Disclaimer
‘அக்னிபத்’ மற்றும் ‘அக்னி வீரர்கள்’ குறித்த இந்தக் கட்டுரையில் நான் சொல்லி இருக்கும் கருத்துக்கள் அனைத்தும் தொலைக்காட்சி, பத்திரிகை செய்திகள் மற்றும் அரசு சார்பில் வெளியிடப்படும் செய்திகள் மற்றும் அவர்களின் பிரத்யோக இணையதளம், சமூகவலைதள செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்தக் கட்டுரையின் சாராம்சம் எதுவும் என் சொந்தக் கருத்தல்ல. கற்பனையும் அல்ல. எனக்குத் தெரிந்த இளைஞர்கள் சிலரும் அவர்களின் பெற்றோரும் என்னிடம் இந்தத் திட்டம் குறித்து ஆலோசனை கேட்டார்கள். அவர்களுக்காக செய்திகளை ஆராய்ந்து கேள்வி பதில் பாணியில் கட்டுரை ஆக்கி உள்ளேன். இதில் குறிப்பிட்டுள்ள சம்பள விகிதங்கள், ஓய்வூதிய விவரங்கள் மற்றும் பணிக்காலங்கள் இவை அனைத்திலும் எந்த நேரத்திலும் மாற்றம் இருக்கலாம். அவற்றை துல்லியமாக கணக்கிட்டு எழுதவில்லை. தகவல்களின் அடிப்படையில் கணக்கிட்டு எழுதியுள்ளேன். இந்தக் கட்டுரையில் கூறியுள்ள ஊதிய விவரங்கள், பணிக்காலம் இவை காலமாற்றத்துக்கு ஏற்ப, அப்டேட் செய்யப்பட்ட திட்டத்தில் (ஏன் நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கும் நேரத்தில் கூட) மாறி இருக்கலாம். எனவே இந்தத் திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களை துல்லியமாக கவனமாக படித்து ஆராய்ந்து அறிந்துகொண்டு புரிந்துகொண்டு இணையுங்கள். அக்னிவீரர்களாக பணி புரிய விரும்பும் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!
—
அக்னிபத் – சந்தேகங்களும் விளக்கங்களும்!
‘அக்னிபத்’ – குறித்து மிக நீண்ட கட்டுரையை எழுதியதைத் தொடர்ந்து (கட்டுரை லிங்க்-https://compcarebhuvaneswari.com/?p=11296) பலரும் தங்கள் சந்தேகங்களையும் ஆதங்கங்களையும் பகிர்ந்திருந்தார்கள். முடிந்தவரை எல்லாவற்றுக்கும் பதில் அளித்துள்ளேன்.
1. மிலிட்டரியில் வேலை செய்துட்டு வந்தவங்களுக்கு செக்யூரிட்டி வேலைதான் கொடுக்கிறாங்க?
மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். இன்றல்ல, நேற்றல்ல எல்லா காலகட்டங்களிலும் இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அவரவர் கல்வித் தகுதியின் அடிப்படையிலும், இராணுவத்தில் பணி சார்ந்து நடக்கும் தேர்வுகளை எழுதி பணி உயர்வு பெற்றிருந்தால் அந்தத் தகுதியின் அடிப்படையிலும் இராணுவப் பணிக்காலத்துக்குப் பிறகு வெளியில் வேலை வாய்ப்புகள் இருந்துதான் வருகின்றன.
எனக்குத் தெரிந்தே என் பெற்றோருடன் பணி புரிந்த சிலர் இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள். அவர்களின் அடிப்படைக் கல்வி அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி. அவர்கள் இராணுவ பணி ஓய்வுக்குப் பிறகு தொலைபேசி ஆப்பரேட்டர்களாக பணி கிடைக்கப்பெற்று முழுமையாக பணியாற்றி முறையாக தங்கள் 60 வயதில் ஓய்வு பெற்றார்கள். ஒருசிலர் தொலைபேசி துறை சார்ந்த தேர்வுகள் எழுதி JE, SDE என பதவி உயர்வும் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல இராணுவ வீரர்களில் பலர் வங்கிகளில் கிளார்க்காக பணியாற்றி உள்ளார்கள். இப்போதும் பணியாற்றுகிறார்கள். அவர்களில் பலர் காலப்போக்கில் வங்கியில் துறை சார்ந்த தேர்வுகள் எழுதியோ அல்லது அவர்களின் சர்வீஸ் காலத்துக்கு ஏற்பவோ வங்கியில் உயர் பதவிக்கும் சென்றுள்ளவர்களையும் பார்த்திருக்கிறேன்.
ஆனால் அடிப்படை கல்வியை மட்டும் வைத்துக்கொண்டு இராணுவத்திலும் துறை சார்ந்த தேர்வுகள் எழுதி பணி உயர்வும் பெறாமல் சிப்பாயாக சேர்ந்து சிப்பாயாக மட்டுமே பணியாற்றி வெளியே வந்தவர்களுக்கு செக்யூரிட்டி பணி தானே கொடுக்க முடியும் என்கிறார்கள்.
2. ‘இன்று இராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையிலான வேலை என்பதுபோல் எதிர்காலத்தில் எல்லா அரசு வேலைகளையும் நான்கு ஆண்டுகளோ ஐந்தாண்டுகளோ ஒப்பந்த அடிப்படையில் கொண்டு வந்து யாரையும் அரசு வேலையில் நிரந்தரமாக பணியில் இருக்க விட மாட்டார்கள். அரசு வேலை என்பது பாதுகாப்பானது, மதிப்பானது, பென்ஷன் கிடைக்கும், திடீரென வேலையில் இருந்து நீக்க முடியாது நிரந்தரமான வேலை என்பதல்தான் இளைஞர்களை அரசு வேலை ஈர்க்கிறது….’ என்ற கோணத்தில் வந்திருந்த அனைத்து கேள்விகளுக்கும் பொதுவான பதிலைக் கொடுக்கிறேன்.
கிட்டத்தட்ட 30 வருடங்களாக தொழில்நுட்பத் துறையில் இயங்கி வருகிறேன். எனக்குத் தெரிந்து 2000 வரை அரசு வேலை மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பு இருந்தது என்னவோ உண்மைதான். எப்போது தொழில்நுட்பத் துறை வேரூன்றி உலகம் முழுவதும் பரவலாக செழிப்படைய ஆரம்பித்ததோ அப்போதில் இருந்து இளைஞர்களுக்கு ஐடி துறையிலும், ஐடி துறை சார்ந்த பணிகளிலும்தான் ஈர்ப்பு அதிகம். கை நிறைய சம்பளம், வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு, நினைத்தால் எந்த நிறுவனத்துக்கும் மாறி தற்போது வாங்கும் சம்பளத்தை விட அதிகமான ஊதியம் பெறலாம், வீடு, கார் இன்னபிற வசதிகளுக்கு கேட்டவுடன் கிடைக்கும் வங்கிக்கடன் இப்படியான வண்ணமயமான வசதிகளைக் கொண்டது ‘ஒயிட் காலர் ஜாப்’ ஐடி துறை. முக்கியமாக கல்லூரிப் படிப்பு முடிவதற்குள் கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை வாய்ப்பை பெற முடிகிறது. ஆக, இளைஞர்களின் ஆர்வம் எல்லாம் ஐடிதுறை மீதுதான். இதிலும் சலிப்படைந்தவர்கள் சுயமாக பிசினஸ் செய்ய ஆரம்பிக்கிறார்கள் அல்லது விவசாயம், கால்நடை வளர்ப்பு என செல்ல ஆரம்பிக்கிறார்கள். நன்றாகவே வாழ்க்கையை அனுபவிக்கக் கற்று வைத்துள்ளனர் இளைய தலை முறையினர்.
அதிலும் சுறுசுறுப்பான இளைஞர்கள் சிலர் ‘என்னால் அரசு வேலையில் ஓரிடத்தில் அமர்ந்து ஒரே மாதிரி வேலைகளை செய்து கொண்டிருப்பதை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது’ என்கிறார்கள். இன்றல்ல, நேற்றல்ல பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பே. அப்படிச் சொன்ன சதவிகிதத்தினர்களின் எண்ணிக்கைக் கூடியுள்ளதே தவிர குறையவில்லை. அரசுத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் அதற்கான தேர்வுகள் எழுதியும், இன்னபிற வழிகள் மூலமும் சேர்வது உண்மைதான். ஆனால் சதவிகிதம் குறைவு என்கிறேன்.
25 வருடங்களுக்கு முன்னர் எல்லாம் ‘பையனுக்கு அரசாங்க உத்யோகம்…’ என்பதே திருமணத்துக்கு மணமகன் அதிக வரதட்சனை வாங்க உதவும் கேடயமாக இருந்ததை நாம் அனைவரும் அறிவோம். இன்று அந்த நிலைமைக்கான சுவடுகூட கிடையாது. திருமணம், வேலை, குழந்தைகள் இவற்றின் மீதான நம்பிக்கைகளும் சம்பிரதாயங்களும் பெருமளவில் மாறிவிட்டன.
எல்லாம் சரி, உங்கள் விவாத கருத்துக்கே வருகிறேன். அரசாங்க வேலையைக் கூட ஒப்பந்த அடிப்படையில் பத்து வருடம், பதினைந்து வருடம் என கொண்டு வந்தால் அடுத்தடுத்து வருகின்ற இளைய சமுதாயமும் அரசாங்க வேலை கிடைக்கப் பெற்று அந்த வசதிகளை அனுபவிக்க முடியும் அல்லவா? அரசு வேலையில் அனுபவம் பெற்றவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் முன்னுரிமை கொடுக்கலாம். அரசு வேலையில் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 என்றார்கள். 62 ஆக்கப்போவதாய் ஒரு பேச்சு அடிபட்டது இடையில். இப்படி அரசுப் பணியில் வயதில் மூத்தோர்கள் பணியில் நீடிக்க நீடிக்க அவர்கள் செய்யும் பணியில் அனுபவ முதிர்ச்சியும் செயல்திறன் மேம்பாடும் அல்லவா அதிகரிக்க வேண்டும். ஆனால் சலிப்பு அல்லவா வெளிப்படுகிறது. இதுவரை கவனிக்கவில்லை என்றால் இனி கவனித்துப் பாருங்கள் அரசு அலுவலகங்களில்.
இப்படியான கருத்தை நான் முன்வைப்பது யாரையும் காயப்படுத்த அல்ல. காயப்படுத்தி இருந்தால் மன்னிக்க. நான் எழுதிய அக்னிபத் என்ற கட்டுரை குறித்து என்னிடம் ஆதங்கப்பட்டதால் விரிவாக சொல்ல வேண்டியதாயிற்று. அவ்வளவே!
3. அப்படியானால் நாற்பது வயதில் அரசு வேலையில் இருந்து வெளியில் வந்து வேறு வேலை தேடிக்கொண்டிருக்க முடியுமா?
ஐடியில் பணி புரிபவர்களை சென்று பாருங்கள். அவர்கள் நாற்பது வயதென்ன, ஐம்பது வயதில் கூட சலிக்காமல் சளைக்காமல் நிறுவனம் விட்டு நிறுவனம் தாவிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஒரே நிறுவனத்தில் பணி புரிபவர்களைப் பார்த்து, ‘இன்னுமா அதே நிறுவனத்தில்…’ என்ற ஆச்சர்யக் கேள்வி எழுவது உறுதி.
கால மாற்றத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டியதுதான். 25 வருடங்களுக்கு முன்னர் இருந்த உரம் ஏற்றாத காய்கறிகளும் பழங்களும் மற்ற உணவுப் பண்டங்களும் இப்போது கிடைக்கிறதா? மாசற்ற காற்று கிடைக்கிறதா? சுத்தமான தண்ணீராவது கிடைக்கிறதா? எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு தானே வாழ்ந்து வருகிறோம். எதிலாவது நம் எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்றால் உணவு, நீர், காற்று இவற்றை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவோம். அதுதான் நாம் அடுத்த சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் சொத்து!
4. அரசு வேலை பற்றி ஐடி நிறுவனம் நடத்தும் உங்களுக்கு என்ன தெரிந்துவிடப் போகிறது?
என் அப்பா அம்மா இருவருமே மத்திய அரசு வேலையில் 40 ஆண்டு காலம் பணி புரிந்து 15 வருடங்களுக்கு முன்பே ஓய்வு பெற்றவர்கள். அதிலுள்ள அத்தனை வசதிகளையும் அவர்களும் அறிவார்கள். எங்களுக்கும் தெரியும். ஆனாலும் நான் கம்ப்யூட்டர் துறையில் தனித்துவமான செயல்பட வேண்டும் என விரும்பியதால் என்னை அரசு வேலைக்கு செல்லச் சொல்லி வற்புறுத்தவில்லை. என் உடன் பிறந்தவர்களையும் வற்புறுத்தவில்லை. அவர்கள் நினைத்திருந்தால் மற்றவர்களை விட சிறப்பாக வழிகாட்டி சுலபமாக அரசுத்துறையில் வேலைக்கு நுழைய வைத்திருக்க முடியும். ஆனால் என் விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து என்னை தொழில் முனைவராக்கினார்கள். கடின உழைப்பால் இன்று அந்தத்துறையில் பெயர் சொல்லும் இடத்தில் இருக்கிறேன். இது நடந்தது 1992. கிட்டத்தட்ட 30 வருடம் கடந்துவிட்டது.
இன்று போல அன்று ஐடிதுறையும் வளரவில்லை. எங்கள் காம்கேர் நிறுவனம் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஐடிதுறை பற்றிய விழிப்புணர்வு வருவதற்கு வழிவகுத்தது என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.
5. உங்களுக்கு பத்தாம் வகுப்போ அல்லது பன்னிரெண்டாம் வகுப்போ படித்த மகன் இருந்திருந்தால் அவரை அக்னிபத் திட்டத்தில் சேர்ப்பீர்களா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.
மனசாட்சியை தொட்டே சொல்கிறேன். இருந்திருந்தால் செய்திருப்பேன். பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, அதையும் வேப்பங்காயாக படித்து தட்டுத்தடுமாறி பாஸ் செய்துவிட்டு, மேலே படிக்காமல் எந்த வேலையும் செய்யாமல் குறிக்கோள் இல்லாமல் ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தால் நிச்சயம் அவனுக்கு இந்தத் திட்டம் பற்றி சொல்லி புரிய வைத்து படிப்புதான் வரவில்லை, நாட்டுக்காகவாவது ஏதாவது நல்லது செய்து நீயும் பயன்பெற்று உன் வாழ்க்கையை பயனுள்ளதாக்கிக்கொள் என்பதை நயமாக புரிய வைத்து அந்தத் திட்டத்தில் அவனே சேர்ந்துகொள்ளும் ஆர்வத்தை உண்டாக்குவேன்.
மீண்டும் சொல்கிறேன்… அக்னிபத் – இளைஞர்களுக்கான கம்பீர உலகம்! சந்தேகமே இல்லை!
ஜெய்ஹிந்த்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 23, 2022 | வியாழன் | காலை 6.30