பல்லாண்டு வாழ்க!
ஓர் அழகான கிராமம். அதிலோர் அப்பா, அம்மா. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளில் செட்டில் ஆன இரண்டு ஆண் ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள். அவர்கள் வேலை பிசி, நேரம் இல்லை என்ற காரணங்களினால் ஊருக்கு வருவதே இல்லை.
அந்த பெற்றோர் பிள்ளைகளை வருடக் கணக்கில் பார்க்காமல் ஏங்கித் தவிக்கிறார்கள்.
கடைசியாக அப்பா ஒரு ப்ளான் செய்து தங்கள் பிள்ளைகளுக்கு இமெயில் செய்கிறார். அந்த இமெயிலை பார்த்ததும் மூவரும் ஊருக்குப் பறந்து வருகிறார்கள்.
ஊர் திருவிழா, பொங்கள் பண்டிகை என குடும்பமாக ஊர் கூடி கொண்டாடுகிறார்கள்.
‘வெளிநாடுகளில் இருந்தாலும் குறைந்தபட்சம் பொங்கலுக்காவது ஊருக்கு வந்து சென்றால் வருடத்தின் அடுத்த 11 மாதங்கள் அந்த சந்தோஷத்தில் நாட்களை உயிர்ப்புடன் கடத்துவோம். மிஞ்சிப் போனால் நாங்கள் இருக்கப் போவது இன்னும் 10 வருடமோ அல்லது 11 வருடமோ. வருடத்துக்கு ஒருமுறை என்றாலும் 10, 11 முறையாவது பார்க்கும் வாய்ப்பை பெற்றோருக்குக் கொடுக்கலாமே’
என அப்பா தன் பிள்ளைகளிடம் சொல்கிறார்.
பிள்ளைகளும் ஊருக்குக் கிளம்பும்போது மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு இனி வருடா வருடம் எந்த வேலையாக இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பொங்கலுக்கு வந்து ஊர்கூடி கொண்டாடுவதாக வாக்குக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள்.
அப்பா என்ன ப்ளான் செய்தார். என்ன இமெயில் அனுப்பினார் என்பதை எல்லாம் நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Sathamaanam Bhavathi என்ற தெலுங்கு திரைப்படத்தில் இருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்ட திரைப்படம் ‘பல்லாண்டு வாழ்க!’. ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
தமிழ் திரைப்படங்களைவிட தெலுங்கு திரைப்படங்கள் எனக்குப் பிடிக்கக் காரணம் வெட்டு, குத்து, ஆட்டம் பாட்டம் இவற்றை ஒதுக்கி விட்டு பார்த்தால் அடிப்படையில் குடும்பம், குடும்ப அமைப்பு, பெற்றோர் பாசம், பிள்ளைகள் நலன், அன்பு, பண்பு, பாசம், நேசம், இறைபக்தி என அருமையாக எடுக்கிறார்கள்.
அந்த வகையில் இந்தத் திரைப்படமும்! அடி தடி சண்டை தேவையில்லா ஆட்டம் பாட்டம் எதுவுமே இல்லாத படம். அன்பில் தோய்த்துத் தோய்த்து எடுத்திருக்கிறார்கள்! நெகிழ்ச்சியில் அழச் செய்கிறார்கள்!
தெலுங்கில் எல்லா திரைப்படங்களும் அப்படி இருக்கிறதா அல்லது நான் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் படங்கள் அப்படி அமைகிறதா என தெரியவில்லை. ஆனால் நான் பார்க்கும் திரைப்படங்கள் அத்தனையும் மனதுக்கு மிக நெருக்கமான படங்களாக அமைந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 28, 2022 | வெள்ளிக்கிழமை