மெல்லப் பரவி வரும் கொரோனாவின் அடுத்த அலை!

மெல்லப் பரவி வரும் கொரோனாவின் அடுத்த அலை!

விருந்து விசேஷங்கள் என களைக்கட்டத் தொடங்கி இருக்கும் நேரமிது. கொரோனா காலத்துக்குப் பிறகு குடும்பங்களும் உறவுகளும் குதூகலமாக சந்திக்கும் வைபவமாகவும் மாறி வருகிறது.

சந்தோஷமாகத்தான் உள்ளது. ஆனாலும் கொரோனா இன்னும் முழுமையாக ஓடவும் இல்லை. ஒளியவும் இல்லை. நம்முடன்தான் பயணிக்கிறது என்பதை நினைவில் கொண்டு சில விஷயங்களை பின்பற்றினால் நாமும் பாதுகாப்பாக இருக்கலாம். மற்றவர்களையும் காக்கலாம்.

1. மாஸ்க் அணிவதில் கூச்சம் வேண்டாம். உடல்நலம் பாதிக்கப்பட்டால் நீங்கள் யார் யாரைப் பார்த்து கூச்சப்படுகிறீர்களோ அவர்கள் வந்து உங்கள் வலிகளையும் உங்கள் குடும்பத்தாரின் வேதனையையையும் தாங்கிக்கொள்ளப் போவதில்லை.

2. கையில் எப்போதும் மிளகையும் கொஞ்சம் கற்கண்டையும் சேர்த்து அரைத்த பொடியை வைத்துக்கொள்ளவும். வெளியில் எங்கு சாப்பிட நேரிட்டாலும் சாப்பிட்ட பின்னர் அந்த பொடியில் இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு தண்ணீர் குடிக்கவும். சாப்பிட்ட உணவில் உங்கள் உடம்புக்கு ஒவ்வாதவை இருந்தால் அதை முறிக்கும் ஆற்றல் கொண்டது மிளகு. பூச்சிக் கடிக்கு கூட மிளகை சாப்பிடலாம். மிளகு ஆக சிறந்த விஷ முறிவு!

3. நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்ததும் பல் துலக்கி வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு கொப்பளித்து, மிதமான சூட்டில் குளிக்க வேண்டும். வெளியில் இருந்து வீட்டுக்குள் கிருமிகள் எதுவும் வராது. வீட்டில் உள்ளவர்களுக்கும் பரவாது.

4. எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் கொடுத்தனுப்புவார்கள். நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்ததும் குளித்து சுத்தமானதுடன் வெற்றிலையை துண்டு துண்டாக்கி அத்துடன் இஞ்சியை சீவி, சீரகம், ஓமம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தாராளமாக குடிக்கவும். வெற்றிலை இஞ்சி தண்ணீர் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்கும்.

2, 3, 4 பாயிண்ட்டுகளை படித்துவிட்டு ‘ஆமாம், இப்படி எல்லாம் செய்ய எங்கே நேரம் இருக்கு’ என சலித்துக் கொள்பவர்களுக்காக சில நிதர்சனங்களை பகிர்கிறேன். எல்லாம் உங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் எடுத்துச் சொல்லும்போதுதானே சில விஷயங்கள் நமக்கு ‘சுருக்’ என உரைக்கிறது.

சாதாரண காய்ச்சலுக்கே மருத்துவமனைகளில் எவ்வளவு நேரம் காத்திருந்து மருத்துவரை சந்திக்க வேண்டியுள்ளது. அதிலும் இரண்டு மூன்று முறை வர சொல்லும் போது பொறுமையாக சென்று வர வேண்டும். அலுப்பும் சலிப்பும் வேலைக்கு ஆகாது.

மருத்துவரிடம் செல்வதற்கு மகா பொறுமை வேண்டும். வியாதியைக் கூட சகித்துக்கொண்டு வலிகளைப் பொறுத்துக்கொண்டு சமாளித்துவிடலாம். மருத்துவருக்காக காத்திருக்கும் நேரம் / மருத்துவமனைகளில் மருத்துவரிடம் செல்ல நம் முறை வருவதற்காகக் காத்திருக்கும் நேரம் மரண அவஸ்த்தை என்பது அனுபவிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

சாதாரண சளி, காய்ச்சல், உடம்புவலி இதற்கே இப்படியென்றால் மற்ற பெரிய உடல்பாதிப்புகள் வந்து தொடர் சிகிச்சையில் இருப்பவர்களை நினைத்துப் பாருங்கள்.

வாழ்க்கையில் எதற்குப் பொறுமை வேண்டுமோ இல்லையோ மருத்துவமனை நமக்கு அசாத்திய பொறுமையைக் கற்றுக்கொடுக்கும்.

சரி சரி, விஷயத்துக்கு வருகிறேன். நம் கைகளை மீறிய உடல் நல பாதிப்புகளை விட்டு விடுவோம். அப்போது மருத்துவமனைதான் கோயில். மருத்துவர்கள்தான் தெய்வங்கள்.

நாமாக வரவழைத்துக்கொள்ளும் சின்ன சின்ன உடல் நலக் கோளாறுகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள மேலே சொன்ன 2,3,4 பாயிண்ட்டுகளில் சோம்பலை தவிர்த்து முடிந்தவரை பின்பற்ற முயல்வோம்.

ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழ நாங்கள் பின்பற்றும் சிறிய வழிமுறைகளை பகிர்ந்துள்ளேன். முடிந்தவர்கள் பின்பற்றலாம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 25, 2022 | சனிக்கிழமை | மாலை 5.30

(Visited 332 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon