வேலையே பிரார்த்தனை, ஈடுபாடே தியானம்! (porulputhithu.com தீபாவளி சிறப்பிதழ் 2022)

‘பொருள் புதிது’ – இ-பத்திரிகையின் 2022  தீபாவளி சிறப்பிதழில் வெளியான கட்டுரை!

வேலையே பிரார்த்தனை, ஈடுபாடே தியானம்!

நாம் தினமும் எத்தனையோ வேலைகளை செய்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையும் இருக்கிறது. அந்த கடமையுடன்தான் நாளைத் தொடங்குகிறோம்.

கண் விழிப்பது, குளிப்பது, சமைப்பது, சாப்பிடுவது, வீட்டு வேலை செய்வது என அவரவர் வேலைகளை செய்வதில்தான் நாளின் தொடக்கத்தை ஆரம்பிக்கிறோம். அப்படி செய்யும் வேலைகள் ஒரே மாதிரியாக அன்றாடம் செய்யும் வழக்கமான பணிகளாக இருப்பதால்தான் வாழ்க்கையில் அலுப்பும் சலிப்பும் ஏற்படுகிறது. காலையில் கண் விழிக்கும்போதே இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாமே என்ற ஏக்கத்தை உண்டுசெய்கிறது.

இப்படி இல்லாமல் கலையில் எழுந்து நமக்கே நமக்கான ஒரு வேலையை செய்து நாளின் தொடக்கத்தை ஆரம்பிப்போமேயானால் அதுவே நம் அன்றைய தினத்தின் ஆகச் சிறந்த பிரார்த்தனையாக அமையப்பெறும்.

நமக்கே நமக்கான வேலை என்றால் என்ன? வீட்டில் நம் ஒவ்வொருவருக்கும் நமக்கான கடமைகள் உள்ளன. அவற்றை செய்ய ஆரம்பிப்பதற்கு முன் நமக்குப் பிடித்தமான வேலையை செய்வதுதான் நமக்கே நமக்கான வேலை. அது பத்திரிகைகள் படிப்பதாக இருக்கலாம், செய்தித்தாள் வாசிப்பதாக இருக்கலாம். தோட்டத்தில், மொட்டை மாடியில் வாக்கிங் செல்வதாக இருக்கலாம். செடி கொடிகள் இருந்தால் அதனை பார்த்து ரசிப்பதாக இருக்கலாம். அதற்கு தண்ணீர் ஊற்றி மானசீகமாக அவற்றுடன் பேசி மகிழ்வதாக இருக்கலாம். இப்படி ஏதோ ஒன்று.

நான் +2 படித்துக்கொண்டிருக்கும்போது எங்கள் ஆங்கில ஆசிரியர் எங்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்தார்.

‘காலையில் எழுந்ததும் நீங்கள் என்ன செய்வீர்கள்?’

சக மாணவிகள் ஒவ்வொருவரும் ஏதேதோ சொன்னார்கள். காபி குடிப்போம், டீ சாப்பிடுவோம், ஹோம் ஒர்க் செய்வோம், குளிப்போம் இப்படி சாதாரண வேலைகளே அவை.

அதற்கு அவர், ‘இதெல்லாம் எல்லோரும் செய்வதுதானே… இதைத் தவிர வித்தியாசமாக யாரேனும் ஏதேனும் செய்கிறீர்களா?’ என்று கேட்டார்.

யாரிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை.

அப்போது அவர் தான் காலையில் எழுந்ததும் தன் வீட்டுத் தோட்டத்தில் வாக்கிங் சென்றுகொண்டே செடி கொடிகளுடன் பேசுவதாகவும், தண்ணீர் ஊற்றுவதாகவும் சொன்னார். அதனால்தான் அவர் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பதாகக் கூறினார்.

என் அம்மா தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை செய்தித்தாள் வாசிப்பது, பத்திரிகைகள் வாசிப்பதை பல வருடங்களாகவே வழக்கமாக வைத்துள்ளார்.

என் அப்பா காலையில் எழுந்ததும் வாக்கிங் செல்வார். வாக்கிங் செல்வதற்குக்கூட முகம் கழுவி, விபூதி இட்டுக்கொண்டு புத்துணர்வுடன்தான் கிளம்புவார்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று. அதைத்தான் நான் அவரவர் மனதுக்குப் பிடித்த வேலை என்கிறேன்.

பிரார்த்தனை என்பது என்ன? கண் மூடி மனதை ஒருமுகப்படுத்தி ‘கடவுளே… இன்றைய தினம் நல்லபடியாக அமைய வேண்டும்’ என எண்ணுவதுதானே.

நீங்கள் உங்களுக்கே உங்களுக்கான நேரத்தை விடியற்காலையில் ஒதுக்கி அந்த நேரத்தில் உங்கள் மனதுக்குப் பிடித்த ஒரு வேலையை செய்து நாளைத் தொடங்கிப் பாருங்கள். பிரார்த்தனை செய்வதற்கு நிகரான, ஏன் அதைவிட ஒருபடி மேலான பலனை பெற முடியும்.

இதனால்தான் சொல்கிறேன்  ‘வேலையே பிரார்த்தனை’.

இப்படி பிடித்த வேலையுடன் நாளைத் தொடங்கி, அதை ஈடுபாட்டுடனும் செய்யும்போது மனநிறைவு பொங்கிப் பிரவாகமாக வழியும். தியானமும் யோகாவும் செய்தால் கிடைக்கும் அமைதியையும் நிதானத்தையும் ஒருசேர பெற முடியும். அதுவே உடலுக்கும், மனதுக்கும் குதூகலத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும். அந்த ஊக்கமே நாள் முழுவதும் நாம் செய்கின்ற எல்லா பணிகளையும் ஈடுபாட்டுடன் சந்தோஷமாக செய்ய வைக்கும்.

நாம் செய்யும் எல்லா பணிகளுக்கும் ஒரே முக்கியத்துவம் கொடுக்கும் பக்குவத்தை ஏற்படுத்தும். செய்கின்ற எல்லா வேலைகளையுமே முக்கியமானதாகக் கருதினால் எல்லாவற்றுக்குமே ஒரே மாதிரி முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தால், எல்லாவற்றையுமே ஈடுபாட்டுடன் செய்தால்… பிறகென்ன நாள் முழுவதும் தியானமும் யோகாவும் செய்வதைப் போலதான்.

முக்கியமான வேலைக்கும் முக்கியமில்லாத வேலைக்கும் எதை முதலில் செய்வது என நாம் முன்னுரிமை கொடுக்கலாம். ஆனால் அந்த செயலை செய்யும்போது நாம் காட்டும் ஈடுபாட்டில் சமசரம் செய்துகொள்ளவே கூடாது. அதுதான் நான் சொல்ல வருவது.

ஜர்னலிசம் படிக்கும் ஒரு கல்லூரி மாணவி தன் பிராஜெக்ட்டுக்காக என்னை தொலைபேசி வாயிலாக சமீபத்தில் ஒரு பேட்டி எடுத்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக நிதானமாக 20 நிமிடங்களுக்கும் மேல் பதில் சொல்லிக்கொண்டே வந்தேன். அவர் என்னிடம் நன்றி சொல்லிவிட்டு ‘நானும் என் கல்வி சார்ந்து பலரிடம் பேட்டி எடுத்துள்ளேன் மேடம், ஆனால் யாருமே வயதில் சிறியவளான எனக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து பேசியதே இல்லை… ஒரு வார்த்தை, இரண்டு வார்த்தைகளில் பேசி முடித்துவிடுவார்கள்…’ என்று நெகிழ்ச்சியாக சொன்ன போது நான் கூறிய ஒரே ஒரு விஷயம் இதுதான்.

‘நான் ஒரு வேலையை ஒப்புக்கொண்டு செய்ய ஆரம்பித்துவிட்டால் அதனால் பணம், புகழ், அங்கீகாரம் இதெல்லாம் வருகிறதோ வரவில்லையோ அதெல்லாம் இரண்டாம்பட்சமே. நான் செய்யும் அந்த வேலையில் நான் காட்டும் ஈடுபாடு என்பது எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் மரியாதை. யாரேனும் தம்மைத் தாமே மரியாதைக் குறைவாக நடத்துவார்களா? அத்துடன் நான் செய்யும் எல்லா வேலைகளுமே என்னைப் பொருத்தவரை அதிமுக்கியமானவை. முக்கியம், முக்கியமில்லை என்ற பாகுபாடே காட்டுவதில்லை. சமரசமும் செய்துகொள்வதில்லை.’

இதனால்தான் சொல்கிறேன் ‘ஈடுபாடே தியானம்’.

பிடித்த வேலையுடன் நாளைத் தொடங்குவோம். எல்லா வேலைகளுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவத்தைக் கொடுப்போம்.

இதைத்தான் ‘வேலையே பிரார்த்தனை, ஈடுபாடே தியானம்’ என்று சொல்கிறேன்.

விரிவாக படிக்க: https://porulputhithu.com/2022/10/24/comcare-buvaneswari-on-self-development/

(Visited 309 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon