ஆப்பிள், காம்கேர் என்றல்ல, எல்லாவற்றுக்கும்தான்!

Image Courtesy: https://en.wikipedia.org/wiki/NeXT

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரான ஸ்டீவ் ஜாப் தனது புதிய நிறுவனத்துக்கு லோகோ உருவாக்கிக் கொடுக்க ஒரு கலைஞரை அழைத்தார். அவரிடம் நான்கைந்து லோகோக்களை உருவாக்கி வருமாறும் தனக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

அந்த கலைஞரோ தன்னால் ஒரே ஒரு லோகோ மட்டுமே உருவாக்க முடியும், அதை பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளவும் இல்லை என்றால் அதற்காக தான் வாங்கிய பணத்தைக் கூட கொடுக்க மாட்டேன் என உறுதியாக சொல்ல நிறுவனத்தில் உள்ள ஆலோசகர்கள் அவரிடம் பொறுப்பைக் கொடுக்க வேண்டாம் என சொல்லியும் கேளாமல், இத்தனை உறுதியாக ஒரு கலைஞர் கூறுகிறார் என்றால் அவர் தன் தொழில் மீது எத்தனை பக்தியாக இருப்பார் என்ற ஒரே காரணத்துக்காக ஸ்டீவ் ஜாப் தன் புதிய நிறுவனத்துக்கான லோகோ வடிவமைப்பை அந்த கலைஞரிடமே கொடுக்கிறார்.

அந்தக் கலைஞர் ஒரு லோகோவை மட்டும் உருவாக்கிக் கொண்டு வந்து அத்தனை பேரையும் அசத்தினார். அதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால் அத்துடன் சேர்த்து அவர் செய்த மற்றொரு செயல்தான் அனைவரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியது.

என்ன செய்தார் தெரியுமா?

100 பக்க கையேடு ஒன்றை தயாரித்து லோகோவுடன் கொடுத்தார். அதில் அந்த லோகோவை உருவாக்குவதற்கு எத்தனை லோகோக்களை உருவாக்கி அதன் கலரிலும், அமைப்பிலும், கோணத்திலும் திருப்தியில்லாமல் கடைசியாக இந்த லோகோவை கொண்டு வந்தார் என விரிவாக எழுதி இருந்தார்.

இதனால் ஈர்க்கப்பட்ட ஸ்டீவ் ஜாப் அந்த லோகோவை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினார்.

இதில் எனக்கு வியப்பேதும் தோன்றவில்லை. ஆகச் சிறந்த திறமைசாலிகளுக்கு இருக்கும் மன உறுதியும் தொழில் பக்தியும் நேர்த்தியுமே அந்தக் கலைஞரின் ப்ளஸ் பாயிண்டாக எனக்குத் தோன்றியது.

மிக சமீபத்தில் பாரம்பர்யமிக்க ஒரு மீடியா நிறுவனத்தின் இ-பிரிண்ட் பிரிவுக்கு எங்கள் காம்கேருடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அந்த நிறுவனத் தலைவரின் செயல்பாடு நினைவுக்கு வந்து நிறுவனங்களின் வீட்சிக்கான காரணத்தை முன்னிறுத்தியது.

அவருடைய நிறுவனத்தில் அவருக்கே தெரியாமல் அவரின் நம்பகமான ஊழியர்கள் சிலரின் முறையற்ற நிர்வாகக் கோளாறுகள் குறித்து இரண்டு A4 பக்க அளவுக்கு விரிவாக இமெயில் அனுப்பினேன். அதற்கு எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. அவர் அதை முழுமையாக படிக்கவில்லை என அவர் உதவியாளர் மூலம் அறிந்தேன். ஏன் என்றால் அவர்தான் இமெயில்களை படித்துக் காண்பிப்பாராம்.

அடுத்து ஆன்லைனில் ஜூமில் வாரந்திர மீட்டிங்குகள் நடந்த பிறகு மீட்டிங்கில் பேசியவை குறித்தும் அதற்கான முன்னெடுப்புகள், தீர்வுகள், விளக்கங்கள் குறித்தும் அதிக பட்சம் A4 பக்க அளவில் இரண்டு மூன்று பக்கங்கள் இமெயில் அனுப்புவேன்.

இரண்டு மூன்று வாரங்கள் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. மூன்றாவது வாரம் நல்ல ரெஸ்பான்ஸ். நான் அசந்தே போனேன். ஏன் தெரியுமா?

‘நீங்கள் அனுப்பும் நீண்ட இமெயில்களை எல்லாம் என்னால் படிக்க முடியாது… நேரமும் கிடையாது எதுவாக இருந்தாலும் ஓரிரு வரிகளில் சுருக்கமாக எழுதவும்’

இப்படி ஒரு நிறுவனத் தலைவர் இருந்தால் அசந்து அசந்து போகாமல் எப்படி இருக்க முடியும்?

வாராந்திர மீட்டிங்கில் பேசிய விஷயங்களுக்கான தீர்வை ஓரிரு வரிகளில் எப்படி சொல்ல முடியும்?

அவருடைய உதவியாளரிடம் இதுகுறித்து பேசியபோது அவர், ’எங்கள் நிறுவனத் தலைவருக்கு யாருமே இதுபோல் விளக்கமாக விரிவாக எதையுமே சொன்னதில்லை. நீங்கள் விரிவாக எழுதுவது அவருக்கு புதிதாக உள்ளது’ என்றார்.

பிறகொரு நாள், வாரத்தில் மூன்று நாட்கள் மீட்டிங் வைத்துக்கொள்ள வேண்டுகோள் வைத்த போது நான் உறுதியாக மறுத்தேன். ‘மீட்டிங் என்பதே அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கான முன்னோட்டம். வாரத்தில் ஒரு நாள் நான் கொடுக்கும் ஐடியாக்களையே தங்களால் படித்துப் பார்க்கவோ அல்லது செயல்படுத்தவோ முடியவில்லை என்றால் வாரம் முழுவதும் மீட்டிங் வைத்துப் பேசினாலும் ஆகப் போவது ஒன்றும் இல்லை. என்னால் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே ஜூமில் மீட்டிங்கிற்கு வர இயலும்’ என உறுதியாக சொன்னேன்.

எனக்கே கூட ஒரு கட்டத்தில் நாம்தான் ப்ராஜெக்ட் குறித்தும், நிர்வாகம் குறித்தும் விரிவாக சொல்கிறோமோ, சுருக்கமாக சொல்லத் தெரியவில்லையோ எனத் தோன்றியதுண்டு.

அப்போதுதான் தன் லோகோ வடிவமைப்பு குறித்த 100 பக்கக் கையேட்டுடன் லோகோவை உருவாக்கிக் கொடுத்த கலைஞரின் செய்கை நினைவுக்கு வந்தது.

பெரும்பாலான நிர்வாகங்களின் வீட்சியில் நிர்வாகத் தலைமைகளுக்கு சின்னச் சின்ன விஷயங்களுக்கும் காது ‘கொடுத்து’ கேட்கும் திறன் இல்லாமல் போனதும், தொலைநோக்குப் பார்வையுடன் எந்த விஷயத்தையும் கூர்ந்து பார்க்கும் பார்வைத் திறன் இல்லாமல் போனதும், தேவையில்லாத விஷயங்களையே வெத்து வேட்டாகப் பேசுகின்ற வாதத்திறனும் பெரும்பங்கு வகிக்கின்றன என்பது புரிந்தது.

சாதாரணமானவர்களுக்குய் வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் இரண்டு வரிகளைக் கூட படிக்க பொறுமை இருப்பதில்லை என்பது வேறுவிஷயம்.

நிறுவனத் தலைவர்களுக்கு ஒவ்வொரு விஷயமும் மிக முக்கியம். தன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட மற்றொரு நிறுவனத் தலைவர் அனுப்பும் 2 பக்க இமெயிலுக்கு ராயல் சல்யூட் அல்லவா கொடுக்க வேண்டும்.

அதைவிட்டு சொல்ல வந்ததை சுருக்கமாக ஓரிரு வரியில் சொல்லவும் என்றால் என்னத்தை சொல்வது?

‘உங்கள் ஊழியர்கள் சரியில்லை, உங்களை ஏமாற்றுகிறார்கள்’ என்றா சொல்ல முடியும்.

என்ன செய்தால் சிறப்பாக இருக்கும், எப்படி கொண்டு சென்றால் ப்ராஜெக்ட் வெற்றி பெறும், என்ன மாதிரியான மாற்றங்கள் தேவை என சொல்வதற்கு கொஞ்சம் வார்த்தைகள் அதிகமாகத்தானே எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும்?

குறிப்பாக அந்த நிறுவனத் தலைவர் பெண் என்பதால் அந்த நிறுவனத்தில் பணி புரிபவர்களில் ஒரு சிலர் அவர் இரவு 8 மணி, 9 மணிக்கு வேலை சம்மந்தமாக ஊழியர்களுக்கு போன் செய்வதைக் கூட தரக் குறைவாக பேசுவதை அவர் கவனத்துக்குக் கொண்டு செல்லவே முடியவில்லை.

தூக்கி எறிய ஓரிரு வார்த்தைகள் போதும், ஒட்ட வைக்க விரிவான விளக்கங்களால் மட்டுமே முடியும்.

இதைப் புரிந்துகொண்டால் எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் நிர்வாகம் ஜெயம் தான்.

அது சிறு மளிகைக் கடை முதல் கார்ப்பரேட் நிறுவனம் வரை காரிய வெற்றிக்கு இதே லாஜிக் தான்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜூலை 26, 2022 | செவ்வாய்

(Visited 599 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon