பார்க்கும் திசையில் எல்லாம் நந்தலாலா!

பார்க்கும் திசையில் எல்லாம் நந்தலாலா!

 

ஒரு போன் அழைப்பு. ‘காம்கேர் புவனேஸ்வரிங்களா?’ குரலே போலீஸ் அதிகாரியின் தொனியுடன் இருந்தது.

யாராக இருக்கும் என்று தயங்கியபடி ‘ஆமாம்… நீங்க?’ என்றேன்.

திருப்பூர் காங்கேயத்தில் இருந்து கெளரி பேசுவதாக அறிமுகம் செய்துகொண்டு பேசினார்.

கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் 100.5 – வியாழந்தோறும் மதியம் 12 முதல் 1 மணி வரை நேயர்களின் ‘படித்ததில் பிடித்தது’ நிகழ்ச்சி ஒளிபரப்புகிறார்களாம். அவர்கள் ஒரு தொலைபேசி எண் கொடுப்பார்கள், அதற்கு போன் செய்து இணைப்பு கிடைத்ததும் போன் செய்யும் நேயர் தாங்கள் படித்த புத்தகம் குறித்து சில விநாடிகள் தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளலாம் எனவும், அந்த நிகழ்ச்சியில் நான் எழுதிய ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ புத்தகத்தை தனக்குப் பிடித்த புத்தகமாக சொன்னதாகவும், எழுத்தாளர் பெயராக என் பெயரை குறிப்பிட்டதாகவும் சொன்னார்.

இன்றைய நிகழ்ச்சியில் மட்டுமல்ல இதுபோல கடந்த மூன்று வாரங்களாக இந்த நூல் குறித்து பேசியதை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். கூகுளில் கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் 100.5 என்று போட்டாலே அது குறித்து விவரம் வரும் என்று கூடுதல் தகவல் கொடுத்தார்.

இவர் குறித்து சொல்வதற்கு முன் ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ நூல் குறித்து சொல்கிறேன். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றில் வரும் சம்பவங்கள் போன்று என் வாழ்க்கையிலும் பல சம்பவங்கள் ஒத்திருந்ததை வியந்து அதையே புத்தகமாக எழுதி வெளியிட்டேன். அட்டைப் படத்திலும் சுவாமி விவேகானந்தரையே போட்டிருந்தேன்.

சரி, காங்கேயம் கெளரி குறித்து தொடர்கிறேன்.

எங்கே வேலை செய்யறீங்க?

காங்கேயத்தில் ஒரு மளிகைக் கடையில் வேலை செய்கிறேன்.

இந்த நூலை எங்கு வாங்கினீர்கள்?

என்னுடைய மகன் 2016-ஆம் ஆண்டு காங்கேயம் ராஜராஜேஸ்வரி பள்ளியில் 12-வது படிக்கும்போது அவனுடைய நண்பனுக்கு பள்ளியில் பரிசாகக் கொடுத்தார்கள்.

உங்கள் மகன் இப்போது என்ன செய்கிறார்?

விஸ்காம் படித்து முடித்துவிட்டு சினிமாவில் கேமிரா மேனாக பணிபுரிகிறார்.

எப்படி படிப்பதில் ஆர்வம் வந்தது?

எல்லாம் எஃப்.எம் நிகழ்ச்சியினால்தான்.

இவரது உரையாடலில் ஒவ்வொரு விஷயமும் ’அட’ என வியக்க வைத்தது. முத்தாய்ப்பாக அவர் சொன்ன மற்றொரு விஷயம்தான் வியப்பின் உச்சம்.

‘மேடம் நீங்கள் எழுதிய புத்தகத்தில் எனக்குப் பிடித்த பகுதியாக நான் பேசியதை எல்லாம் டேபில் ரெகார்ட் செய்து வைத்துள்ளேன். அதை உங்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புகிறேன்’ என்றார்.

வாரம்தோறும் எப்படியாவது எஃப்.எம்மில் இணைப்பு கிடைக்கும் வரை போன் செய்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விடுவாராம். இதுவரை ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பல புத்தகங்கள் குறித்து பேசியிருக்கிறாராம்.

ஒரு சிறிய ஊரில் அதிகம் படிக்காத ஒரு பெண் தைரியமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், குறிப்பாக புத்தகங்கள் குறித்து பேசுவதும், நிகழ்ச்சியில் தான் பேசுவதை தானே டேபில் ரெகார்ட் செய்வதும், கூகுள் பற்றி பேசுவதும், போன் செய்து பேசி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும், அதை போன் செய்து நூலாசிரியருக்கும் தகவல் சொல்லுவதும், தன்னம்பிக்கையுடன் தன் வாழ்க்கைக்கான வாழ்வாதாரத்துக்கு பணிக்குச் செல்வதும், தான் படிக்காவிட்டாலும் தன் மகனை நன்றாக படிக்க வைத்ததும் என ஆச்சர்யத்தின் சதவிகிதம் கூடிக்கொண்டே போனது எனக்கு.

அதுவும் அவர் புத்தகங்கள் படிக்கும் ஆவல் வருவதற்கு ‘எஃப் எம்தான் காரணம்’ என்ற அவர் பதிலில் அசந்தே போனேன்.

ஒரு வானொலி நிகழ்ச்சி படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது என்றால் வியக்காமல் எப்படி இருக்க முடியும்?

பார்க்கும் திசையில் எல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் பெண்கள் தங்கள் சிறகுகளை விரித்து தனக்கான பாதையில் தனக்கான உயரத்தில் பறந்து மகிழ்கிறார்கள் என்றே தொன்றியது.

‘மேடம் அடுத்த வார வியாழன் அன்றும் உங்கள் புத்தகத்தைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன். நீங்கள் பிசியானவர் என்பதால் ஒரு மிஸ்டு கால் கொடுக்கிறேன். முடிந்தால் நிகழ்ச்சியை கேளுங்கள்…’ என்று அவர் கடைசியாக சொன்னது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

நம் படைப்புகள் இந்த உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு ஜீவனை உயிர்பிக்க உந்து சக்தியாக இருப்பது எனக்கும் மிகப் பெரிய ஊக்கம்தான். அவ்வப்பொழுது என் உற்சாக பேட்டரிக்கு இவர்களைப் போன்ற வாசகர்களும், அன்பர்களும் ஏதேனும் ஒருவிதத்தில் சார்ஜ் போட்டுக்கொண்டே இருப்பதால் தான் என்னாலும் இத்தனை உயிர்ப்போடு செயல்பட முடிகிறது.

‘பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா’ என்ற பாரதியின் வரிகளின் மெட்டில் ‘பார்க்கும் திசையில் எல்லாம் நந்தலாலா, சிறகு விரித்துப் பறக்கும் பெண்களின் ஆளுமை தோன்றுதையே நந்தலாலா’ என்று மனதுக்குள் அழகிய ரீங்காரம்.

போனை வைத்த ஐந்தாவது நிமிடம் என் வாட்ஸ் அப்புக்கு அவர் அனுப்பிய நிகழ்ச்சியின் ஆடியோ ஃபைலை வீடியோவாக்கி பகிர்ந்துள்ளேன். ஸ்பீக்கரை ஆன் செய்து கொண்டு கேட்கவும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

அக்டோபர் 6, 2022 | வியாழன்

(Visited 1,038 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon