நல்லவற்றை அதிகம் பரப்புவோம்!

நல்லவற்றை அதிகம் பரப்புவோம்!

நவராத்திரி விழா ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்தேன். மொபைலில் ஏதோ ஒரு ஹேம்ஸ் ஆப்பில் கண்களை வைத்துக்கொண்டே, நான் யார், என்ன செய்கிறேன் என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த சிறுமியிடம் நாங்கள் வெளியிட்ட அனிமேஷன் படங்களின் கிளிப்பிங்ஸ்களை என் மொபைலில் இருந்து யுடியூபில் காண்பிக்க ஆரம்பித்தபோது தன் மொபைலில் இருந்து கண்களை எடுத்த அந்த சிறுமி அதை அப்படியே நிறுத்தி வைத்திவிட்டு (Pause) என்னையும் அந்த அனிமேஷன் கிளிப்பிங்குகளையும் மாறி மாறிப் பார்க்க ஆரம்பித்தாள். கண்கள் வியப்பிலும் ஆர்வத்திலும் இன்னும் அழகாக மின்னியது.

அதனை நான் ரசித்தவாறு, ‘நீ என்னவாக வர விரும்புகிறாய்?’ என்றபோது ‘பெரிய டீச்சராக வரப் போறேன்…’ என்றாள்.

‘அட அப்படியா வாழ்த்துகள் டீச்சர்’ என்று சிரித்தபடி சொல்லிவிட்டு ‘ஏன் அப்படி ஆசைப்படுகிறாய்?’ என்றேன்.

‘நான் தினமும் எங்க ஸ்கூல்ல டீச்சரைத்தான் பார்க்கிறேன்…. அதனால அவங்க தான் என் இன்ஸ்பிரேஷன்…’

அந்த சிறுமியின் பதிலுக்கு ‘அடடா…’ என பாராட்டினேன்.

‘இப்ப டீச்சரைப் பார்க்கிறாய் டீச்சராக வர விரும்புகிறாய், நாளை ஒரு டாக்டரைப் பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகி டாக்டராகவும் விரும்புவாய், இன்னொரு நாள் ஆர்டிஸ்ட்டை பார்ப்பாய் ஆர்டிஸ்ட்டாகவும் வர ஆசைப்படுவாய்… இப்படி எதைப் பார்க்கிறாயோ எதுவெல்லாம் உனக்கு பிரமிப்பை தருகிறதோ அதுவாகவெல்லாம் ஆசைப்படுவாய்… ஆனால் உனக்குள் ஒரு ஆர்வம், திறமை, ஈடுபாடு எல்லாம் இருக்கும்… அதில் நீ முனைப்பு காட்டினால் எதிர்காலத்தில் அந்தத் துறையில் ஜெயிப்பாய்…’

இப்படி எல்லாம் அந்தச் சுட்டியிடம் சொல்ல நினைத்ததை அவள் அப்பா அம்மாவிடம் சொன்னேன்.

குழந்தைகள் எதைப் பார்க்கிறார்களோ அதுதான் அவர்களை ஈர்க்கும். அதுவாகவே அவர்கள் உருவாவார்கள். நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அவர்கள் எண்ணம், செயல், சொல் எல்லாவற்றிலும் அதுவே பிரதிபலிக்கும்.

குழந்தைகள் கண்களில் நல்லவற்றை அதிகம் தென்பட வைப்பதில்தான் சூட்சுமமே உள்ளது. அதை செய்தால்போதும் தங்களுக்கான பாதையை தாங்களே அமைத்துக்கொள்வார்கள்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

அக்டோபர் 3, 2022 | திங்கள்

(Visited 562 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon