நீண்ண்ண்ண்ண்ட நெடும் பயணம்!
1992 – ல் இதுபோன்ற ஒரு சரஸ்வதி பூஜை நன்னாளில் அடித்தளம் போடப்பட்டு விஜயதசமி திருநாளில் பெரிய நம்பிக்கையுடன் தொடங்கப்பட்ட எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கு இன்று 30 வயது. எனக்கும்தான். மிகைக்காக சொல்லவில்லை. கி.மு, கி.பி போல என் வாழ்க்கையை கா.மு, கா.பி என இரண்டாக பிரிக்கும் அளவுக்கு இரண்டுக்கும் பிரமாண்டமான மாற்றங்களும், ஏற்றங்களும். (கா.பி, கா.பி= காம்கேருக்கு முன், பின்)
30 ஆண்டுகள் ஓடிய ஓட்டம் தெரியவில்லை. ஆனால் தடம் பதித்த ப்ராஜெக்ட்டுகளும், பெயர் சொல்லும் தயாரிப்புகளும் ஏராளம்.
நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அடி எடுத்து வைக்கும் முன்னரே அத்துறையில் இரட்டைப் பட்டம் பெற்று, எம்.பி.ஏவும் முடித்து…
நம் நாட்டில் ஐடி நிறுவனம் தொடங்கிய ‘முதல் தொழில்நுட்பப் பெண் பொறியாளர்’ என்ற விருதையும் பெற்று…
தமிழகமெங்கும் பட்டி தொட்டி எல்லாம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பரவ எழுத்து, பேச்சு, ஆடியோ, வீடியோ, சாப்ஃட்வேர் என பல வழிகளில் எங்கள் காம்கேர் மூலம் நாங்கள் முனைந்த முயற்சிகளில் பல ‘முதன்’ முயற்சிகள். முன் உதாரணங்கள். ரோல் மாடல் ப்ராஜெக்ட்டுகள்.
- முதன் முதலில், தமிழிலும் ஆங்கிலத்திலும் ஃபாண்ட் தயாரிக்கும் முயற்சி,
- முதன் முதலில், அழகு தமிழில் கல்வி சார்ந்த தொழில்நுட்ப புத்தகங்களை வெளியிடத் தொடங்கியது,
- முதன் முதலில், அனிமேஷன் சாஃப்ட்வேர்கள் அறிமுகம் ஆகும் முன்பே, ‘சி’ மொழியில் கார்ட்டூன்கள் தயாரித்து அறிமுகப்படுத்தியது,
- முதன் முதலில், யு-டியூபும், மொபைல் கேமிராவெல்லாம் வருவதற்கு முன்பே வீடியோ தயாரிப்புகள்,
- முதன் முதலில், இ-புத்தகங்கள் அறிமுகமாகுக் முன்பே CBT (Computer Based Tutorial), WBT (Web Based Tutorial), ABT (Audio Based Tutorial), VBT (Video Based Tutorial) போன்றவற்றை அறிமுகப்படுத்தியது,
- முதன் முதலில், வெப்சைட்டெல்லாம் பெரு நிறுவனங்கள் வைத்துக்கொள்வது என்றிருந்த காலகட்டத்திலேயே தனிநபர்கள் தங்களுக்கென ஒரு வெப்பக்கம் வடிவமைத்துக்கொள்ளவும், அவர்களுக்கென பிரத்யோகமான வெப்பேஜ் முகவரியை பொதுவெளியில் கம்பீரமாகக் கொடுக்கவும் அடித்தளமிட்டது…
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் எங்கள் காம்கேரின் பெருமைமிகு ‘முதன்’ முயற்சிகளை.
குழந்தைகள் இலக்கியமாகட்டும், பெரியோருக்கான ஆன்மிக படைப்புகளாகட்டும், இளைஞர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பாகட்டும் அத்தனைக்கும் எங்கள் காம்கேரில் சொல்லிகொள்ளும் அளவுக்கு ப்ராஜெக்ட்டுகள் ஏராளம்.
அதற்கெல்லாம் சாட்சியாக, தமிழகமெங்கும் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும்… ஏன் உலகளாவிய முறையில் பல முன்னணி ஐடி நிறுவனங்களில் எங்கள் காம்கேரின் ப்ராஜெக்ட்டுகளில் பல ‘ரெஃபரன்ஸ்’ ப்ராஜெக்ட்டுகளாக இடம்பெற்றுள்ளன.
உலகம் முழுவதும் பல்வேறு கல்விக் கூடங்களில் எங்கள் காம்கேரின் பெரும்பாலான தயாரிப்புகள் பாடத்திட்டமாகவும், ஆய்வு குறிப்பேடுகளாகவும் வீற்றிருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, தமிழகத்தின் கடைகோடி கிராமத்து மக்கள் முதல் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் வரை எங்கள் காம்கேரின் சாஃப்ட்வேர், அனிமேஷன், புத்தகங்கள், வீடியோ தயாரிப்புகள் வாயிலாக தொழில்நுட்பம் பயில்கிறார்கள் என்பதுதான் பெரும் சிறப்பு. உலகம் முழுவதும் பெரும்பாலான நூலகங்களிலும் நான் எழுதிய புத்தகங்கள்.
அமெரிக்காவிலும், கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும் பணிபுரியும் பல தொழில்நுட்ப வல்லுநர்கள் நான் தமிழில் எழுதிய புரோகிராமிங் நூல்களை வாசித்தே அந்தத் துறையில் உயர் பதவிக்கு வந்ததாக எனக்கு தகவல் கொடுப்பது நெகிழ்ச்சியாக உள்ளது.
தொழில்முனைவராக இருந்து தொழிலதிபராக முன்னேறியதுடன் பல தொழில்முனைவோர்களை இந்தத் துறையில் உருவாக்கியிருப்பதுதான் என் உழைப்பிற்கான சான்று, எங்கள் காம்கேரின் வளர்ச்சிக்கான அத்தாட்சி.
1992-ம் ஆண்டு காம்கேர் நிறுவனம் தொடங்கும் போது எத்தனை ஊக்கத்துடனும் ஆற்றலுடனும் செயலாற்றினேனோ அதில் ஒரு துளியும் குறையாமல் இன்று 30-வது வருடத்திலும் புத்தம் புது சிந்தனைகளுடன் களம் இறங்குகிறேன், எங்கள் நிறுவனத்தின் தூண்களாக விளங்கும் பொறியாளர்களின் ஒத்துழைப்புடன்.
மன நலனுக்கும், உடல் நலனுக்கும் உதவிவரும் இயற்கைக்கும், இறை சக்திக்கும் கடமைப்பட்டுள்ளேன்.
பெற்றோருக்கும், உடன் பிறந்தோருக்கும், என்னுடன் பயணிக்கும் எங்கள் காம்கேர் நிறுவன பொறியாளர்களுக்கும் இந்த நன்னாளில் என் அன்பையும் நன்றியையும் சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 04, 2022 | செவ்வாய் கிழமை