நாளைய நல்மரம், இன்றைய விதை!
எங்கள் இருப்பிடத்துக்கு அருகில் ஒரு அரசுப் பள்ளி. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக நான் கவனித்து வியக்கிறேன், கட்டுக்கோப்புடன் இயங்கி வரும் அந்தப் பள்ளியை.
மாணவர்கள் யாரையும் பள்ளி முடிந்ததும் அங்கே இங்கே நின்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பதையும் வீண் பொழுது போக்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கவே முடியாது. பள்ளிக்கு கொண்டுவிடுவதற்கும், பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்கும் வரிசையாக ஆட்டோக்களும், பைக்குகளும், சைக்கிள்களும், வீட்டுப் பணிப்பெண்களுமாய் பார்க்கவே பரவசமாய் இருக்கும்.
நேற்று மாலை அந்தப் பள்ளி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். சாலையின் இடதுபுறம் ஆட்டோக்கள். வலதுபுறம் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள். மண்வெட்டியை சாலை போக்குவரத்துக்கு இடையூராய் வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார்கள். என் காரும் செல்லக்கூடிய அளவுக்கு வழி இல்லை. பள்ளி விட்ட நேரம் என்பதால் மாணவர்கள் கூட்டம் வேறு.
நானும் ஹாரன் அடித்து அடித்துப் பார்த்தேன். வீடு கட்டும் இடத்தில் இருந்து யாரும் வரவில்லை. சரி நாமே நகர்த்திவிட்டு செல்லலாம் என கார் கதவை திறக்க எத்தனித்தபோது, அந்தப் பள்ளி மாணவி, ஏழாம் வகுப்போ எட்டாம் வகுப்போ படித்துக்கொண்டிருக்கும் வயது. தன்னிச்சையாக அந்த மண் வெட்டியை நகர்த்தி வைத்துவிட்டு இயல்பாக சென்று கொண்டிருந்தாள். என் முகத்தைக் கூட பார்க்கவில்லை. என் புன்னகையையோ, நன்றியையோ, பாராட்டையோ எதிர்பார்க்கவில்லை. நான்தான் கொஞ்சம் சப்தமாக ‘தேங்யூ…’ என்றேன். என்னைக் கடந்து சென்ற அந்த மாணவி திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள்.
அந்தப் புன்னகையில் நாளை நல்மரமாகக் கூடிய இன்றைய தலைமுறை விதை ஒன்று நம்பிக்கை நட்சத்திரமாய் மின்னியது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
செப்டம்பர் 21, 2022 | புதன்