வாழ்வோம், வாழ வைப்போம்!

வாழ்வோம், வாழ வைப்போம்!

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!

பாரதியின் இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது பெருமதிப்புக்குரிய திரெளபதி முர்மு அவர்கள் இந்தியாவின் 15-வது ஜானாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாரதத்தின் முதல் குடிமகளாக பொறுப்பேற்று கூடுதல் சிறப்பைப் பெற்றுள்ளதை காணும்போது!

2022 அரசியலில் இவருக்கு வெள்ளி விழா ஆண்டு. ஒடிசாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பைடாபோசி என்ற கிராமத்தில் மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து (ஜுன் 20, 1958) வளர்ந்து கல்லூரிப் படிப்பை முடித்து இளநிலை உதவியாளர், ஆசிரியர்,  கவுன்சிலர்,  அமைச்சர், ஆளுநர்  எனப் படிப்படியாக முன்னேறி பாரதத்தின் முதல் குடிமகளாக ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

இவரது வாழ்க்கையில் இவர் பட்ட கஷ்டங்கள்தான் இவரை மிக உறுதியானவராக மாற்றியுள்ளது என்று சொன்னால் அதுவும் மிகையாகாது.

2009-ம் ஆண்டு இவரது மூத்த மகன் லஷ்மன் இறந்தபோது இவர் மன அழுத்தத்தின் எல்லைக்கே சென்றார். இவர் இனி எழமாட்டார் என பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் இவர் பிரம்ம குமாரி ஆஸ்ரமத்தில் சேர்ந்து மனதை சமப்படுத்தும் யோகா, தியானம் போன்றவற்றைக் கற்றுக்கொண்டு அதற்கான படிப்பையும் முடித்தார். அதன் பிறகு தினமும் 3.30 மணிக்கு எழுந்து நாள் தவறாமல் யோகா செய்யத் தொடங்கினார். இந்த வழக்கம் அவர் உயிர்ப்புடன் வாழ்வதற்கான சக்தியையும் மனதிடத்தையும் கொடுத்தது.

அதற்கடுத்த சில வருடங்களில் அவரது இளைய மகன் சாலை விபத்தில் இறந்துவிட இவரால் அந்த துக்கத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இறைவனிடம் கதறித் துடித்தார்.

அதைத் தொடர்ந்து அவரது அம்மாவும், இளைய சகோதரரும் இறந்தனர். அதோடு விட்டதா சோகம், இவரது கணவர் மகன்களை இழந்த சோகத்தைத் தாங்க முடியாமல் அதே துக்கத்தில் இறந்துவிட்டார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தன் கணவர் குறித்து, ‘முதல் மகன் இறந்த பிறகு நான் யோகாவும், தியானமும் பயின்று தினமும் பயிற்சியும் செய்து வந்ததால், இரண்டாவது மகன் இறந்த போது நான் முழுமையாக உடைந்துவிடவில்லை, ஆனால் என் கணவரால் என் அளவுக்கு மனஉறுதியுடன் வாழ முடியவில்லை, அதனால் இறந்துவிட்டார்’ என பகிர்ந்துள்ளார். மேலும் தன் மகள் மட்டும்தான் படித்து முடித்து திருமணம் செய்து நல்ல வேலையில் அமர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறார் என்றும் கூறியுள்ளார்.

இவர் தன் குடும்ப நிலத்தை பொதுமக்களுக்காக நன்கொடையாக கொடுத்துள்ளார். இவர் தன் கணவர் மற்றும் இரண்டு மகன்களின் நினைவாக உறைவிடப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். பழங்குடி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கல்வியும் நல்ல ஆரோக்கியமான சூழலையும் உருவாக்கிக் கொடுத்து வருகிறார்.

இவரது வாழ்க்கையை சுனாமியாகப் புரட்டிப் போட்ட ஐந்து குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்குப் பிறகு இவர் ஆன்மிகத்திலும், சைவ உணவிலும் (spirituality and vegetarianism) அதீத ஈடுபாடு கொள்ளலானார்.

மிகக் கொடுமையான வலிகள் தாங்கிய ஒரு தனி நபரின் வாழ்க்கைப் பாதை, பொதுநலனுக்குப் பயனுள்ளதாய் அமைந்ததுடன் ஆன்மிகத்திலும் சைவ உணவின் மீதும் அதீதப் பற்றை உண்டாக்கி இருப்பதைக் காணும்போது நமக்கும் நம் வாழ்க்கை மீது இன்னும் கூடுதல் அக்கறையும், நம் வாழ்க்கையின் அவசியமும் நம் கண்முன் விரிகின்றதல்லவா?

வாழ்வோம், வாழ வைப்போம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜூலை 24, 2022 | ஞாயிறு

(Visited 659 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon