத்தகக்கண்காட்சி நடக்கும் இடத்தை கேட்டாள். அவர்கள் ஏதோ வேற்று கிரகவாசிகள் போல ‘புத்தகக் கண்காட்சியா?’ என கேட்டார்கள். அப்படியே நடந்து வியர்க்க விறுவிறுக்க அங்கிருந்த கட்டிடங்களை அண்ணாந்து பார்த்தபடி ஓடுகிறாள்.

சற்று தொலைவில் இளநீர் விற்றுக்கொண்டிருந்தவரிடம் வழி கேட்டபோது அவர் ‘அது இன்னும் தொலைவில் இருக்குமா…’ என வழி சொல்கிறார். அவளுக்கு டென்ஷன் அதிகமாகி ஐயோ அந்தச் சிறுவன் என்ன ஆகி இருப்பானோ, அவன் அம்மாவும் என்னை தேடி இருப்பாளே, அவள் தொலைபேசி எண்ணைக் கூட வாங்கிக்கொள்ளவில்லையே, புத்தகக் கண்காட்சி மூடிவிட்டால் என்ன செய்வது என அரக்க பரக்க அங்கிருந்த ஆட்டோவில் ஏறி அமர முற்படுகையில் அதில் ஏற்கெனவே இரண்டு பேர் அமர்ந்திருக்க அவர்கள் இருவரையும் பார்க்கவே ரவுடிகள் போல் இருந்ததால் அந்த ஆட்டோவில் ஏறாமல் ஓடியே புத்தக்கண்காட்சி நடக்கும் இடத்துக்கு வருகிறாள். அதற்குள் அவள் அப்பா அவளைத்தேடிக்கொண்டு அங்கு வந்து நிற்க ‘ஏம்பா நீயும் இங்க வந்தே’ என கோபப்பட்டு நடந்ததைச் சொல்கிறாள். அவரும் அவளுடன் சேர்ந்து புத்தகக்கண்காட்சிக்குள் செல்கிறார்.

பிள்ளையை தொலைத்துவிட்டதால் அவள் அம்மா போலீஸில் புகார் அளித்திருப்பாளோ, தன்னை கைது செய்ய போலீஸ் வந்துவிடுமோ, காணாமல் போன அந்தச் சிறுவன் கைகால் முறித்து, கண் தோண்டி பிச்சை எடுக்க வைக்கும் கும்பலில் மாட்டி இருப்பானோ என எந்தெந்த வழிகளில் எல்லாம் பிரச்சனை வருமோ அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக அவள் நினைவுக்குள் புகுந்து அவளை அலைகழித்தது. கூகுள் கூட தேடும் தகவலுக்கு அத்தனை விடைகள் கொடுக்காது. அதைவிட அதிகமாய் அவள் மனம் அதிவேகமாய் தகவல்களை புரட்டி எடுத்துக் கொடுத்து வதைத்தது.

மனம் சோர்வாக சோர்வாக அழுகை வந்தது. அழுகிறாள். பொது இடத்தில் அவள் அழுவது இதுதான் முதல் தடவை. ஆனாலும் யாரும் அவள் அழுவதை கண்டு கொள்ளாமல் சிரித்தபடி, விவாதித்தபடி, பேசியபடி, கைகோர்த்தபடி நடந்து சென்றுகொண்டே இருந்தார்கள். யாருமே நின்று ‘என்ன பிரச்சனை, நான் உதவட்டுமா?’ என கேட்கவில்லை. இவ்வளவு ஏன் ‘அங்க பாரு அவளை அழுகிறாள்’ என சின்னதாக ஒரு ரகசிய பாஷையில் கூட அவள் அழுவதைப் பார்த்து யாரும் பேசிக்கொள்ளவில்லை.

‘என்ன ஒரு சுயநலமான உலகம்’ என பொறுமியபடி வேக வேகமாக அங்கும் இங்கும் ஓடுகிறாள். கடைசியில் அவள் சிறுவனை விட்டுச் சென்ற அதே கடையில் அவனுடைய அம்மா அவனைத் தூக்கிக்கொண்டு புத்தகங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு அப்பாடா என நிம்மதியாக இருந்தது. வாழ்க்கையில் அதுபோன்ற ஒரு நிம்மதியான உணர்வை அவள் உணர்ந்ததே இல்லை.

வாழ்க்கையில் இனி இப்படியான ஒரு இக்கட்டில் மாட்டிக்கொள்ளவே கூடாது என்றெண்ணியபடி கண்களைத் துடைத்துக்கொள்கிறாள்.

சட்டென விழிப்பு வருகிறது. அட அத்தனையும் கனவு!

அழுதுகொண்டே புத்தகக்கண்காட்சி முழுவதும் அந்தச் சிறுவனை தேடிய பெண் நான்தான் என்பதை நினைக்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. ஒரு கதை போல எத்தனை கோர்வையாக கனவுகள் வருகின்றன. கனவிலும் புத்தகங்களும் புத்தகக்கண்காட்சிகளும் எனும்போது வியப்பாக இருந்தது.

ஆனால் ஒரு விஷயம். நான் புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று பல வருடங்கள் ஆகின்றன!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 26, 2022 | ஞாயிறு 

(Visited 129 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon