சரஸ்வதி கடாக்ஷத்துடன்!
அதென்ன, திடீரென கும்பகோணத்தில் இருந்து அடிக்கடி அழைப்புகள். தெரியவில்லை. ஆனால் கோயில் நகரத்தில் இருந்து வரும் அழைப்புகள் அத்தனையும் சரஸ்வதி கடாக்ஷத்துடன்தான் வருகின்றன.
‘இன்னென்ன புத்தகங்கள் தேவை’ என வாட்ஸ் அப்பில் பட்டியலிட்டிருந்தவருக்கு கொரியர் கட்டணத்துடன் என்ன விலை என தகவல் கொடுத்த ஐந்தாவது நிமிடம் அவரே அழைத்தார்.
பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதாக அறிமுகம் செய்துகொண்ட அந்தப் பெண்மணியிடம் ‘எங்கள் காம்கேர் எப்படி அறிமுகம்?’ என்று வழக்கமான கேள்வியை கேட்டேன்.
அவரது தாத்தா கும்பகோணத்தில் ஆடிட்டராக இருந்ததாகவும், அவரது அலுவலகத்தில் நாங்கள் தயாரித்த அக்கவுண்ட்டிங் சாஃப்ட்வேரை பயன்படுத்தி வந்ததாகவும் அங்கு நான் எழுதிய எக்ஸல், டேலி போன்ற ரெஃபரென்ஸ் நூல்களை பார்த்ததாகவும் கூறினார்.
தாத்தாவின் பெயர் என்ன, இப்போது எங்கிருக்கிறார் என்பது போன்ற கேள்விகளுக்கு காத்திராமல் அவரே தனது தாத்தாவின் பெயரையும் அவர் இறந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன என்ற தகவலையும் சொன்னார்.
இப்போது ஆர்டர் செய்திருக்கும் நூல்களை தனக்காகவும் தன் பள்ளி மாணவர்களுக்காகவும் பயன்படுத்தப் போவதாக கூறியவுடன் எனக்கு சந்தோஷமாக இருந்தது. பெருமிதமாக இருந்தது என்று சொன்னால் அது தற்பெருமை ஆகிவிடும் அல்லவா? அதனால் பெருமிதத்துக்கு பதில் சந்தோஷம் என்ற வார்த்தையை இட்டு நிரப்பினேன்.
தாத்தா, பேத்தி, பேத்தியின் மாணவர்கள் என தலைமுறை கடந்தும் எங்கள் காம்கேரின் தயாரிப்புகள் பயன்படுகின்றன என்பதை நினைக்கும் போது அந்த போன் அழைப்பும், பேசிய உரையாடல்களும் சரஸ்வதி கடாக்ஷத்தை அள்ளித்தருவதாக நினைத்து பெருமிதப்படுவதில் தவறில்லையே?
அனைவருக்கும் நன்றி!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 30, 2022 | ஞாயிற்றுக் கிழமை