மனிதநேயம்!
சமீபத்தைய பயணத்தில் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள நவகிரஹ கோயில்களை தரிசனம் முடித்தவிட்டுத் திரும்பும்போது அந்தந்த கோயில் வாசலில் உள்ள கடைகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் நகர்ந்தோம். சில நேரம் கோயில் உள்ளே செல்லும் முன்னரேகூட பார்த்தோம். அப்போது மனதைக் கவரும் பொருட்கள் ஏதேனும் இருந்தால் வாங்கிவிட்டு பர்ஸைப் பார்த்தால் பணம் 500 ரூபாய்களாக மட்டுமே இருக்கும், சில்லறையாக இருக்காது. அப்போது அவர்கள் ‘பொருளை எடுத்துட்டுப் போங்க… கோயிலுக்குப் போயிட்டு வந்து எங்கேனும் சேஞ்ச் வாங்கிக் கொடுங்க…’ என்று சிரித்த முகத்துடன் பொருட்கள் அடங்கிய பையை நம்மிடம் நீட்டும்போது, சென்னை போன்ற பெரு நகரங்களில் ‘பொருளை வச்சுட்டுப் போங்க… தரிசனம் முடிச்சுட்டு வந்து எங்கேனும் சேஞ்ச் வாங்கி கொடுத்துட்டு பொருளை எடுத்துக்குங்க…’ என்று சொல்லும் காட்சி நினைவுக்கு வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.
மாநகர மக்கள் பணத்துக்கு மரியாதை கொடுக்க, உள்ளூர் மக்கள் இன்னமும் மனிதர்களுக்கு மரியாதை கொடுத்துக்கொண்டிருப்பதை காணும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
இது ஏன் இன்று நினைவுக்கு வருகிறது? காரணம் இல்லாமல் இல்லை.
எங்கள் அப்பார்ட்மெண்ட் மொட்டை மாடியில் நாங்கள் நிறைய செடி கொடிகள் வைத்திருக்கிறோம். சில தினங்களாக நாங்கள் கொஞ்சம் தாமதமாக வாக்கிங் செல்கிறோம். அதற்கு முன்பே யாரோ செடிகொடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பறவைகளுக்காக நாங்கள் வைத்திருக்கும் தொட்டியை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக இங்கெல்லாம் நாம் வைத்த செடிக்கு நாம்தான் தண்ணீர் ஊற்ற வேண்டும். மற்றவர்கள் அதை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். வாடி வதங்கினாலும் மடிந்தே போனாலும் யாரும் கவலைப்பட மாட்டார்கள். அப்படி இருக்கும்போது ‘யார் இந்த வேலையை செய்திருப்பார்கள்?’ என்று நாங்கள் அதிசயத்தோம்.
ஒருநாள் நாங்கள் வழக்கம்போல் நேரத்துக்கு வாக்கிங் சென்றுவிட, மாடியில் புதிதாக குடிவந்திருந்த ஒரு பெண்மணிதான் அந்த புண்ணிய வேலைகளை செய்துகொண்டிருந்தார்.
அவரிடம் நாங்கள் அறிமுகம் செய்துகொண்டு பேசியபோது அவர் சொந்த ஊர் ‘விருதாச்சலம்’ என்றார். கர்ப்பிணி மருமகளுக்கு உதவியாக இருப்பதற்காக வந்திருப்பதாகவும், சில மாதங்கள் சென்னையில் தங்கி இருக்கப் போவதாகவும் கூறினார்.
இதுதான் மாநகர உள்ளங்களுக்கும் மற்ற ஊர் மனங்களும் உள்ள ஒரே வித்தியாசம்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
செப்டம்பர் 23, 2022 | வெள்ளி