நீல வானம் நோக்கி அலகுடைந்த காக்கை!
சில தினங்களுக்கு முன்னர் ஒரு மாற்றுத்திறனாளி காகம் பற்றி எழுதி இருந்தேன். அதற்காவது அலகில் ஒரு பகுதி மட்டும் உடைந்திருந்தது.
ஆனால், ஆடி அமாவாசை அன்று வந்திருந்த மற்றொரு மாற்றுத்திறனாளி காகத்தின் கதை ரொம்பவே பரிதாபம்.
அதற்கு ஒரு கால் இல்லை. அலகின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்தது. சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாது. கண் முன் உணவு இருந்தாலும் சாப்பிட முடியாது. வேறொரு காகம் ஊட்டி விட்டால் மட்டுமே சாப்பிட முடியும்.
எங்கள் வீட்டுக்கு விருந்தாளிகளாக காகங்கள் மட்டும் அல்ல, புறாக்கள், அணில்கள், பச்சைக் கிளிகள், அணில்கள் என பலவும் வருவதுண்டு. எனவே, நாங்கள் அரிசி, சாதம், பிஸ்கட், பழத்துண்டுகள் என விதவிதமாக உணவு வைப்போம்.
முழு அலகும் உடைந்திருந்த இந்த காகம் தன் முன் இருக்கும் பிஸ்கட்டையோ அல்லது அரிசியையோ சாப்பிட முடியாமல் உட்கார்ந்திருப்பதை படத்தில் காணலாம். ஏன் தொட்டியில் நாங்கள் வைத்திருக்கும் தண்ணீரைக் கூட பருக முடியவில்லை.
கடைசியில் சாதத்தை முடிந்த அளவு சாப்பிட பார்க்கிறது. அப்படியும் முடியவில்லை. தலையை சாய்த்து உடலை குறுக்கி படுத்த வாக்கில் சாதத்தை எடுக்கப் பார்க்கிறது. கொஞ்சம் சாப்பிட்டது.
ஏன் இப்போதெல்லாம் அடிக்கடி நிறைய மாற்றுத்திறனாளி காகங்கள் எங்கள் கண்களில் படுகின்றன என யோசித்துக்கொண்டே இருக்கும்போது அந்தக் காகம் நான் நடந்துகொண்டிருந்த இடத்துக்கு அருகில் உள்ள சுவரில் வந்து அமர்ந்து என்னை பார்த்தது. ‘என்ன வேணும் சொல்லு, நான் எப்படி உனக்கு சாப்பாடு போடுவது, நான் எப்படி உனக்கு ஊட்டுவது?’ என பேச்சுக் கொடுக்க அது குறுகுறுவென என்னைப் பார்த்து விழியை உருட்டி உருட்டி பார்த்தது. கழுத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டது.
பின்னர் என்ன நினைத்ததோ பறந்து சென்று மிக உயரமான தண்ணீர் தொட்டி மீது அமர்ந்துகொண்டு
வானத்தை பார்க்க ஆரம்பித்தது.
நீல வானம். தண்ணீர் தொட்டி. ஒற்றைக் காலுடன் அமர்ந்திருந்த அந்தக் காகத்தின் கம்பீரம் எனக்குப் பிடித்திருந்தது. Hats off to you! என மனதுக்குள் சொல்லிக்கொண்டே நடையைத் தொடர்ந்தேன்.
வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாமல் பேசுபவர்களிடம் இந்தக் காகத்தின் தன்னம்பிக்கையை சொல்லுங்கள்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 29, 2022 | வெள்ளி