நடங்கள், பிரச்சனைகள் சல்யூட் அடிக்கும்!

 

நடங்கள், பிரச்சனைகள் சல்யூட் அடிக்கும்!

எங்கள் நிறுவன கிளையிண்ட் ஒருவர் போன் செய்திருந்தார். பல வருடங்களுக்கு முன்பு அவருக்காக சில ப்ராஜெக்ட்டுகள் செய்து கொடுத்திருக்கிறோம்.

கொரோனாவுக்குப் பிறகு அவர் செய்துகொண்டிருந்த பிசினஸில் தொய்வு ஏற்பட்டதால் மிகவும் சோர்வாகவே பேசிக்கொண்டிருந்தார்.

பொதுவான விஷயங்களை பேசிய பிறகு ‘தினமும் வாக்கிங் செல்லுங்கள்’ என்றேன்.

‘வாழ்க்கையில் மோட்டிவேஷனே போய் விட்டது. ஏதேனும் மோட்டிவேஷன் இருந்தால் தானே வாக்கிங், ஜாகிங் எல்லாம்…’ என எதிர்மறை எண்ணங்களுடனேயே பேசினார்.

‘வாக்கிங் செல்ல மோட்டிவேஷன் தேவையில்லை சார், வாக்கிங்கே மோட்டிவேஷனுக்காகத்தான், மோட்டிவேஷன் கிடைக்கவே வாக்கிங் செல்லச் சொல்கிறேன்’ என்றேன்.

என் பதிலில் அவர் ஆச்சர்யப்பட்டார்.

‘ஆமாம் சார், தொழிலில் பிசியாக இருந்தபோது நேரமில்லை, அதனால் வாக்கிங் செல்வதில்லை. தொழிலில் தொய்வு ஏற்படும்போது வாழ்க்கையில் மோட்டிவேஷன் இல்லை, அதனால் வாக்கிங் செல்வதில்லை… வாக்கிங் என்பது நேரம் சம்மந்தப்பட்டதோ, தொழில் சம்மந்தப்பட்டதோ அல்லது மனம் சம்மந்தப்பட்டதோ அல்ல. வாக்கிங் என்பது வாழ்க்கை சம்மந்தப்பட்டது…’

‘ஒரு டாக்டர் மாதிரி பேசறீங்க…’ நான் அறிவுரை சொல்கிறேன் என்பதை சொல்லாமல் சொன்னார்.

‘சாரி சார், நான் அறிவுரை எல்லாம் சொல்லவில்லை. என் அனுபவத்தைச் சொல்கிறேன். நான் வாக்கிங் செல்லும்போதுதான் என் சின்னச் சின்ன மன வருத்தங்களுக்குக் கூட தீர்வுகள் தோன்றுகின்றன. மனக்கவலைகள் ஏதேனும் இருந்தால் வாக்கிங்கே மருந்தாகிறது. புதுப் புது ப்ராஜெக்ட்டுகளுக்கு பிரமாண்டமான லே அவுட்டுகள் கண் முன் விரிகின்றன. மனம் விசாலமாகி மற்ற எல்லா விஷயங்களும் அதற்குள் மைக்ரோ அளவுக்கு சுருங்கி பெட்டிப் பாம்பாய் அடங்கி உட்காருகின்றன.

வாக்கிங் என்றல்ல, பொதுவாகவே நம் உடல் அசைவுகள் நமக்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் கொடுக்கும். அது என் அனுபவம்.

வீட்டில் கூட போன் பேசும்போது, துணிமணி மடிக்கும்போது என சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நடந்துகொண்டேதான் வேலை செய்கிறேன். எப்போதெல்லாம் நடக்கும் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நடக்கிறேன்.

அவ்வளவு ஏன்?எங்கள் நிறுவனத்தில் கூட என் சீட்டில் அமர்ந்திருக்கும் நேரம் மிகக் குறைவு!

உட்காராதீர்கள். எழுந்து நடங்கள். உங்கள் பிரச்சனைகள் உங்களுக்கு சல்யூட் அடித்து ஓடிப்போகும்’

என என் அனுபவத்தைப் பகிர்ந்தேன்.

‘முயற்சி செய்கிறேன்’ என நேர்மறையாக பதில் அளித்துவிட்டு போனை வைத்தார்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜூலை 30, 2022 | சனி

(Visited 507 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon