திறமையை பட்டைத் தீட்டுங்கள்!

திறமையை பட்டைத் தீட்டுங்கள்!

ஒரு பதிப்பகத்துக்கு நான் எழுதிய புத்தகம் வாங்குவதற்காக அழைத்தேன்.

நேரம் மாலை 5.00

’ஸ்டாக் இருக்கா இல்லையான்னு பார்த்து சொல்லறேன்…’

‘ஓகே’

‘மேடம், ரொம்ப அர்ஜெண்டா இல்ல நாளைக்கு சொல்லட்டுமா, வீட்டுக்குக் கிளம்பணும்…’

‘அர்ஜெண்ட் தான். பரவாயில்லை. நாளைக்கே சொல்லுங்கள். என் மொபைல் எண்ணை குறித்துக்கொள்ளுங்கள். மறக்காமல் நாளை காலை போன் செய்து தகவல் கொடுங்கள்…’

‘ஓகே மேடம். மொபைல் எண் சொல்லுங்கள்…’

என் மொபைல் எண்ணையும் நான் கேட்ட புத்தகத்தின் பெயரையும் சொன்னேன். விலை எவ்வளவு என்பதையும் கேட்டு சொல்லுங்கள் என்று சொல்லி போனை வைப்பதற்கு முன்னர் ‘ஓனர் கிட்ட சொல்லிடாதீங்க மேடம்’ என்று கேட்டுக்கொண்டார். நான் சிரித்துக்கொண்டேன்.

நான் சொன்ன விவரங்களை பத்திரமாக ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார் என்ற நினைப்புடன் மறுநாள் மதியம் 12 மணி வரை காத்திருந்தேன். அழைப்பு வராததால் நானே அழைத்தேன். அதே பணியாளர்தான் போனை எடுத்தார்.

என் பெயரை சொன்னதும் ‘சாரி மேடம் மறந்துட்டேன்’ என்று சொல்வார் என நினைத்தேன்.

ம்ஹூம். ‘சொல்லுங்க மேடம்’ என்று புதிதாக கேட்பதைப் போல கேட்டார்.

‘நான் நேற்று மாலை போன் செய்து புத்தகம் கேட்டிருந்தேன்…’

‘என்ன புத்தகம்?’

‘ஏம்மா நீங்கள் தானே கேட்டு குறிப்பெடுத்தீர்கள்?’

‘ஆமாம் மேடம், ஆனால் அந்த பேப்பரை எங்கு வைத்தேன் என நினைவில்லை…’

அந்த பதிப்பகத்தின் நிலையை நினைத்தபடி திரும்பவும் ஆதியில் இருந்து என்ன புத்தகம் எவ்வளவு தேவை என்பதையும் சொன்னேன்.

ஒரு நிமிடம் லைனில் இருங்க என்று சொல்லிவிட்டு 3 நிமிட காத்திருப்புக்குப் பிறகு தொடர்பில் வந்தார்.

‘அந்த புத்தகம் ஸ்டாக் இருக்காம் மேடம்…’

‘சரி என்ன விலை?’

‘என்ன மேடம் நீங்க எழுதின புத்தகத்தின் விலை உங்களுக்குத் தெரியாதா…’

‘இல்லம்மா அது மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்தது. இப்போது விலையில் மாற்றம் இருக்கலாம் அல்லவா?’

‘எவ்வளவு புத்தகம் வேண்டும் என சொல்லுங்கள். விலை கேட்டு வருகிறேன்…’

‘எவ்வளவு புத்தகம் வேண்டும் என சொன்னால்தான் விலை சொல்ல முடியுமா?’

‘அதில்ல மேடம்…’

‘விலையை சொல்லுங்கள். எவ்வளவு தேவை என்பதை நான் சொல்கிறேன்…’

‘சரி மேடம்…’

நான் பார்த்த நாளாய் அவர் அங்குதான் பணியில் இருக்கிறார். ஆனால் திறனை வளர்த்துக்கொள்ளவே இல்லை. அனுபவம் என்பது வருடக் கணக்கு மட்டும் அல்ல. காலம் நமக்கு அளிக்கும் நேரத்தை எப்படி நாம் செப்பனிடுகிறோம் என்பதில் தான் இருக்கிறது.

வார்த்தைக்கு வார்த்தை நூறு மேடம் போடத் தெரிந்த அவருக்கு தான் பணி புரியும் இடத்தில் எப்படி தன் வேலையை சரியாக செய்ய வேண்டும் என தெரியவில்லையே என நினைத்தப்படி அந்தப் புத்தகங்களுக்கான தொகையை ஆன்லைனில் செலுத்தினேன்.

சரி நான் கேட்ட புத்தகத்தின் பெயர் என்ன தெரியுமா?

‘திறமையை பட்டைத் தீட்டுங்கள்!’

அந்தப் பணியாளருக்கே அதை ஒரு காப்பி பரிசளிக்கலாம் என்று நினைத்து சிரித்துக்கொண்டேன்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

அக்டோபர்  7, 2022 | வெள்ளி

(Visited 1,353 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon