‘HVR Deficiency’ வரும் முன் காப்போம்!

‘HVR Deficiency’ வரும் முன் காப்போம்!

ஆங்கிங்கெனாதபடி எங்கெங்கும் காணும் இடங்களிலெல்லாம் கண்களுக்கு எட்டிய தூரம் வரை நம்மில் பெரும்பாலானோருக்குள் ஒரு deficiency ஏற்பட்டுள்ளது. அது எல்லா தலைமுறையினரையும் எல்லா வயதினரையும் பாகுபாடின்றி ஆக்கிரமித்துள்ளது. யாராலும் மறுக்கவே முடியாது.

காதால் கேட்கும் தகவலாக இருந்தாலும் சரி, படித்துப் பார்க்கும் தகவலாக இருந்தாலும் சரி, பார்த்து புரிந்துகொள்ளும் காட்சியானாலும் சரி முழுமையாக கேட்கும் / படிக்கும் திறன் / பார்க்கும் திறன் குறைந்து வருவதே அந்த குறைபாடு.

காரணம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கணக்கற்றுக் கொட்டிக்கிடக்கும் தகவல்களாலும், நிமிடத்து நிமிடம் முளைக்கும் புதுப் புது செய்திகளாலும் எதையுமே முழுமையாக படிக்கும் / பார்க்கும் / கேட்கும் திறனை நம்மில் பெரும்பாலானோர் இழந்து வருவது கண்கூடு.

நம்மை நாமே உற்று நோக்கினாலும் அந்தக் குறைபாடு நமக்குள் இருக்கிறதா என கண்டுபிடிக்க முடியும்.

இதன் காரணமாய், நேரில் விரிவாக சொன்னாலும் புரிந்து கொள்வதில்லை. சுருக்கமாக சொன்னாலும் புரிந்துகொள்வதில்லை. எதுவுமே சொல்லாமல் சூசகமாக சொல்லியும் சொல்லாமலும் விட்டாலும் புரிந்துகொள்வதில்லை. அதற்காக அவர்கள் வருத்தப்படவும் செய்வதில்லை. இது ஒரு ஆபத்தான மனப்பாங்கு. எதிர்காலத்தில் (அந்தக் காலம் வெகுதூரத்தில் இல்லை) இந்த குறைபாட்டை (deficiency) வைத்தே பெரிய மனம் சம்மந்தப்பட்ட வியாதிகள் வரக்கூடும்.

வங்கி ஒன்றில் கடந்த ஒரு வார காலமாக ஒரே விஷயத்துக்காக 20 முறை போனிலும், ஐந்தாறு முறை நேரிலும் சென்று சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்ப சொல்லி சொல்லி அலுத்துப் போனபோதுதான் ஒரு விஷயம் புரிந்தது. வங்கியில் என்றல்ல, எல்லா இடங்களிலும் இதே கதைதான் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது.

ஏதோ வங்கியை குறை சொல்வதற்காக இந்த பதிவு என்று நினைக்க வேண்டாம். வங்கிகள், பள்ளிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்… இவ்வளவு ஏன் நாம் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட்  செக்யூரிட்டிகள் என எல்லோரிடமும் இதே கதைதான்.

மறந்து போச்சு… என்று சர்வ சாதாரணமாக அவர்கள் சொல்லும் காரணம் பின்னாளில் பூதாகரமான மனோ வியாதிக்கு வித்திடும் என்பது சர்வ நிச்சயம். ஏதோ பெரியவர்கள் மட்டும்தான் இப்படி மாறி வருகிறார்கள் என்று நினைக்காதீர்கள்.

குழந்தைகள், சிறுவர் சிறுமியர், இளைஞர்கள் என எல்லோரிடமும் கவனச் சிதறல் ஆழமாக வேரூன்றி வருகிறது. இதன் காரணமாய் உள்வாங்கிக்கொள்ளும் திறன் குறைவதுடன், தங்களுக்கு என்ன புரிகிறதோ அந்த டெம்ப்ளேட்டில் தாங்கள் படிக்கும்/பார்க்கும்/ கேட்கும் தகவல்களை  பொருத்திக்கொள்கிறார்கள். இது முன்னதைவிட ஆபத்தானது.

மருத்துவத்துறை  ‘HVR Deficiency’ (‘HearoVieworeado Deficiency’) என்ற நோய்க்கான விழிப்புணர்வை உண்டாக்கி அதற்கான தீர்வாக  நின்று நிதானித்து ஒரு நாளைக்கு இவ்வளவு செய்திகளை (மட்டும்)  உள்வாங்குங்கள் என்று மனோ தத்துவ மருத்துவர்கள் பரிந்துரைக்கக்கூடும். கூடவே சாப்பாட்டுக்கு முன், பின் இவ்வளவு மாத்திரைகள் என பட்டியலிடவும் கூடும்.

விளையாட்டுக்குச் சொல்லவில்லை. அந்த நிலை வருவதற்கு இன்னும் அதிக காலம் காத்திருக்க வேண்டியதில்லை. மிக அருகிலேயே எமனாக காத்திருக்கிறது.

அதற்குள் விழித்துக்கொள்வோம். நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வோம்!

குறிப்பு: HVR Deficiency என்றால் HearoVieworeado Deficiency. Hearing, Viewing, Reading deficiecy என்பதன் சுருக்கமே HearoVieworeado Deficiency. இதை கூகுள் செய்து தேடாதீர்கள். இனிவரப் போகும் நோயின் பெயராக நான் சூட்டிய பெயர்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

அக்டோபர் 27, 2022 | வியாழன் 

(Visited 2,004 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon