சிம்பதியும், எம்பதியும்!
ஒரு தாத்தா. நல்ல சுறுசுறுப்பானவர். தானே சமைப்பார். பண்டிகை தினம் என்றால் தானே இனிப்பு வகையறாக்கள் செய்து அசத்துவார். தானே கார் ஓட்டுவார். வீட்டில் எலக்ட்ரிகல் பிரச்சனையா, மரச் சாமான்கள் ஏதேனும் பழுதாகிவிட்டதா, பைப்பில் தண்ணீர் வரவில்லையா எதற்கும் தீர்வு வைத்திருப்பார். தானே சரி செய்துவிடுவார். தன் வீட்டில் மட்டும் என்றல்ல அக்கம் பக்கம் எங்கும் யார் உதவி கேட்டாலும் ஓடிச் சென்று உதவுவார். தாத்தா இப்படி சுறுசுறுப்பு என்றால் பாட்டி வேறு மாதிரி சுறுசுறுப்பு. அரண்மனை ராஜா நன்றாக செயல்படுகிறார் என்றால் மதியூக மந்திரி அமைந்திருக்க வேண்டுமல்லவா. அத்தனை புத்திசாலி பாட்டி.
ஒரு நாள் அந்த தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை. வெளிநாட்டில் இருந்து அவரது பிள்ளைகள் தங்கள் பேரன் பேத்திகளுடன் வந்திறங்கினார்கள்.
சரியாகக் கூடிய உடல்நலப் பிரச்சனைதான். என்றாலும் தாத்தா முடியவில்லை என வாயால் சொன்னதே இல்லை என்பதால் பிள்ளைகள் பதறிப் போய் வந்திருந்தார்கள்.
வீடே கலகலவென்றிருந்தது. தாத்தா ஜம்மென எழுந்து உட்கார்ந்துவிட்டார். ஆனாலும் நோயின் தாக்கத்தில் ‘எனர்ஜி லெவல்’ குறைந்திருந்தது.
பேரன்களுள் ஒரு சுட்டி தாத்தாவை சதா கேள்விகள் கேட்டுக்கொண்டும், வெளியில் அழைத்துச் செல்லச் சொல்லியும் தாத்தாவுடனேயே ஒட்டிக்கொண்டு திரிந்தான்.
அவன் அம்மா, ‘தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை… அவரை தொந்திரவு செய்யாதே… போய் விளையாடு’ என விரட்டினாலும் அவன் கண் சிமிட்டியபடி தாத்தாவுக்கு கதை சொல்லியபடி, அவரது கதைகளை கேட்டபடி உலா வந்தான். தாத்தாவுக்கு சீட்டு விளையாட சொல்லிக்கொடுத்தான். அவருக்குத் தெரிந்த பல்லாங்குழி விளையாடினான்.
எல்லோரும் அவனை ‘விஷமம், படுத்தல்’ என குட்டி குட்டி வார்த்தைகளால் திட்ட அவனோ ஆமாம். அப்படித்தான் என்று வாயால் சொல்லவில்லையே தவிர முன்னைவிட படு உற்சாகமாய் தாத்தாவுடன் நெருக்கமாகிக் கொண்டே வந்தான்.
ஒருநாள் தன்னை வெளியில் அழைத்துச் சென்றே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடிக்க தாத்தாவும் இதுதான் சாக்கு, ஜெயிலில் இருந்து விடுதலை என்ற உற்சாகத்தில் சட்டை பேண்டை போட்டுக்கொண்டு தலைவாரி பளிச்சென தயாராகிவிட்டார்.
பாட்டி உட்பட அத்தனை பேரும் தாத்தாவை திட்ட அந்த பேரன்தான் விடாமல் அவர் கையைப் பிடித்து வாசலுக்கு இழுத்துச் சென்றான்.
அவன் அம்மா அவனை உள்ளே இழுத்துச் சென்று ஏதோ வேகமாக பேச அவனோ ‘உஷ்… சத்தம் போடாதேம்மா… தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை உடம்பு சரியில்லை என உட்கார வைத்தால் அவர் இன்னும் பலகீனமாகத்தானே ஆவார். அதனால்தான் அவரை உற்சாகப்படுத்த நான் அவருடனேயே அவர் செய்யும் சிறிய வேலைகளை எனக்காக செய்யச் சொல்கிறேன்… நான் இப்படிச் சொல்வதால் தாத்தா தனக்கிருக்கும் பலகீனத்தைக் கூட மறந்து ஜாலியாயிடுகிறார் பார்த்தியா இல்லையா… இதெல்லாம் ஒரு சைக்காலஜிம்மா…’ என்றானே பார்க்கலாம்.
அவன் அம்மா அவனை கண்களில் கண்ணீருடன் அணைத்துக் கொண்டாள்.
அந்த சிறுவனுக்கு வயது பத்தே பத்துதான். பள்ளியில் எல்லோரும் பாடம் படிக்க அவன் பாடத்துடன் சேர்த்து மனிதர்களையும் படிக்கிறான். யாரும் சொல்லித்தரவில்லை. அவனாகவே.
அவனுக்குள் எல்லோரையும் விட சிம்பதியும், எம்பதியும் அதிகம். சிம்பதியும், எம்பதியும் அடுத்தவர்பால் வரக்கூடிய அக்கறை உணர்வின் வெளிப்பாடு. சிம்பதி என்பது ‘ஐயோ பாவம்’ என பாதிக்கப்பட்டவரைப் பார்த்து பரிதாப்படுவது, எம்பதி என்பது சிம்பதியின் Add-on. அதாவது ‘ஐயோ பாவம் என்று நினைப்பதுடன், பாதிக்கப்பட்டவர் இடத்தில் தன்னை வைத்து நோக்கும் உயர்ந்த குணம். அதனால்தான் பாதிக்கப்பட்டவரின் துயர் தீர்க்க தன்னால் ஆன சிறு முயற்சியை செய்யத் துணியும் குணம் உண்டாகிறது.
ஆனால் இந்த சம்பவத்தில் வருகின்ற சிறுவனின் குணத்தை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாமல் ‘விஷமம். படுத்தல்’ என பெயர் பெறுவதைப்போல் நம்மில் சிலருக்கும் ‘எப்பவும் தன்னைப் பற்றியே யோசிக்கிறான்/ள்’, ‘உடம்பு முடியாமல் இருக்கும்போதுகூட விடாமல் அவன்/ள் தேவையை குறித்தே கறாராய் கேட்டு வாங்குகிறான்/ள்’ என்பதுபோன்ற பட்டப் பெயர்கள் கிடைக்கலாம். ஆனால் அவர்களுக்குள் சிம்பதியின் Add-On குணமான எம்பதி கொஞ்சம் அதிகமாக இருப்பதால் பட்டப் பெயர்களைப் பற்றி கவலைப்படாமல் பாதிக்கப்பட்டவர்களுடன் இயல்பாகப் பழுகுவார்கள், அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவர.
இதுவரை கவனிக்கவில்லை எனில் இனி கவனித்துப் பாருங்கள். வித்தியாசமாக ஏதேனும் ஒன்று இருக்கிறதென்றால் சற்று உங்கள் கவனத்தை குவித்துப் பார்த்தால் உண்மை புரியும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 29, 2022 | சனிக்கிழமை