சிறு பொறி பெரு நெருப்பு!
ஒரு குடும்ப நிகழ்ச்சி. குழந்தைகள், இளைஞர்கள், வயதில் பெரியோர்கள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
அப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள இளம் பெண் ’ஆண்டி நீங்க கலந்துகொண்ட பொதிகை நிகழ்ச்சியை நாங்கள் எங்கள் குடும்பத்துடன் பார்த்தோம்…’ என்றாள்.
‘அடடா அப்படியா?’ என்று கேட்பதுடன் நான் விடுவேனா? கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவேனா என்ன?
‘எப்படி இருந்தது? நான் பேசியது புரிந்ததா?’ என்றேன் ஆவலாக.
‘சூப்பரா பேசினீங்க… ரொம்ப ரொம்ப இன்ஸ்பைரேஷனா இருந்தது… ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை முழுசா பார்த்தோம்…’ என்றாள்.
நாங்கள் பேசியது அவள் அம்மாவுக்குத் தெரியாது. அவர் வேறெங்கோ இருந்தார்.
சிறிது நேரம் கழித்து அவள் அம்மா எதிர்பட்டார். ‘நீங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ரொம்ப பிரமாதம். இனி இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் முன்பே சொல்லுங்கள்… என் பொண்ணுக்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகள் ரொம்ப பிடிக்கும்… ஏதேனும் சாதிக்கணும் அப்படின்னு சொல்லிக்கொண்டே இருப்பாள்’
பெண் சொன்னதையே அம்மாவும் சொல்ல நாள் முழுவதும் எனக்கு மகிழ்ச்சி.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கொஞ்சம் அறிவுரை சொல்வது போல இருந்தாலே பார்வையாளர்கள் குறைவுதான். அதுவும் பொதிகை சானலை பார்ப்பவர்கள் மிகக் குறைவு. அதிலும் இளைஞர்கள் மிக மிக மிகக் குறைவு. அப்படி இருக்க ஒரு மணி நேரம் பொறுமையாக அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்து அது குறித்த கண்ணோட்டத்தையும் சொன்ன அந்த இளம் மாணவி வரும் தலைமுறையின் நம்பிக்கைச் சான்று.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 2, 2022 | ஞாயிறு