நான் என்பது நான் மட்டும் அல்ல!
கர்மா : இதற்கு எத்தனையோ விளக்கங்கள். நல்ல கர்மா, கெட்ட கர்மா, நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டது கிடைக்கும், முன்னோர் செய்த பாவங்கள் பிள்ளைகள் தலையில், பித்ரு சாபம், முந்தைய ஜென்மத்து வினை அப்படி இப்படி என அவரவர்கள் புரிந்துகொண்ட விதத்தில் கேள்விப்பட்ட விதத்தில். இருந்துவிட்டுப் போகட்டும். அது குறித்த பதிவல்ல இது. ஆனால் அது சம்மந்தப்பட்டப் பதிவு.
நாம் அனைவருமே வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் சொல்லனா துன்பங்கள் அனுபவிக்கும் சூழலும் நேரமும் வரும். அந்த நேரத்தில், ‘நான் யாருக்கும் எந்த பாவமும் செய்யலையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று பொதுவாக வேண்டிக்கொள்வோம். அப்படி செய்யாமல் நாம் அனுபவிக்கும் சிறு சிறு துன்பங்களுக்கும் நாம் செய்த ஏதோ ஒரு சிறு தவறுதான் காரணம் என மனப்பூர்வமாக நினைத்து அதற்காக மனமுருக பிரார்த்தனை செய்து மன்னிப்புக் கேட்டால்….
நம் துன்பங்கள் எல்லாம் ஓடி விடுமா? என அவசரக்குடுக்கையாய் நினைக்காதீர்கள் அல்லது மனதுக்குள் என்னை கேலி செய்யாதீர்கள்.
நம் துன்பங்கள் ஓடிப் போகாது என்பது நிதர்சனம். ஆனால் அந்த துன்பங்களைத் தாங்கும் மனவலிமை கிடைக்கும். அது சர்வ நிச்சயம். மன வலிமை கிடைத்துவிட்டால் போதுமே எதையும் தாங்கும் உடல் சக்தியும் மன திடமும் கிடைத்துவிடுமே. அதை வைத்துக்கொண்டு வாழ்க்கையில் ஜமாய்த்துவிட மாட்டோமா என்ன?
‘நான் செய்த தவறுகளை மன்னித்து விடு…’ என மனப்பூர்வமாக கண்களை மூடி ஆழ்ந்து பிரார்த்தனை செய்துகொண்டு நம் பணிகளை செய்து வந்தால் ஆரோக்கியமான சூழல் உண்டாகும்.
‘நான் செய்த தவறுகளை மன்னித்துவிடு’ என்பதில் நாமே நேரடியாக செய்கின்ற தவறுகள், நம் முன்னோர்கள் வழி கிடைக்கும் தண்டனைகள், முன் ஜென்மத்து கர்மாக்கள் இப்படி அனைத்துமே அடங்கும். நான் என்பது நாம் மட்டும் அல்ல, நம் பரம்பரை மொத்தமும்தான்.
சர்க்கரை, இதயநோய் போன்றவை நம் குடும்பத்தில் ரத்த சொந்தங்கள் யாருக்கேனும் இருந்தால் நமக்கும் வருவதற்கு வாய்ப்புண்டு என மருத்துவர்கள் சொல்கிறார்கள் அல்லவா? அதுபோலதான் தவறுகளும், அதற்கான தண்டனைகளும். வழிவழியாகத் தொடரும்.
‘நான் செய்த தவறுகளை மன்னித்து விடு…’ என ஆழமாக பிரார்த்தனை செய்யும்போது நாம் செய்த சின்ன சின்ன தவறுகள் நம் மனக்கண் முன் கட்டாயம் காட்சிப்படுத்தப்படும்.
அப்படி இல்லாமல் ‘நான் யாருக்கும் எந்த பாவமும் செய்யலையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி’ என வேண்டிக்கொண்டால் கழிவிரக்கம் மட்டுமே தோன்றும். கழிவிரக்கம் இன்னும் நம்மை பலவீனமாக்கும். கவனம்.
இனி உங்களுக்கு ஏதேனும் தாங்க முடியாத துன்பங்கள் வந்தால் ‘நான் செய்த தவறுகளை மன்னித்து விடு…’ என மனமுருக வேண்டிக்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள். புது எனர்ஜி உங்களுக்குள் புகுந்துகொண்டு உங்கள் மனதை ஆற்றுப்படுத்தும் அதிசயத்தை நீங்கள் உணர்வீர்கள்.
முயற்சி செய்து பாருங்கள்! வாழ்த்துகள்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஆகஸ்ட் 3, 2022 | புதன் | காலை 6.00 மணி